under review

மதுரகவியாழ்வார்

From Tamil Wiki
மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார் (பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டு) வைணவ நெறியைப் பின்பற்றி தமிழில் பாசுரங்கள் பாடிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். நம்மாழ்வாரைக் கண்டு உலகிற்கு அறிவித்தவர். திருமாலைப் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே 'தேவு மற்றறியேன்' என்று பாடி வைணவத்தின் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றான ஆசார்ய பக்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். நம்மாழ்வாரின் தலைமை மாணவராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தி, பரப்பி,பாராயணத்திற்கான நெறிமுறைகளை வகுத்தார்.

பிறப்பு, இளமை

பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூரில் சாம வேதம் ஓதும் அந்தண குலத்தில் ஈஸ்வர வருடம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார்.

ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
உற்றதெமக்கென்று நெஞ்சே ஓர்
                    (உபதேச ரத்தின மாலை, மணவாள மாமுனிகள்)

ஆழ்வார்களில் சிலர் திருமாலின் ஆயுதம், வாகனம் போன்ற ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை. இதன்படிமதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான கருடனின் அம்சமாகப் பிறந்தார்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைவிட சிறிது மூத்தவர் என்பதால் அவர் நம்மாழ்வார் பிறந்த பொ.யு. 798-க்குச் சற்று முன் பிறந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அவரது காலம் 9-ம் நூற்றாண்டு என சாமி சிதம்பரம், மு.சி. பூர்ணலிங்கம் பிள்ளை, மா.ராசமாணிக்கனார் ஆகியோரும் கருதுகின்றனர்.

ஆழ்வார்களில் சிலர் திருமாலின் ஆயுதம், வாகனம் போன்ற ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை. இதன்படி மதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான கருடனின் அம்சமாகப் பிறந்தார். வேதசாஸ்திரங்களையும், இதிகாச புராணங்களையும் கற்றுத் தேர்ந்தார். இளமையிலேயே திருமால் மேல் பக்தியுடையவராகி, உலகப் பற்றுகளைத் துறந்தார்.

அயோத்தி, வடமதுரை, மாயை, காசி, காஞ்சி அவந்தி, துவாரகை என்னும் ஏழு திருத்தலங்களுக்குச் சென்று புண்ணிய நீராடி, பெருமாளை தரிசிக்க பயணம் மேற்கொண்டார்.

நம்மாழ்வாரை குருவாக ஏற்றல்-குருபரம்பரைக் கதை

மதுரகவியாழ்வார் தன் வடநாட்டுத் தல யாத்திரையின் போது அயோத்தியில் ஒரிரவு ஒரு பேரொளியைக் கண்டு, அடுத்த தினங்களிலும் அவ்வொளி தெரியவே அதை நோக்கி தென்திசையில் சென்றார். கடைசியாக அந்த ஒளி, திருக்குருகூரில் மறைந்தது. அங்கு நம்மாழ்வார், ஒரு புளிய மரத்தடியில், யோக நிலையில் இருப்பதைக் கண்டு மதுரகவியாழ்வார் நம்மாழ்வர்க்கு உயிர் இருக்கிறதா என்று சோதிக்க அவர் மேல் ஓர் கல்லை எறிந்தார். நம்மாழ்வார் முதன்முறையாக கண் திறந்து பார்த்தார். நம்மாழ்வாரால் பேச முடியுமா என்று பரிசோதிக்க மதுரகவியாழ்வார்

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்'? என்று கேட்டார்

( செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், உயிரில்லாத உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?)

அதற்கு நம்மாழ்வார், அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்று பதிலுரைத்தார்..

(அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப, துன்பங்களை அனுபவித்தபடி, அங்கேயே இருக்கும்.)

இந்த பதிலின் மூலம் நம்மாழ்வாரின் ஞானத்தை உணர்ந்த மதுரகவியாழ்வார் தன்னை விட வயதில் சிறியவரான நம்மாழ்வாரைத் தன் குருவாக ஏற்று, அவரது சேவையில் காலம் கழித்தார். நம்மாழ்வார் பாசுரங்களைச் சொல்லச் சொல்ல அவற்றை ஓலைப் படுத்தினார்.

நம்மாழ்வாரின் மறைவிற்குப்பின்
நம்மாழ்வார்- ஆழ்வார் திருநகரி

நம்மாழ்வார் தனது 32-ம் வயதில் காலமான பின்பு மதுரகவியாழ்வார் ஆழ்வார் திருநகரி ஆதிநாத பிரான் கோவிலில் நம்மாழ்வாரின் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்து செய்து திருமண்டபத்தையும், மதில்களையும், விமானத்தையும் ஏற்படுத்தினார். இங்கு கோவில் கொண்ட ஆதிநாதப் பெருமாளின் கருவறை விமானத்தை காட்டிலும், நம்மாழ்வாரின் கருவறை விமானமே அளவில் சற்று பெரியதாகும். மதுரகவியாழ்வார் நம்மாழ்வாருக்கான பூஜை முறைகளையும்திருவிழாக்களையும் வகுத்தார். நம்மாழ்வாரின் திரு உருவத்திற்கு மாலைகள் சூட்டி வழிபாடுகள் செய்து, திருவிழாக்களையும் ஏற்படுத்திக் கொண்டாடினார். திருவிழாக்களின் போது தேரில் அத்தெய்வ உருவை எழுந்தருளச் செய்து, வீதிகள் தோறும் வலம் வரச் செய்தார். அடியார்களுடன் முன்னே

