under review

மணவாள மாமுனி

From Tamil Wiki
மணவாள மாமுனிகள், ஆழ்வார்திருநகரி

மணவாள மாமுனிகள்(அழகிய மணவாளன், 1370-1450) வைணவ ஆசாரியார். தென்கலை மரபின் முக்கியமான ஆசாரியர்களுள் ஒருவர். உபதேச ரத்தின மாலையை இயற்றியவர். ராமானுஜருக்குப்பின் திருவரங்கக் கோயிலின் செயல்பாட்டை நெறிப்படுத்தியவர். வைணவத்தின் ஓராண் வழி ஆசார்யர்கள் வரிசையில் இறுதியானவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மணவாள மாமுனிகளின் இயற்பெயர் அழகிய மணவாளன். பொயு. 1370- ம் ஆண்டு ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரிக்கருகில் சிக்கில் கிடாரம் என்ற ஊரில் திகழக்கிடந்தான் திருநாவீறுடையபிரான், ஸ்ரீரங்க நாச்சியார் இணையருக்குப் பிறந்தார்.

ஆழ்வார்கள், ஆசாரியார்களில் சிலர் திருமாலின் ஆயுதம், வாகனம் போன்ற ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை. அதன்படி மணவாள மாமுனிகள் ஆதிசேஷனின் அவதாரமாகவும், ராமானுஜரின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்.

அழகிய மணவாளர் தமிழ், வடமொழி மற்றும் வேத, வேதாந்தங்கள், நாலாயிர திவ்யப் பிரபந்தம் இவற்றைத் தன்னுடைய தந்தையிடமும் தாத்தாவிடமும் கற்றார். 16 வயதில் மணம் புரிந்தார். மகன்கள் எம்மையன் ராமானுஜன், பெரியாழ்வார் ஐயன்.

ஆன்மிக வாழ்க்கை

மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையின் பெருமையைக் கேட்டு அவரிடம் வந்து பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு அவரை ஆசார்யராக ஏற்றார். திருவாய்மொழிப் பிள்ளையிடம் ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், உரைகள், முக்கியமாக நம்பிள்ளையின் திருவாய்மொழியின் முப்பத்தாறாயிரப்படி ஈடு (வடக்கு திருவீதிப் பிள்ளை ஏடு படுத்தியது) போன்றவற்றைக் கற்றார். திருவாய்மொழிப்பிள்ளயின் காலம் வரையில் ஆழ்வார் திருநகரியிலேயே வசித்தார். திருவாய்மொழிப்பிள்ளை தாம் திருக்குருகூரில் இராமாநுஜருக்கு எடுப்பித்த கோயிலின் நிர்வாகத்தையும் தம் சீடராகிய இவரிடம் ஒப்படைத்தார்.

திருவாய்மொழிப் பிள்ளை மணவாள மாமுனிகளை, ஶ்ரீபாஷ்யத்தை மட்டும் ஒருமுறைகேட்டுவிட்டு, வடமொழி நூல்கள்மேல் கவனம் செலுத்தாமல் ஆழ்வார்களின் பிரபந்தங்களை மக்களிடையே பரப்பி, திருவரங்கம் பெரிய கோயிலில் நித்திய வாசம் செய்யும்படி பணித்தார். ஆசாரியரின் ஆணையை நிறைவேற்றிய மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளை காலத்திற்குப் பின் திருவரங்கம் வந்தடைந்து, அங்கேயே தங்கி வைணவ நூல்களைத் தேடிச் சேகரித்து ஏடுபடுத்தி பாதுகாத்தார்.படையெடுப்பால் சிதிலமடைந்திருந்த பகுதிகளை சீரமைத்து இராமானுசருக்கு பிறகு பெரிய கோயிலின் நிர்வாகத்தை சீரமைத்தார். திருவேங்கடம்(திருப்பதி), காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் , ஶ்ரீபெரும்புதூர், திருக்கடிகை போன்ற தலங்களில் சென்று மங்களாசாசனம் செய்தார். திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயருக்கு துணையாய் திருவேங்கடம் கோயில் சிறிய கேள்வி அப்பன் எனும் ஒரு ஜீயரை நிர்வாகத்துக்காக நியமித்தார், திருவெஃகாவில் கிடாம்பி நாயனாரிடம் ஸ்ரீபாஷ்ய உபதேசம் கேட்டார்.

