under review

அந்தாதித் தொடை

From Tamil Wiki

ஒரு செய்யுளின் அடியின் ஈற்றில்(இறுதியில்) அமையும் சீர், அசை அல்லது எழுத்து, அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதித் தொடை எனப்படும். இது யாப்பியலில் ஒரு தொடை வகை. ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி. இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே அசையந்தாதி, சீரந்தாதி, அடியந்தாதி.

அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெற்றால், அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமைந்தால் அதுவும் அந்தாதித் தொடையே. அது அந்தாதி இலக்கிய நூல் வகையை சேர்ந்தாகும்.

எடுத்துக்காட்டு

வேங்கையஞ் சார லோங்கிய மாதவி
விரிமலர்ப் பொதும்பர் நெல்லியன் முகமதி
திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே

மேல் உள்ள பாடலில் எழுத்தந்தாதித் தொடை அமைந்துள்ளது. முதலடியின் இறுதியெழுத்தான "வி" இரண்டாம் அடியின் முதலில் வருகிறது, இரண்டாம் அடியின் இறுதி எழுத்து மூன்றாம் அடியின் முதலில் வருகிறது, மூன்றாம் அடியின் இறுதி எழுத்து மீண்டும் முதலடியின் முதலில் வருகிறது.

அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே

மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் வந்துள்ளன.

  • முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
  • இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
  • மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
  • நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
  • ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
  • ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
  • ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
  • எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

இதர இணைப்புகள்

உசாத்துணை

  • தொல்காப்பியம் பொருளதிகாரம் - இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2006 (முதற்பதிப்பு 2005)


✅Finalised Page