நம்மாழ்வார் வந்தார்; நற்குணச் சீலர் வந்தார்; தமிழில் வேதம் பாடிய பெருமான் வந்தார்;திருக்குருகூர் நம்பி வந்தார், திருவாய்மொழி ஈந்த அருளாளர் வந்தார்,திருவழுதி வளநாடர் வந்தார்; வகுளாபரணர் வந்தார்; காரி மாறர் வந்தார், சடகோபர் வந்தார்; பராங்குசர் வந்தார்; பவனிநாதர் வந்தார்

என்று விருது (சிறப்புகள்) கூறியவாறே சென்றார். மதுரகவியாழ்வார் பல ஊர்களுக்கு சென்று நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பாடி அவற்றை மக்களிடையே பரப்பினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவர்கள் நம்மாழ்வாரை சங்கப் பலகை ஏற்காமல் அவருக்கு விருது கூறுவதற்குத் தடை விதித்தனர். திருவாய்மொழியிலிருந்து

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே!

என்ற இரு அடிகளை மட்டும் சங்கப் பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்ற, சங்கப்பலகை அதை ஏற்றுக்கொண்டது என குருபரம்பரைக் கதை கூறுகிறது. கம்பரின் சடகோபர் அந்தாதியும் இதைக் குறிப்பிடுகிறது.

பாசுரங்கள்

பார்க்க: கண்ணிநுண் சிறுத்தாம்பு

மதுரகவியாழ்வார் தன்னுடைய பாசுரங்களில் திருமாலைத் தெய்வமாகப் பாடாது, தன் குருவான நம்மாழ்வாரை தெய்வமாகப் பாடினார்.

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே

( யசோதைப் பிராட்டி முடிச்சுகள் நிறைந்த,மெல்லிய, சிறிய கயிற்றினால் தன்னைக் கட்டும்படி அமைத்துக்கொண்ட கண்ணனின் நாமத்தையும் சொல்லாமல் திருக்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால் என் நாவில் அமுது ஊறுகிறது)

எனத் தொடங்கி ஆழ்வார் திருநகரியில் கோவில்கொண்ட நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்து 11 பாசுரங்கள் கொண்ட 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' பதிகத்தைப் பாடினார்.

வேதத்தின் சாரமாக திருவாய்மொழியை உரைத்த நம்மாழ்வாரின் அருள் கீதை அருளிய கண்ணனின் அருளை விடப் பெரியது என ஆசார்யனை இறைவனை விடப் பெரியவராக எண்ணினார்.

மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் எட்டெழுத்தின் நடுவிலுள்ள 'நமோ' என்ற பதம் அமைந்ததைப்போல முதலாயிரத்தின் நடுவில் 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' அமைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.வைணவ ஆலயங்களில் திருப்பல்லாண்டில் தொடங்கி ஆழ்வார் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆழ்வார் திருநகரியில் மட்டும் 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' தொடங்கி பின் மற்ற பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.

சிறப்புகள்

மதுரகவியாழ்வாரின் பாசுரங்கள் ஆச்சார்ய பக்திக்கு எடுத்துக்காட்டாகும். பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் "மற்றைய ஆழ்வார்கள் எம்பெருமானை அடைந்து அனுபவிப்பது எப்போது என்று ஏங்கும் ஸமயத்தில் துன்பத்துடனும், அவனை மானஸீகமாக அனுபவிக்கும் பாக்யம் கிடைத்த ஸமயத்தில் இன்பத்துடனும் பேசி உள்ளார்கள். ஆனால் மதுரகவி ஆழ்வாரோ, தன் ஆசார்யனான நம்மாழ்வாரே எல்லாம் என்று இருந்து, ஆசார்ய கைங்கர்யத்திலேயே திளைத்து இருந்ததால், எப்பொழுதும் இவ்வுலகிலேயே இன்பத்துடன் இருந்து, அதையே பேசி அனுபவித்து, மற்றவர்களுக்கும் உபதேசித்தார். இப்பெருமை வேறு எவருக்கும் இல்லை.நம்முடைய ஸ்வரூபம் என்னவென்றால் ஆசார்யனின் க்ருபையை எதிர்நோக்கி இருப்பது. இதற்குச் சேர்ந்தது இவ்வாழ்வாரின் நிலையே." என்று மதுரகவியாழ்வாரின் ஆசார்ய பக்தியைப் போற்றுகிறார். இராமானுச நூற்றந்தாதியில் திருவரங்கத்தமுதனார் மதுரகவியாழ்வாரை 'பெரியவர்' என சிறப்பிக்கிறார். நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமான் ஆலயத்தில் மதுரகவியாழ்வார் சன்னதி உள்ளது.பழைய மரபில் ஆழ்வார்கள் பத்துபேர் என்றே வழங்கப்பட்டு வந்தது. மதுரகவியாழ்வாரும் ((திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரை மட்டும் பாடியதால்), ஆண்டாளும் (பெண் என்பதால்) ஆழ்வார்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. பின்பு இருவரும் ஆழ்வார்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

வாழி திருநாமம்

சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே
உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

உசாத்துணை

வெண்சங்கம்-மதுரகவியாழ்வார் வரலாறு கண்ணிநுண் சிறுத்தாம்பு-விளக்கம் வைணவ குரு பரம்பரை-மதுரகவி ஆழ்வார் திருவருள்-மதுரகவி ஆழ்வார் தேசமே தெய்வம்-ஆழ்வார்கள்


✅Finalised Page