under review

இனியவை நாற்பது

From Tamil Wiki

To read the article in English: Iniyavai Narpathu. ‎


இனியவை நாற்பது சங்கம் மருவிய காலத்தை சேர்ந்த தொகுதியான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இந்நூல் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனாரால் இயற்றப்பட்டது. கடவுள் வாழ்த்தும் நாற்பது பாடல்களும் கொண்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் 'இனியவை நாற்பது' என்று பெயர். சிற்றிலக்கியங்களில் நானாற்பது (நாற்பது) என்னும் வகையை சேர்ந்தது.

கால நிர்ணயம்

இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். இவர் தந்தையார் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் தமிழாசிரியர்.

இனியவை நாற்பதின் காலம் குறித்துத் தமிழ் அறிஞர்களிடையே வெவ்வேறு கருத்துக்கள் இருந்திருக்கின்றன. கா.சுப்பிரமணியப் பிள்ளை (1930), பாலூர் கண்ணப்ப முதலியார் (1962) இருவரும் கி.பி. 5--ம் நூற்றாண்டு எனத் தெரிவித்துள்ளனர். "கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும் நான்கு நூல்களும் கடைச்சங்கத்தார் காலத்தில் இயற்றப் பெற்றனவே."[1]

எஸ். வையாபுரிப் பிள்ளை (1949) சில காரணங்களைக் கூறி கி.பி. 9--ம் நூற்றாண்டு என முன்வைக்கின்றார். இந்நூல் பற்றிய முதல் குறிப்பு வீரசோழியத்தில் இடம்பெறுகிறது. பூதஞ்சேந்தனார் செய்த இனியவை நாற்பதின் காலம் கி.பி. 825 என *History of Tamil Language and literature என்னும் ஆங்கில நூலில் வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகிறார். மேலும், 1949-ம் ஆண்டு அவர் பதிப்பித்த இனியவை நாற்பதின் முன்னுரையில் இதனுடைய காலத்தை விரிவாக ஆராய்கின்றார். சங்கங்கள் பற்றிய கருத்து, ஆசிரியர் பெயர் ஒற்றுமை, பாடவேறுபாட்டைப் பிற இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் ஒப்பிடுதல், பனுவலில் இடம்பெறும் மக்களின் வாழ்வியல் கூறுகளோடு ஒப்பிடுதல் எனப் பல கூறுகளை ஆரய்ந்து தக்க சான்றுகளின் அடிப்படையில் இதன் காலத்தைக் கி.பி. 9 என்று அவர் வரையறுக்கிறார்.

சங்கங்கள்

கி.பி.5--ம் நுற்றாண்டு வச்சிரநந்தியின் திரமிள சங்கம் இயங்கியது. கி.பி. 950 சிந்தாமணி இயற்றப்பட்ட காலத்தில் மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கம் இருந்தது. கி.பி. 5-க்கும் கி.பி. 10--ம் நூற்றாண்டிற்கும் இடையில் பல சங்கங்கள் இருந்தன. ஆக கடைச்சங்க நூல் என்பதன் அடைப்படையில் இதனைக் கி.பி. 5--ம் நூற்றாண்டு எனத் தீர்மானிக்க இயலாது என்கிறார் வையாபுரிப் பிள்ளை.

ஆசிரியர் பெயர் ஒற்றுமை

திரிகடுகத்தின் காலம் கி.பி. 9--ம் நூற்றாண்டு. ஓர் ஏட்டுப்பிரதியில் திரிகடுகத்தின் ஆசிரியர் மதுரை ஆசிரியர் மகனார் கணிமேதாவியார் என்று குறிப்பு உள்ளது. இனியவை நாற்பதின் ஆசிரியரும் மதுரை ஆசிரியர் மகனார் என அடைமொழியோடு வழங்கப்படுவதால் இது கி.பி. 8-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியாக இருக்கலாம்.