தொன்மம்

திருவரங்கத்தில் கோவில் கொண்ட நம்பெருமாளே ஒருமுறை பவித்ரோத்ஸவம் பூர்த்தியான பின், மணவாள மாமுனிகளை திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தை காலட்சேபமாக சொல்லச் சொல்லி தனது பரிவாரங்களுடன் ஒரு வருட காலம் எல்லா உற்சவங்களை நிறுத்திக் கேட்டதாகத் தொன்மம் கூறுகிறது. காலட்சேபத்தின் முடிவில் (ஆனி மாதம் திருமூல நட்சத்திரத்தன்று) பெருமாள் சிறுபிள்ளை வடிவில் வந்து மணவாள மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு "ஸ்ரீசைலேச தயாபாத்ரம்" என்ற தனியனைச் சமர்ப்பித்து தன்னுடைய படுக்கையான ஆதிசேஷனை மணவாள மாமுனிகளுக்கு பரிசாக அளித்ததாகக் கூறப்படுகிறது. அர்ச்சகர் மூலமாக பெருமாள் ஆவேசித்து மணவாள மாமுனிகளின் திருவுருவம் அனைத்து திவ்யதேசங்களிலும் ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்றும், 'ஸ்ரீசைலேச தயாபாத்ரம்' என்ற தனியனை வைண சேவாகாலம் (பிரபந்த ஓதுதல்) தொடக்கத்திலும், முடிவிலும் சேவிக்க வேண்டும் என்று வாக்குக் கூறியதாகவும் தொன்மம் கூறுகிறது.. இதனால் எம்பெருமானுக்கே குருவாகும் சிறப்புப் பெற்றவர் மணவாள மாமுனிகள் எனப்படுகிறது.

மணவாள மாமுனிகள் ஆதிசேஷனின் அவதாரம் என்பதற்காக இரு நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன:

  • மணவாள மாமுனிகளின் புத்திக் கூர்மையைக் கண்டு வியந்த கிடாம்பி நாயனார் இவரை, இவரின் உண்மையான உருவத்தைக் காட்டும் படி பணிக்க, தனது ஆதிசேஷ உருவத்தை அவருக்குக் காட்டினார்.
  • மணவாள மாமுனிகளின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் இவரது மடத்திற்குத் தீ வைக்க, ஒரு பாம்பின் உருக்கொண்டு மடத்தை விட்டு வெளியேறி வந்து நின்று மாளிகை எரிவதைக் கண்டார்.
  • சடகோபக் கொற்றி என்னும் அவரது மாணவி ஒரு பகல் பொழுதில் மணவாள மாமுனிகள் உறங்கிக் கொண்டிருந்த அறையின் சாவி துவாரம் வழியாக பார்த்தபோது அவர் ஆதிசேஷன் உருவில் இருந்ததைக் கண்டார்.

இலக்கிய வாழ்க்கை

மணவாள மாமுனிகள் ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு, முக்கியமாக பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த முமுக்ஷூப்படி, ஸ்ரீவசன பூஷணம், தத்வத்ரயம் ஆகியவற்றிற்கு உரை எழுதினார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இயற்றிய ஆசார்ய ஹ்ருதயம் என்ற நூலுக்கும் விரிவான உரை எழுதினார்.

பெரியாழ்வார் திருமொழிக்கு பெரியவாச்சான் பிள்ளையின் உரையின் ஒரு பகுதி கறையானால் அரிக்கப்பட்டு சேதமாகி விட்டதால், விடுபட்ட வரிகளுக்கு மணவாள மாமுனிகள் உரை எழுதிச் சேர்த்தார். மேலும் ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு, முக்கியமாக பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த முமுக்ஷூப்படி, ஸ்ரீவசன பூஷணம், தத்வத்ரயம் ஆகியவற்றிற்கு உரை எழுதினார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இயற்றிய ஆசார்ய ஹ்ருதயம் என்ற நூலுக்கும் விரிவான உரை எழுதினார்.

