under review

உபதேச ரத்தின மாலை

From Tamil Wiki

உபதேச ரத்தின மாலை(பொ.யு. 15-ம் நூற்றாண்டு) வைணவ ஆசாரியரான மணவாள மாமுனிகள் இயற்றிய நூல். ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆசாரியர்களின் வாழ்க்கை, இயற்றிய நூல்கள், உரைகள் மற்றும் நெறிகளைக் கூறும் நூல்.

ஆசிரியர்

உபதேச ரத்தின மாலையை இயற்றியவர் மணவாள மாமுனிகள். திருவாய்மொழிப்பிள்ளையின் மாணவர். இவர் இயற்றிய பிற நூல்கள் 'திருவாய்மொழி நூற்றந்தாதி', 'ஆர்த்திப் பிரபந்தம்'.

நூல் அமைப்பு

உபதேச ரத்தின மாலை 73 பாசுரங்களைக் கொண்டது.

வைணவ அடியார்களான பன்னிரு ஆழ்வார்கள் பிறப்பு விவரம், அவர்கள் இயற்றிய பிரபந்தங்கள், பிரபந்தங்களுக்கு உரையெழுதிய ஆசிரியர்கள், பிள்ளை லோகாசாரியாரின் சிறப்பு, அவர் இடற்றிய 'ஶ்ரீவசனபூஷணம்' என்ற நூலின் சிறப்புகள், உரையாசிரியர்கள், குரு-சிஷ்ய உறவு, மற்ரும் நெறிமுறைகள் பாடப்பட்டுள்ளன. கோயில் கந்தாடை அண்ணன் இயற்றிய முகப்பு பாயிரம்(தனியன்), எறும்பியப்பா இயற்றிய மணவாள மாமுனிகள் பெருமையையும் சேர்த்து 75 பாடல்களைக் கொண்டது.

நவமணிகளைப்போன்ற உபதேசங்களால் கோர்க்கப்பட்ட மாலை போன்ற நூல் என்பதால் 'உபதேச ரத்தின மாலை' எனப் பெயர் பெற்றது. ஆழ்வார்களைப் பற்றிய பாசுரங்கள், மதுரகவி ஆழ்வார் மற்றும் ராமானுஜர் பற்றிய பாடல்கள், பிற்கால ஆசாரியர்களைப் பற்றிய பாடல்கள் என மூன்று பகுதிகளாக அமைந்தது.

திருவாய்மொழி உரைகள் பற்றிய பல விவரங்கள் 'ஈட்டின் வழி' என்ற பகுதியில் கிடைக்கின்றன.

பாடல் வரிசை
  • திருவாய்மொழி பிள்ளையின் பெருமை(1)
  • நூலை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள்(1)
  • ஆழ்வார்கள் பெருமை(1)
  • ஆழ்வார்களின் வரிசை(1)
  • முதலாழ்வார்கள்(2)
  • திருமங்கையாழ்வார்(2)
  • திருப்பாணாழ்வார்(1)
  • தொண்டரடிப்பொடியாழ்வார்(1)
  • திருமழிசை ஆழ்வார்(1)
  • குலசேகர ஆழ்வார்(1)
  • மதுரகவி ஆழ்வார்(2)
  • பெரியாழ்வார்(5)
  • ஆண்டாள்(4)
  • ராமானுஜர்(3)
  • ஆழ்வார்கள் அவதரித்த ஊர்கள் (4)
  • திவ்யப் பிரபந்த உரைகள்(2)
  • நாதமுனிகள் முதலிய ஆசார்யர்கள்(1)
  • திருவாய்மொழியின் உரையாசிரியர்கள்(2)
  • திருவாய்மொழி உரைகள்- ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, இருபத்தி நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி, பன்னீராயிரப்படி(5)
  • பெரியவாச்சான் பிள்ளை(1)
  • மற்ற உரையாசிரியர்கள்(1)
  • ஈடுமுப்பத்தாறாயிரப்படி வந்த வழிமுறை(1)
  • நம்' என்ற அடைமொழி பெற்றவர்கள்(1)
  • நம்பிள்ளை லோகாசாரியர் என்ற நாமம் பெற்றவிவரம்(1)
  • வடக்குத்திருவீதிப்பிள்ளை தம் திருக்குமரார்க்கு ஆசார்யர் திருநாமம் இடல்(1)
  • ராமானுஜருக்கு பின்னான வைணவத்தின் நிலை(1)
  • பிள்ளை லோகாசாரியார் பெருமை(2)
  • ஶ்ரீவசன பூஷணத்தின் பெருமை(7)
  • குரு சிஷ்யன் இருவரின் தன்மை(8)
  • உபதேசங்கள்(5)
  • நூற்பயன்(1)
  • மணவாள மாமுனிகள் பெருமை(1)

சிறப்புகள்

ராமானுஜர் நியமித்த எழுபத்திநான்கு சிம்மாசனாதிபதிகளைக் குறிக்கும் முகமாக 74 பாசுரங்கள் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மணவாளமாமுனிகள் 73 பாசுரங்களை இயற்றி முடித்தபோது, எறும்பியப்பா "மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன்" எனத் தொடங்கும் பாசுரத்தை பாடி, இந்தப்பாசுரம் உபதேசரத்தினமாலையோடு சேர்ந்தே பாட வேண்டும் என வேண்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக வைணவ ஆலயங்களில் அநத்யயன காலத்தில் (கார்த்திகை மாத கார்த்திகை முதல் தை ஹஸ்தம் வரை) திருப்பாவைக்கு பதில் உபதேச ரத்தின மாலை ஓதப்படுகிறது. பெருமாள் திருவீதி புறப்பாட்டின்போதும், திருமலையில் திருவாதிரையன்றும் இதன் பாசுரங்களை சேவிக்கும் வழக்கம் உண்டு. ஆழ்வார்களின் திருநட்சத்திரத்தன்று அவர்களைக் குறித்த உபதேச ரத்தின மாலைப் பாடல்களை( நாள் பாட்டு) பாடும் வழக்கமும் உண்டு.

இந்நூலின் பெருமைபற்றி, "இத்திவ்வியப்பிரபந்தத்தின் அமைப்பினழகு நிகரற்றது. அமுதொழுகுகின்ற தமிழினி்ல் விளம்பிய சீர்மை சொலப்புகில் வாயமுதம் பரக்கும்" என்று காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் குறிப்பிடுகிறார்.

பாடல் நடை

ஆண்டாள்

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
வன்றோவிங் காண்டா ளவதரித்தாள்- குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்
தாழ்வார் திருமகளா ராய். (22)

திருவாய்மொழி உரையாசிரியர்கள்

பிள்ளான்நஞ் சீயர் பெரியவாச் சான்பிள்ளை
தெள்ளார் வடக்குத் திருவீதிப் - பிள்ளை
மணவாள யோகிதிரு வாய்மொழியைக் காத்த
குணவாள ரென்றுநெஞ்சே கூறு. (39)

'நம்' என்ற அடைமொழி பெற்றவர்கள்

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
யென்பர் அவரவர்த மேற்றத்தால்- அன்புடையோர்
சாத்துதிரு நாமங்கள் தானென்று நன்னெஞ்சே
ஏத்ததனைச் சொல்லிநீ யின்று. (50)

ஆசார்யன் ஆருயிரைப் பேணுபவன்

ஆசாரி யன்சிச்ச னாருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர்வடிவை- ஆசையுடன்
நோக்கு மவனென்னும் நுண்ணறிவைக் கேட்டுவைத்தும்
ஆர்க்குமந்நேர் நிற்கையரி தாம். (65)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-May-2025, 10:18:42 IST