பாடபேதம்

இனியவை நாற்பதில் பாடல் 40-ல் பேராசை என்பதற்குப் பொலிசை என்னும் பாடம் உள்ளது. ஓர் ஏட்டுப்பிரதியின் பழைய உரையில் பொலிசை என்னும் சொல்லுக்குப் பாடபேதம் இல்லாததால் இதுவே மூல பாடமாக இருத்தல் வேண்டும் என நிறுவுகிறார். மேலும், இச்சொல் சீவகசிந்தாமணியிலேதான் முதன் முதலில் பதிவாகியுள்ளது. புறப்பொருள் வெண்பாமாலையில் பொலிசை என்பதன் வேற்று வடிவமாகிய பலிசை என்பது வழங்குவதால் அந்நூல் தோன்றிய காலத்திலே இதுவும் தோன்றியிருக்க வேண்டும் என்று நிறுவுகிறார்.

கல்வெட்டு (சாஸன வழக்கு)

இராஜராஜ தேவர்க்கு 29-வது ஆண்டில் கி.பி. 1009 தோன்றிய சாஸனத்தில் (S.I.I.II.பக்.70) காசு ஒன்றுக்கு 'ஆட்டை வட்டன் முக்குறுணி நெல்லுப் பொலிசையாக’ என வருகிறது. இதற்கு 125 ஆண்டிற்கு முன் வாழ்ந்த வரகுணமகாராஜாவின் சாஸனத்தில் (கி.பி. 875) பொலிசை என்பதன் முன் வடிவமாக பொலியூட்டு எனப் பல இடங்களிலும் சுட்டப்பட்டுள்ளன. (Epigraphia Indica XXI, No.17, 7-10) கி.பி.9-க்கு முன் பொலிசை என்னும் சொல் இலக்கியத்திலும் சாஸனத்திலும் இடம் பெற்றதாகத் தெரியவில்லை எனத் தனது முன்னுரையில் வையாபுரிப் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சொல்லின் அடிப்படையில் காலநிர்ணயம் செய்வதில் ஐயம் தோன்றலாம், அந்தச் சொல் பதிவுசெய்யப்பெற்ற படைப்பிற்கு முன் மக்களிடம் வழங்கியிருக்க வாய்ப்பு உண்டு. சமூகத்தில் மறு உற்பத்தியின் வளர்ச்சியே வாழ்க்கையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. மக்களின் பயன்பாட்டுத் தேவையில் இருந்தே சொற்களும் தோன்றுகின்றன. அவ்வாறும் புதிய புதிய வளர்ச்சி, அதற்கான சொற்களையும் உருவாக்கிக்கொண்டே செல்லும் அது மிகுதியான அரசு ஆவணம் சார்ந்து புழங்குகிறபோது இலக்கியகளிலும் கல்வெட்டு / சாசனங்களிலும் பதிவு பெறுவது இயல்பானது. அவ்வகையில் அச்சொல் தோன்றி இலக்கியப் பயன்பாட்டிலும் சாசன வழக்கிலும் காணப்படுகின்ற காலத்தின் அடிப்படையில் பேராசிரியார் இந்நூலின் காலத்தினை உறுதி செய்துள்ளார். இச்சொல் எந்த அச்சுப்பதிப்பிலும் இடம்பெறவில்லை. பழைய ஏட்டுச்சுவடியில் இருப்பதாக வையாபுரிப்பிள்ளை தம் முன்னுரையில் எழுதியுள்ளார். உ.வே.சா. நூலகத்தில் உள்ள இனியவை நாற்பது சுவடி ஒன்றில் பொலிசை என்னும் பாடம் உள்ளது. உ.வே.சா. நூலகத்தில் உள்ள கையெழுத்துப் பிரதியிலும் பொலிசை என்னும் பாடமே உள்ளது.

பிரம்ம தேவர் வழிபாடு

பிரம்ம தேவர் வணக்கம் பிற்கால சாளுக்கியர் காலத்தில் வழக்கில் இருந்தது. இதன் காலம் கி.பி. 973 முதல் கி.பி. 1138 வரை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் இவ்வணக்கம் கி.பி. 9--ம் நூற்றாண்டில் வழக்கிற்கு வந்தது. இந்நூலின் முதல் பாடல் பிரம்ம தேவ வணக்கம் பற்றிக் குறிப்பிடுவதால் இதன் காலம் கி.பி. 9--ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தோன்றியதாகக் கொள்ளலாம் எனத் தனது சான்றுகளை முன்வைக்கின்றார்.

