under review

நான்மணிக்கடிகை

From Tamil Wiki
நான்மணிக்கடிகை

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக்கடிகை. நீதி நூலான இதனை இயற்றியவர் விளம்பிநாகனார். இந்நூலில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூற்றியிரண்டு பாடல்கள் உள்ளன கடவுள் வாழ்த்தில் திருமாலின் பெருமை கூறப்பட்டுள்ளதால் இது வைணவம் சார்ந்த புலவரால் இயற்றப்பட்ட நூலாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளைக் கொண்டது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் நூறு பாடல்களைக் கொண்ட நூல்கள் நான்கு மட்டுமே. அவை, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை ஆகியனவாகும். இவற்றில் தலைசிறந்த நீதிகளைக் கூறும் முதன்மையான நூலாக நான்மணிக்கடிகை கருதப்படுகிறது.

நான்மணிக்கடிகையின் சிறப்பு

மனித வாழ்விற்குத் தேவையான அறநெறிகள் பலவற்றைக் கொண்ட நூல் இது. ஒவ்வொரு பாடலிலும் மணியான நான்கு கருத்துகள் இடம் பெற்றிருப்பதால் இந்நூல் 'நான்மணிக்கடிகை’ என்று அழைக்கப்படுகிறது. கடிகை என்பதற்கு 'துண்டம்’ என்ற பொருள் உண்டு. அவ்வகையில் 'நான்கு ரத்தினத் துண்டங்கள்’ என்ற பொருளில் 'நான்மணிக்கடிகை’ என்ற பெயர் வந்ததாக, ஆய்வாளர், பேராசிரியர் வே.இரா.மாதவன் குறித்துள்ளார்.

நேரிசை, இன்னிசை, அளவியல் வெண்பாக்களால் ஆன இந்நூலில் மூன்று பஃறொடை வெண்பாக்களும் இடம் பெற்றுள்ளன. 'மதி என்னும் மாயவன்' என்ற கடவுள் வாழ்த்தும், 'கற்ப, கழிமடம் அஃகும்' (27), 'இனிது உண்பான் என்பான்' (58), என்ற செய்யுட்களும் பஃறொடை வெண்பாக்களால் ஆனவை. தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது இந்நூல். திருக்குறள், சிலப்பதிகாரக் கருத்துக்கள் பலவும் இந்நூலில் காணக்கிடைக்கின்றன.

பாடல்களும் விளக்கமும்

நான்மணிக்கடிகை பாடல்களின் மூலம் அக்காலத்து மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கை, வாழ்வியல் முறை எனப் பல்வேறு செய்திகள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

எள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேற்பட - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து (பாடல் - 1)

விளக்கம் : எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே.

மிகச் சிறந்த பொருளாக இருந்தாலும் தகுதியற்றவர்களிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ளாதே.

செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே.

சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும் கூறிவிடாதே

கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்

ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்

நல்லாள் பிறக்குங் குடி (பாடல் - 4)

விளக்கம் : கள்ளிச்செடியில் அகில் பிறக்கும்.

மானின் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும்.

பெரிய கடலினுள் விலை உயர்ந்த முத்துக்கள் பிறக்கும்.

அதுபோல நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியை யாராலும் அறிய முடியாது.

கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி

சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று

அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்

பொருளிற் பிறந்து விடும். (பாடல்-5)

விளக்கம் : ஒளியுள்ள உயர்ந்த மணிகள் எல்லாம் மலையில் உண்டாகும்.

காதலியின் இனிய சொற்கள் மகிழ்வைத் தரும்

மென்மையான அருளுள்ளம் கொண்டவர்களிடமிர்ந்து அறநெறி உண்டாகும்.

இவை எல்லா இன்பமும் செல்வத்தினால் உண்டாகிவிடும்.

கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று

உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென

அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்

வெகுண்டார்முன் தோன்றா கெடும் (பாடல்- 8)

விளக்கம் : தான் இழந்தவற்றிற்காக வருந்துதல் கற்றுணர்ந்த பெரியோர்களுக்கு இல்லை.