திருவாய்மொழியின் சொற்களையும் பொருளையும் தொகுத்துச் சுருங்க அளிக்கும்படி சிலர் விண்ணப்பித்ததன்பேரில் திருவாய்மொழி நூற்றந்தாதி என்னும் அந்தாதி நூலை எழுதினார். இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதியில் திருவாய்மொழியின் ஒரு பதிகத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களே பாசுரத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களாய் வைத்து, முதல் இரண்டு வரிகளில் பதிகத்தின் பொருளையும் அடுத்த இரண்டு வரிகளில் நம்மாழ்வாரின் சிறப்பையும் கூறி திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு பாடலை எழுதினார்.

ஆழ்வார்கள் பிறந்த நாள், இடம், திருவாய்மொழியின் ஏற்றம், திருவாய்மொழி உரைகள், உரையாசிரியர்கள் பற்றிய விவரங்கள், பிள்ளை லோகாசாரியாரின் பெருமை, சீர் வசனபூஷணத்தின் ஏற்றம், குரு பக்தி போன்றவற்றை பேசுபொருளாகக் கொண்ட உபதேச ரத்தின மாலையை இயற்றினார்.

ராமானுஜரைப் போற்றி 'யதிராஜ விம்சதி' நூலை இயற்றினார். திருமங்கையாழ்வார் அழகைக் குறித்த 'வடிவழகு' என்ற சூர்ணிகையைப் இயற்றினார்.

மாணவர்கள்

தமிழகத்தில் வைணவத்தைப் பரப்பும் பொருட்டு மணவாள மாமுனிகள் வானமாமலை ஜீயர் உள்ளிட்ட ஜீயர் பொறுப்புகளையும், அஷ்டதிக் கஜங்களையும் (எட்டுப்பேர் அடங்கிய குழு) உருவாக்கினார்.

  • வானமாமலை ஜீயர்
  • பட்டர் பிரான் ஜீயர்
  • திருவேங்கிடராமனுஜ ஜீயர்
  • கோயில் அண்ணன் ஜீயர்
  • பிரதிவாதி பயங்கரம் ஜீயர்
  • எறும்பியப்பா
  • அப்பிள்ளை
  • அப்பிள்ளார்.

மறைவு

மணவாள மாமுனிகள் தன் ஆசாரிய திருவடியை அடைந்த நாள் டிசம்பர் 16, 1444 (மாசி , கிருஷ்ணபக்ஷ துவாதசி, திருவோணம், ஞாயிற்றுக்கிழமை). ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை மணவாள மாமுனிகளின் திருவத்யயன உற்சவமாக(ஸ்ரார்த்த உற்சவம்) தெற்கு உத்தர வீதியில் உள்ள ஸ்ரீமணவாளமாமுனிகள் சன்னதியில் நடைபெறுகிறது.

வேறு பெயர்கள்

  • யதீந்திரப்பிரவணர்
  • திருமலை தந்த பெருமாள்
  • முப்பத்தாறாயிரப் பெருக்கர்
  • செளமிய ஜாமாத்ரு யோகிந்தரர்
  • காந்தேபாயந்தர்
  • வரவரமுனி
  • வரயோகி
  • இராமானுசன் பொன்னடி
  • ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ரர்
  • அழகிய மணவாள ஜீயர்
  • பெரிய ஜீயர்
  • துப்பில் குலமுடையார்தாசர்
  • சடகோபஜீயர் திருக்குமாரர்
  • சீயர் நாயனார் (இராமானுசய்யன்).

வாழி திருநாமம்

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

நூல் பட்டியல்

  • திருவாய்மொழி நூற்றந்தாதி
  • உபதேச ரத்தின மாலை
  • ஈட்டுக்கு பிரமாணத்திரட்டு
  • தத்துவத் திரயத்திற்குப் பிரமாணத்திரட்டு
  • பூர்வசனபூஷணபிரமாணத்திரட்டு
  • ஆர்த்திப்பிரபந்தம்
  • தேவ ராசமங்களம்
  • எதிராச விம்சதி
  • திருவாராதானக் கிரமம்
  • இயல் சாத்து
உரைகள்
  • தத்துவத்திரயம்
  • இரகசியத்திரயம்
  • பூர்வசனபூஷணம்
  • ஆசாரிய ஹிருதயம்
  • ஞானசாரம்
  • பிரமேயசாரம்
  • சப்தகாதை
  • ஏழு பாட்டு
  • பெரியாழ்வார் திருமொழி (401 பாசுரங்கள்)
  • இராமானுச நூற்றந்தாதி

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Dec-2024, 20:25:02 IST