under review

திருவரங்கக் கலம்பகம்

From Tamil Wiki

திருவரங்கக் கலம்பகம் ஶ்ரீரங்கத்தில் கோவில்கொண்ட ரங்கநாதப் பெருமாளின் மேல் இயற்றப்பட்ட கலம்பகம் என்னும் வகைமையச் சார்ந்த வைணவ சிற்றிலக்கியம். சமயம்சார் கலம்பகங்களில் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்

திருவரங்கக் கலம்பகத்தை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். அட்டப்பிரபந்தம் என அழைக்கப்படும் திருமாலைப் போற்றும் எட்டு சிற்றிலக்கிய நூல்களை இயற்றியவர். திருமலை நாயக்கரின் அவைப் புலவராக இருந்தார் எனக் கூறப்படுகிறது.

பதிப்பு

திருவரங்கச் கலம்பகம் ஓலைச் சுவடியில் இருந்து பெயர்த்து எழுதப்பட்டு வை.மு. சடகோபராமாநுஜாசாரியார் , சே . கிருஷ்ணமாசாரியார் , வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியார் ஆகியோரால் விரிவான உரை எழுதப்பட்டு 1914 -ல் வெளிவந்த அஷ்டப்பிரபந்தம் நூலில் உள்ள திருவரங்கக் கலம்பக உரையை முதன்மையாகக் கொண்டு எளிய உரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது . இந்நூலையன்றி , 1903-ம் ஆண்டில் மூலம் மட்டுமே அமைந்த பதிப்பு ஒன்று வெளிவந்துள்ளது . இதைப் பதிப்பித்தவர் திருநாராயணபுரம் கோவிந்தராஜ ஐயங்கார்.

1955-ல் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை குறிப்புரைகளுடன் பதிப்பித்துள்ள அஷ்டப்பிரபந்தம் குறிப்பிடத்தக்க பதிப்பாகும். அஷ்டப்பிரபந்தம் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் இயற்றிய 8 பிரபந்த இலக்கியங்களின் தொகுப்பாகும். அதில் முதன்மையாக திருவரங்கக் கலம்பகம் இடம் பெறுகிறது.

நூல் அமைப்பு

திருவரங்கக் கோயிலின் சிறப்பையும், அரங்கனின் பெருமையையும், அருளையும் பாடும் நூல் திருவரங்கக் கலம்பகம். பெரும்பன்மையான பாடல்கள் அகத்துறை சார்ந்து,. பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்அரங்கனைத் தலைவனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்து எழுதியவை. திருமாலின் அவதாரங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் 'மறந்தும் புறம் தொழா' இயல்பினர் என்பதால் திருமாலை உயர்த்தியும் சைவம், சமணம் முதலிய மதங்களைத் தாழ்த்தியும் எழுதப்பட்ட பாடல்கள் காணக் கிடைக்கின்றன.

திருவரங்கக் கலம்பகத்தில் சிறப்புப் பாயிரமாக இரு செய்யுள்களும், காப்பாக நான்கு செய்யுள்களும், பிற் சேர்க்கையாக ஒரு செய்யுளும், நூலாக 100 செய்யுள்களும், ஆக 107 செய்யுள்கள் உள்ளன. அம்மானை, இரங்கல், ஊசல், ஊர், களி, காலம், குறம், கைக்கிளை, சம்பிரதம், சித்து, தவம், தழை, நாரை, பாண், புயவகுப்பு, மடக்கு, மதங்கு, மறம், மேகம், வண்டு முதலிய உறுப்புகள் அமைய அகப் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடப்பட்டுள்ளது. ‘சீர்பூத்த செங்கமல' எனத் தொடங்கி , அந்தாதித் தொடைபெற்று இறுதிப்பாடலில் 'சீரியோரே' என முற்றுப்பெறுகிறது. திருவரங்கக் கலம்பகம் சொல் தொடர்நிலைச் செய்யுள் வகையைச் சார்ந்த நூலாகும்.

திருவரங்கக் கலம்பகத்தில் நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, மயங்கிசை கொச்சகக் கலிப்பா, கலிவிருத்தம், கலிநிலைத்துறை, கலித்தாழிசை, கலிநிலை வண்ணத்துறை, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை, தரவுகொச்சகக் கலிப்பா, குறளடி வஞ்சிப்பா, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், வியனிலை மருட்பா, வேற்றொலி வெண்டுறை, அறுசீர், எழுசீர், எண்சீர் ஆசிரிய சந்த விருத்தம், அறுசீர், எழுசீர், எண்சீர், பன்னிருசீர், பதினான்குசீர் ஆசிரிய விருத்தம், எண்சீர், நாற்பத்தெண்சீர் ஆசிரிய வண்ண விருத்தம் என்னும் பா, பாவின வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.

சிறப்புகள்

திருவரங்கக் கலம்பகத்தில் உயிரோட்டமாக இறையுணர்வும் இலக்கியச் சுவையும் நிறந்துள்ளன. ஆசிரியரின் கற்பனையாற்றலைப் புலப்படுத்தும் வகையில் உவமை , உருவகம் , சிலேடை , மடக்கு, தற்குறிப்பேற்றம் முதலிய பல்வேறு அணிநலன்களை கையாளப்பட்டுள்ளன. அஷ்டப்பிரபந்தங்களில் திருவரங்கக் கலம்பகம் பொருளமைதியிலும் யாப்பு முறையிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

பாடல் நடை

உயிர் எழுத்துக்களின் அகர வரிசையில் அமைந்த பாடல்

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !
ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே.

மறம்

கொற்றவன்தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூத
குறைஉடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்?
அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்
அவதரித்த திருக்குலம் என்றுஅறியாய் போலும்
மற்றதுதான் திருமுகமாய் ஆனால், அந்த
வாய்செவிகண் மூக்குஎங்கே? மன்னர் மன்னன்
பெற்றஇளவரசு ஆனால், ஆலின் கொம்பைப்
பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே

அந்தாதி

கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே! (பொருது - மோதி)
ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே!
அரவம் சுமப்பதும் ஓர் அஞ்சன மலையே! (அஞ்சனம் - கண் மை)
அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே!
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே!

உசாத்துணை

திருவரங்கக் கலம்பகம்-எளிய உரையுடன் முனைவர் சத்தியபாமா திருவரங்கக் கலம்பகத்தின் பாடுபொருள்


✅Finalised Page