மேற்குறித்த சான்றுகளின் அடிப்படையில் இதனுடைய காலத்தைக் கி.பி. 9--ம் நூற்றாண்டு எனவையாபுரிப் பிள்ளை தீர்மானிக்கின்றார்[2].

நூல் அமைப்பு

நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பவை. நாநூறு,நாற்பது என நூல்களை தொகுப்பது சமணர்களின் வழிமுறை. அவ்வகையில் அவர்களால் பொதுவான பேசுமுறை, பொதுவான கருத்துநிலை ஆகியவற்றுடன் நிலையான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட நூல்கள் இவை. இன்னா நாற்பது துன்பம் தரும் நிகழ்ச்சிகளையும் இனியவை நாற்பது இன்பம் தரும் செயல்களையும் தொகுத்து உரைப்பவை. நூலுக்கு முதலில் வரும் கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன.

இனியவை நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஆசிரியர் கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண்பா.

இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன (1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் பாடலுக்கு மூன்று இனிய பொருள்களையே கூறுகின்றன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

எடுத்துக்காட்டு

சுற்றத்தார்க்கு கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தல் மிக நன்று; சிறிய அளவில் என்றாலும், தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் பாடல்:

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதேமிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதேஎள்துணை யானும் இரவாது தான்ஈதல்எத்துணையும் ஆற்ற இனிது.

இது போல் இந்நூலில் 124 இனியவை கூறப்படுகின்றன.

தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.

அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே;குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே;உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப்பெருமைபோல் பீடு உடையது இல்.

உரைகள்

இந்நூலின் உரையைப் பொறுத்தவரை பழையவுரை மற்றும் அச்சுப்பதிப்பாக மாறிய காலத்தில் தோன்றிய உரை என இரண்டு நிலைகளில் இருக்கின்றன.

அச்சுப்பதிப்பில் நான்கு வகையான உரைகள் காணப்படுகின்றன. அவை பாடலுக்கான பதவுரை, கருத்துரை, விருத்தியுரை மற்றும் பழையவுரை ஆகியனவாகும்.

 • 1903--ம் ஆண்டின் பதிப்பில் தமிழ்ப் பண்டிதர் ஸ்ரீ உப.வே.வை.மு.சடகோபராமாநுஜாசாரிய ஸ்வாமிகள் அனுப்பி உதவியுள்ளார்’ என்னும் குறிப்பு உள்ளது. எஸ்.வையாபுரிப் பிள்ளை பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பழையவுரையும் 1903-ம் பதிப்பில் உள்ள உரையும் ஒன்றாகக் காணப்படுவதால் 1903--ம் ஆண்டின் பதிப்பு, பழைய உரையாகக் கொள்ள இடம் உள்ளது.
 • 1909--ம் ஆண்டு வந்த இராமசாமி நாயுடுவின் விருத்தியுரையும் 1928--ம் ஆண்டு வந்த கா.ர.கோ. உரையும் ஒரே அமைப்பில் உள்ளன. இவ்விரண்டு பதிப்புகளிலும் உரையின் அமைப்பு, பாடல் அதனைத் தொடர்ந்து பதவுரை, கருத்துரை, மற்றும் விசேடவுரை (விருத்தியுரை) ஆகிய மூன்று பகுதிகளும் காணப்படுகின்றன.
 • 1922--ம் ஆண்டு வெளிவந்த வா.மகாதேவ முதலியார் பதிப்பில், ’கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க உரை எழுதியுள்ளேன்’ என முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். பாடலைத் தொடந்து பதவுரை காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மேற்கோளுடன் கூடிய ஒப்புமை பகுதிகளும் விளக்கங்களும் இருக்கின்றன.
 • 1949--ம் ஆண்டு வெளிவந்த எஸ்.வையாபுரிப் பிள்ளை பதிப்பில் பழைய உரையும் விளக்க உரையும் இடம்பெற்றுள்ளன. 18--ம் பாடல், அடிக்குறிப்பில் ’இச்செய்யுளுக்குப் பழைய உரை காணப்படவில்லை. ’இங்கு கொடுத்திருப்பது பதிப்பாளர் எழுதிய புத்துரை.’ (ச.வை.1949, ப.10) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய உரைக்குக் கீழ் விளக்கவுரையும் தனிப்பகுதியாக ஆராய்ச்சிக்குறிப்பினையும் கொடுத்துள்ளார்.