சிறந்த நிலையை அடைய ஊக்கத்துடன் செயல்படுபவரிடம் அந்த நிலையை இன்னமும் அடையவில்லையே என்ற முயற்சித் துன்பம் இல்லை.

தீயனவற்றைச் செய்பவர்களிடம் அறத்தின் நல்லியல்பு உண்டாவதில்லை

கோபம் கொள்பவர் முன் எல்லா நன்மைகளும் புலப்படாமல் போகும்.

நல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்

செல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை - அல்லாக்

கடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத்

துடையார்க்கும் எவ்வூரு மூர் (பாடல் - 81)

விளக்கம் : நல்வழியில் நடக்கும் கற்றாருக்கு தம் ஊர் என்று தனித்த ஓர் ஊரில்லை. அவர்களுக்கு எல்லா ஊர்களும் தம் ஊரே.

நன்னெறிச் செல்லும் தவமுடையாருக்கும் எவ்வூரும் தம் ஊரே.

அல்லாத வழிச் செல்லும் கீழ்மக்கட்கும் எவ்வூரும் தம் ஊரே

தம் கையிற் பொருளுடையாருக்கும் எவ்வூரும் தம் ஊர் தான்.

மனைக்கு விளக்கம் மடவாள்

மடவாளுக்கு விளக்கம் புதல்வர்

புதல்வர்க்கு விளக்கம் கல்வி

கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு (பாடல் - 101)

விளக்கம் : வீட்டுக்கு ஒளி மனைவி.

மனைவிக்கு அழகு நன்மக்கள்.

நன்மக்களுக்குப் பெருமை கல்வி

கல்விக்குச் சிறப்பு மெய்யுணர்வு.

ஒருவன் அறிவானும் எல்லாம் யாது ஒன்றும்

ஒருவன் அறியா தவனும் ஒருவன்

குணன் அடங்கக் குற்றம் உளானும் ஒருவன்

கணன் அடங்கக் கற்றானும் இல். (பாடல் - 102)

விளக்கம் : எல்லாம் அறிந்தவன் என்று யாரும் இல்லை

ஒன்றுமே அறியாதவன் என்றும் யாரும் இல்லை.

குணமற்ற குற்றங்கள் மட்டுமே உடைய ஒருவன் என்றும் யாரும் இல்லை

அறியாமை சிறிதும் இல்லாமல் கற்றறிந்தவனும் இல்லை.

நான்மணிக்கடிகையின் பாடல் வரிகள்

நான்மணிக்கடிகையில் பழமொழிகளைப் போன்ற சிந்திக்கத் தூண்டும் பாடல்வரிகள் இடம்பெற்றுள்ளன.

  • அகம்பொதித்த தீமை மனம் பிறக்கும்
  • அஞ்சாமை அஞ்சுக
  • அருளில் பிறக்கும் அறநெறி
  • அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா
  • அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்
  • ஆசாரம் என்பது கல்வி
  • இளமைப்பருவத்துக் கல்லாமை குற்றம்
  • இல்லாமை வேண்டின் இரவு எழுக
  • இன்மையின் இன்னாதது இல்லை
  • ஈன்றாளோடுஎண்ணக் கடவுளும் இல்
  • உலகிற்கு அணிஅன்னர் அன்புடைய மக்கள்
  • உள்ளம் குழைபட வாழார் உரவோர்
  • எல்லா இடத்தும் கொலை தீது
  • எள்ளற்க என்றும் எளியர் என்று
  • கண்ணில் சிறந்த உறுப்பு இல்லை
  • கல்லில் பிறக்கும் கதிர்மணி
  • கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்ற்றலின் வாய்த்த பிற இல்லை
  • கொண்டானிற் சிறந்த கேளிர்பிறர்இல்
  • கோல் நோக்கி வாழும் குடியெல்லாம்
  • தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
  • யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி
  • மடிமை கெடுவார் கண் நிற்கும்
  • வெல்வது வேண்டின் வெகுளி விடல்
  • வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்

நான்மணிக்கடிகை பாடல்களின் மூலம் அக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.

உசாத்துணை


✅Finalised Page