கந்தர் அந்தாதி
கந்தர் அந்தாதி(கந்தரந்தாதி) அருணகிரிநாதர் முருகக் கடவுளைப் போற்றி எழுதிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம். முழுவதும் யமகச் செய்யுள்களால் ஆனது.
ஆசிரியர்
கந்தர் அந்தாதியை இயற்றியவர் அருணகிரிநாதர்.
தொன்மம்
பாரதம் பாடிய வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரின் சமகாலத்தவர். வில்லிப்புத்தூரார் தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஏற்பட்ட வாதத்தில் ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்று ஒரு தொன்மக் கதை கூறுகிறது. அருணகிரியார் பாடப்பாட ஒவ்வொரு பாடலுக்கும் வில்லிபுத்தூரார் உரை கூறி வந்தார் என்றும் ‘திதத்த’ எனத் தொடங்கும் 54-வது செய்யுளுக்கு வில்லிபுத்தூராரால் உரை கூற இயலாததால் அருணகிரிநாதரே அந்தப் பாடலுக்கு மட்டும் உரை கூறினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர். வில்லிபுத்தார் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும் எனஅறிவுறுத்திஅவர் கையிலிருந்த குறடை எறியச் செய்ததால் ‘கருணைக் கருணகிரி’ என்னும் சொல்வழக்கு எழுந்தது.
காப்புச் செய்யுள்களால் இந்நூல் திருவண்ணாமலையில் பாடப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
நூல் அமைப்பு
கந்தர் அந்தாதி விநாயகர், முருகன் துதிகளாக அமைந்த இரு காப்புப் பாடல்களைத் தவிர அந்தாதித் தொடையில் அமைந்த 100 பாடல்களைக் கொண்டது. 'திருவாவினன்குடி' எனத் தொடங்கி 10-வது பாடலில் 'திருவடிக்கே' என மண்டலித்து முடிகிறது. நூறு பாடல்களும் மடக்கணியின் ஒரு வகையான யமகத்தில் அமைந்தவை. ஒவ்வொரு அடியிலும் முதல் சொற்றொடர் ஒன்றாகவும், பிரித்தோ, பிரிக்காமலோ பொருள் வேறாகவும் அமைந்துள்ளன.
நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது.
பாடல் நடை
திருவாவினன்குடி
திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.
- முதலடி- திரு+ஆவி+நன்குடி +பங்காளர் -திருமகளுக்கு உயிரான திருமாலும், தேவியை பாகம் கொண்ட சிவனும்
- இரண்டாம் அடி- சதிர்+ உவாவிநன்+குடி பெருமைடைய இளையவன் முருகன் உறையும்
- மூன்றாம் அடி -திருவாவிநன்குடி-பழனி
- நான்காம் அடி-அதிர்+உவா+இனன்குடி -அதிரும்(முழங்கும்) யானை இனங்களைக் கொண்ட பழமுதிர்ச்சோலை
54-வது பாடல்
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே. (54)
முருகன் சீரடிக்கே
சிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்
சிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்
சிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்
சிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே.
உசாத்துணை
- கந்தர் அந்தாதி-வைரத்தமிழ்
- கந்தரந்தாதி மூலமும் அவர்காலத்திற்றானேயதற்கு வில்லிபுத்தூரார்செய்தவுரையும், ஆர்கைவ் வலைத்தளம்
- கந்தர் அந்தாதி, திருமூலர் திரு அருள் மொழி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2024, 19:39:36 IST