மடக்கணி (மடக்கு அணி)
மடக்கு என்பது செய்யுளில் தொடை அமைக்கும் பாங்குகளில் ஒன்று. அணி வகையில் மடக்கணி எனவும் யாப்பு வகையில் யமகம் எனவும் பெயர் பெறும்.செய்யுளில் இடம்பெறும் சொற்களில் அடங்கியுள்ள எழுத்துக்கள் இடையிலே பிரிப்பு இல்லாமலும், அதே சொற்கள் இடையிலே பிரிக்கப் பெற்றும் வேறு வேறு பொருள்களைத் தருவது மடக்கு எனப்படும். இதன் இலக்கணத்தை தண்டியலங்காரம்
எழுத்தின் கூட்டம் இடை பிறிது இன்றியும்
பெயர்த்தும் பொருள்தரின் மடக்கு எனும் பெயர்த்தே
(தண்டியலங்காரம் - 92)
என வகுக்கிறது.
(பொருள்: செய்யுளில் இடம்பெறும் சொற்களில் அடங்கியுள்ள எழுத்துக்கள் இடையிலே பிரிப்பு இல்லாமலும், அதே சொற்கள் இடையிலே பிரிக்கப் பெற்றும் வேறு வேறு பொருள்களைத் தந்தால் அதற்கு மடக்கு என்று பெயர்).
மடக்கணியில் ஒரு பாடல் அடியில் உள்ள சில சீர்கள் அடுத்த அடியில் வரும்போது முன்னடியின் எதுகையும் மோனையும் ஒன்றாக வருவது யமகம். மோனை மாறி வர எதுகை மட்டும் ஒன்றாக அமைவது திரிபு அணி.
ஒரு பாடலின் ஒவ்வொரு அடியிலும் ஒரெ சொற்றொடர் பயின்று வருவதும் யமகம்.
எடுத்துக்காட்டுகள்
எடுத்துக்காட்டு-1
வண்டலம்புனல் ஆற்றின் மராமரம்
வண்டலம்புனல் ஆற்றில் மடிந்தன
விண்டலம்புகம் நீக்கிய வெண்மணல்
விண்டலம்புக நீள்மரம் வீழ்ந்ததே
(கம்பராமாயணம் -சுந்தர காண்டம் )
இப்பாடலில் வண்டலம் முதலிரண்டு அடிகளிலும், விண்டலம்புக கடைசி இரு அடிகளிலும் மடங்கி வந்துள்ளது. பிரித்து பொருள் கொள்ளும் போது
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்
வண்டல் அம்புனல் ஆற்றில் மடிந்தன
அனுமன் எறிந்த மரங்களுள் வண்டுகள் ஒலிக்கின்ற நல்ல பாதையில் உள்ள மராமரங்கள் வண்டல் படிந்த நீரையுடைய அழகிய ஆற்றில் விழுந்தன.
விண்டு அலம்பு கம் நீக்கிய வெண்மணல்
விண் தலம் புக நீள்மரம் வீழ்ந்ததே
உயரே தூக்கி எறிந்த மரங்கள் விண்ணில் புகுந்து அங்கு பாய்கின்ற நீர் சிதறி ஓடும்படி செய்து வெண்மையான ஆகாய கங்கையில் விழுந்தன.
அணிப்பொருத்தம்
வண்டலம்புனல் முதல் வரியில் வண்டு அலம்பு நல் எனவும் இரண்டாம் வரியில் வண்டல் அம்புனல் எனவும் பிரித்து பொருள் கொள்ளுமாறு அமைந்தது.
விண்டலம்பு முதல் வரியில் விண்டு அலம்பு எனவும் இரண்டாம் வரியில் விண்தலம் புக எனவும் பிரித்து பொருள் கொள்ளுமாறு அமைந்தது.
எடுத்துக்காட்டு-2
வண்ணம் கரியனென்றும் வாய்வேத நாரியென்றும்
கண்ணன் இவனென்றும் கருதாமல் -மண்ணை
அடிப்பது மத்தாலே அளந்தானை ஆய்ச்சி
அடிப்பது மத்தாலே அழ!
(காளமேகப் புலவர்)
பொருள்: கார் வண்னனென்றும், வேதம் மணக்கும் வாயை உடைய கண்ணன் என்று அறியாமல் தன் தாமரைப் பாதங்களால் ( அடி பதுமத்தாலே) மூவுலகும் அளந்தவனென்று அறியாமல் அவன் அழ அழ மத்தாலே யசோதை அடித்தாள்.
அணிப்பொருத்தம்
மூன்றாம் அடி- அடி பதுமத்தாலே (தன் காலின் அடிப்பகுதியால்) மூவுலகை அளந்தவனை
நான்காம் அடி- அடிப்பது மத்தாலே (மத்தால் ஆய்ச்சி அடித்தாள்)
மூன்றாமடியிலுள்ள அடிப்பது மத்தாலே என்பது காலின் அடிப்பகுதியையும் நான்காமடியிலுள்ள அடிப்பது மத்தாலே என்பது தயிர்கடையும் மத்தால் அடிப்பதையும் குறிக்கிறது. ஆக இருவேறு பொருளைக்கொண்ட ஒரே சொற்றொடர் என்பதால் மடக்கணியாயிற்று.
எடுத்துக்காட்டு-3
அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அந்தாதியில் அனைத்துப் பாடல்களும் யமகச் செய்யுள்களால் ஆனவை
திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.
- முதலடி- திருவாவினன் குடி-பழனி
- இரண்டாம் அடி- திரு+வாவி+நன்குடி (சிறந்த வாவிகள் (ஊற்றுகள்0 சூழ்ந்த நல்ல ஊர்)
- மூன்றாம் அடி -திருவாவிநன்குடி-பழனி
- நான்காம் அடி-திரு+ஆவி+நன்குடி -(நல்ல மக்கள் வாழும் ஊர்)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Jan-2023, 06:37:02 IST