under review

கார் நாற்பது

From Tamil Wiki

To read the article in English: Kar Narpathu. ‎

கார் நாற்பது
கார் நாற்பது

கார் நாற்பது சங்கம் மருவிய காலத்தை சேர்ந்த தொகுதியான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனாரால் இயற்றப்பட்டது. அகப்பொருள் சார்ந்த இந்நூல் தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் தலைவியின் ஏக்கத்தைக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகிறது. சிற்றிலக்கியங்களில் நானாற்பது (நாற்பது) என்னும் வகையை சேர்ந்தது. அதில் இது காலம் பற்றிய தொகை நூல் வகைமையை சேர்ந்தது[1].

நூல் அமைப்பு

நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பவை. நாநூறு,நாற்பது என நூல்களை தொகுப்பது சமணர்களின் வழிமுறை. அவ்வகையில் அவர்களால் பொதுவான பேசுமுறை, பொதுவான கருத்துநிலை ஆகியவற்றுடன் நிலையான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட நூல்கள் இவை.

அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுவதாலும், நாற்பது செய்யுட்களை கொண்ட நூல் என்பதாலும் கார் நாற்பது.

வேள்வித் தீ (பாடல் 7), கார்த்திகை நாளில் ஏற்றப்படும் விளக்கு (பாடல் 26) போன்ற அக்காலத்தில் நிகழ்ந்த பண்பாட்டு நிகழ்வுகளும், கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து கார் நாற்பதில் கூறப்படுகிறது.

எடுத்துக்காட்டு

கார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழாவின்போது மக்கள் ஏற்றி வைத்துள்ள விளக்குகளைப் போல, வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாகத் தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக மழை வந்துள்ளது என்னும் பொருளில் வரும் பாடல்:

நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை

"தளர்ந்த இயல்பினையுடையவளே! தம்மை விரும்பியடைந்தவர்களுக்கு ஈதலும், பகைவரை அழித்தலும் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற தலைவரை, மாற்றமில்லா புகழையுடைய வேள்வித்தீயைப் போல மின்னும் மழை வானமானது கொண்டு வரும்" என்னும் பாடல்:

நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்,
தற் செய்வான் சென்றார்த் தரூஉம், - தளரியலாய்!-
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல
எச் சாரும் மின்னும், மழை.

இதர இணைப்புகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. காலம், இடம், பொருள், கருதி, நாற்பான்
    சால உரைத்தல் நானாற்பதுவே

    என இலக்கண விளக்கப் பாட்டியலார் காலம் பற்றிய நாற்பது பாடலால் ஆகிய இந் நூலை சுட்டியுள்ளார்


✅Finalised Page