under review

தொல்காப்பியம்

From Tamil Wiki
தொல்காப்பியம் - ஓலைச்சுவடி
மழவை மகாலிங்கையர் பதிப்பு
ஆறுமுகநாவலர் பதிப்பு

தொல்காப்பியம் தமிழில் கிடைத்துள்ள காலத்தால் முற்பட்ட இலக்கண நூல். இது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களையும் 1,610 நூற்பாக்களையும் உடையது. இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இவர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்கியுள்ளார். பொருளதிகாரத்தில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வின் இயல்புகளை வரையறை செய்துள்ளார். தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இது..

முதல்முழுப்பதிப்பு சாமுவேல் பிள்ளை

ஆசிரியர்

தொல்காப்பியம் நூலுக்கு பானம்பாரனார் எழுதிய சிறப்புப்பாயிரத்தில் இந்த நூலை எழுதியவர் தொல்காப்பியர் என்றும், இந்த இலக்கண நூல் 'நிலந்தரு திருவிற் பாண்டியன்’ அவையில், அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்காப்பியர் நூல்கள் பலவற்றையும் ஆய்ந்து வழக்கு, செய்யுள் ஆகிய இரண்டையும் தழுவி நூல் செய்தார் என்றும் அவருக்கு 'ஐந்திரம்’ என்ற வடமொழி இலக்கண நூலில் சிறந்த பயிற்சி உண்டு என்றும் பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார். இவற்றைத் தவிர தொல்காப்பியரைப் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தின் காலம், தொல்காப்பியர் வரலாறு ஆகியவற்றைப் பற்றி புறவயமான சான்றுகள் ஏதுமில்லை.

தொல்காப்பியம் காலம்

தொல்காப்பியரின் காலம் பொமு 5000 முதல் பொயு 6-ம் நூற்றாண்டு வரை வெவ்வேறு அறிஞர்களால் கணிக்கப்படுகிறது. பொதுவாக சங்ககாலத்தின் தொடக்கத்தில் பொமு 2-ம் நூற்றாண்டு முதல் பொயு ஒன்றாம் நூற்றாண்டுக்குள் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கலாம் என்பதே வரலாற்றுச் சான்றுகளுடன் இசைந்து போகும் ஊகம்.

பார்க்க தொல்காப்பியர் காலம்

உரைகள்

தொல்காப்பியத்துக்கு நமக்குக் கிடைக்கும் உரைகளில் நூல்முழுமைக்கும் எழுதப்பட்ட இளம்பூரணர் எழுதியது. அவரைத் தொடர்ந்து சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், பேராசிரியர், கல்லாடர் எனப் பலரும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதி உள்ளனர்.

பதிப்பு

தொல்காப்பியம் 1948ல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன் முதல் முதலாக ஏட்டில் இருந்து அச்சுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளன (பார்க்க தொல்காப்பிய பதிப்புகள்)

நூல் அமைப்பு

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களை உடையது.

எழுத்ததிகாரம்

நூல் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்கள் உள்ளன.இதில் தமிழ் எழுத்துகள், அவற்றை ஒலிக்கும் முறை, அவற்றின் வரிவடிவம் ஆகியன கூறப்பட்டுள்ளன.. நிலைமொழி - வருமொழி இணையும் முறை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லதிகாரம்

கிளவியாக்கம், வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு, பெயரியல், வினை இயல், இடையியல், உரியியல், எச்சவியல் என்னும் ஒன்பது இயல்கள் கொண்டது. திணைப்பாகுபாடும் பால்பாகுபாடும் இதில் பேசப்பட்டுள்ளது. தமிழ்த் தொடர்களின் அமைப்புமுறை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

பொருளதிகாரம்

அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்கள் கொண்டது. அகம், புறம்; களவு, கற்பு போன்ற தமிழ்ப் பண்பாட்டில் நிலவும் தனிச்சிறப்பான கூறுகளை முன்வைத்து அவற்றுக்குரிய இலக்கணத்தைத் வரையறுத்துள்ளது. செய்யுள் இயற்றும் முறையையும் பா வகைகளையும் எட்டு வகையான மெய்ப்பாடுகளையும் விளக்குகிறது. உயிரினப் பாகுபாடும் இக்கால அறிவியல் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. இலக்கிய வகைமைகளையும் படைப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய 27 உத்திகளையும் கூறுகிறது

மொழிபெயர்ப்பு

தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு - 1937
  • பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாஸ்திரி ( டாக்டர் P. S. சுப்பிரமணிய சாஸ்திரி) 1937-ல் தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் டிசம்பர் 22, 2021-ல் தொல்காப்பியத்தை இந்தி மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

{பாக்க தொல்காப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் )

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Dec-2022, 12:30:19 IST