பதிப்புகள்

தொல்காப்பியம் (1847) முதலில் அச்சுப் பதிப்பிற்கு வருவதற்கு 3 ஆண்டுகள் முன்னரே இனியவை நாற்பது அச்சிடப்பட்டுள்ளது.

 • 1845 - மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் அருளிச்செய்த இனியா நாற்பது முகவை இராமாநுச கவிராயரால் பதிப்பிக்கப்பட்டது.இப்பதிப்பை அச்சுப்பதிப்பில் காலத்தால் பழமையானதாக சொல்லலாம். (முகப்பு பக்கத்தில் சங்கச்செய்யுள் என்று அச்சிடப்பட்டுள்ளது.) "குளத்தூர் சின்னையா முதலியார் உரை செய்து தருக என கேட்க அப்பாச்சியையரால் பதவுரை செய்து முகவை இராமாநு சகவிராயர் அவர்களால் பரிசோதிக்கப்பட்டது" என முகப்புப்பக்கத்தில் குறிப்பு உள்ளது.
 • 1863 - மூலமும் உரையுடன் இராயவேலூர் ஆறுமுக முதலியார் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. இது முதற்பதிப்பு வெளிவந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகே அடுத்த பதிப்பு வந்தது.
 • 1903 - பூதஞ்சேந்தனார் அருளிச் செய்த இனியது நாற்பது மூலமும் உரையும் பதி. ரா. இராகவையங்கார் செந்தமிழ் பிரசுரம் தமிழ்ச்சங்கம், முத்திராசாலைப் பதிப்பு மதுரை. - சேதுஸமஸ்தான வித்வான் ரா.இராகவையங்கார் அவர்களால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக கொண்டுவரப்பட்டது.
 • 1904 -தி.ச.ஆறுமுக நயினார் அவர்களால் நீதி இலக்கியத் தொகுதியாக வெளிவருகிறது. அதில் இனியவை நாற்பது, மூலபாடமாக பதிப்பிக்கப்பட்டது.
 • 1909 - பூதஞ்சேந்தனார் செய்த இனிது நாற்பது மூலமும் மஹாவித்வான் கா.இராமசாமி நாயுடு அவர்களால் இயற்றப்பட்ட விருத்தியுரையும் தஞ்சை எஸ்.குமாரசுவாமிப்பிள்ளை மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டன. விலை அணா 2.
 • 1922 - இனியவை நாற்பது உரை வா. மகாதேவ முதலியார், கழக வெளியீடு. சென்னை., 1925,1927, 1945,1948, 1950, 1955, 1960, 1965, 1975 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பாக வந்துள்ளன.
 • 1928 - நான்காம் பதிப்பு மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. முதல் இரண்டு பதிப்பும் எந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்டன என்னும் குறிப்பு கிடைக்கவில்லை. நான்காம் பதிப்பை மட்டுமே கிடைக்கிறது.
 • 1949 - இனியவை நாற்பது ச.வையாபுரிப்பிள்ளை கழகம். சென்னை - எஸ்.வையாபுரிபிள்ளை அவர்களால் இனியவை நாற்பதிற்கு சுவடிகள் பார்த்து பரிசோதிக்கப்பட்டு செம்பதிப்பாக ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தின் மூலம் வெளிவருக்கிறது
 • 1967 - நானாற்பது மூலமும் உரையும் -கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது. உரை. ந.மு. வேங்கடசாமி நாட்டார், கழகம் சென்னை

இதர இணைப்புகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

 1. ஆ.வேலுப்பிள்ளை தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்
 2. Tamil Mozhi info: இனியவை நாற்பது பதிப்பு வரலாறு . 1844 - 1949, ஆய்வாளர் கோ.சதீஸ்


✅Finalised Page