ஏலாதி
ஏலாதி, சங்கம் மருவிய காலத்து தொகுப்பு நூலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஏலாதியின் ஆசிரியர் கணி மேதாவியார்.
பெயர்க் காரணம்
ஏலாதி ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்களும் ஒரு குறிப்பிட்ட அளவோடு சேர்க்கப்பட்ட ஒரு வகை சூர்ணமாகும். இது உடலுக்கு வலிமை, பொலிவு, தெம்பு ஆகியவற்றைத் தரவல்லது. அதுபோல இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துகளும் மக்களின் அறியாமை நோயை நீக்கி அறத்தை சொல்பவை. அதனால் இந்நூலுக்கு ஏலாதி என்ற பெயர் வந்தது. மருந்துப் பெயர் பெற்ற கீழ்க்கணக்கு நூல்கள் மூன்றில் இது மூன்றாவதாகும். மற்ற இரு நூல்கள் சிறுபஞ்சமூலம், திரிகடுகம்.
ஆசிரியர் குறிப்பு
ஏலாதியை இயற்றியவர் ஆசிரியர் கணி மேதாவியார். இவரைக் கணி மேதையார் என்றும் அழைப்பர். கணித மேதை என்னும் தொடரினைக் கொண்டு சோதிடத்தில் வல்லவர் என்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமாலை நூற்றைம்பதினை இயற்றியவரும் இவரே. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரின் காலம் நான்காம் நூற்றாண்டு.
நூலின் அமைப்பு
ஏலாதி 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் ஆகிய இரு பாடல்களும் இதில் அடங்கும். இந்நூல் 'மகடூஉ முன்னிலை’ அமைப்பைக் கொண்டது. அதாவது, ஒரு பெண்ணை விளித்து, அவளுக்கு ஒரு கருத்தைக் கூறுகிற வகையில் பாடலை அமைப்பது. 1, 2, 6, 7, 13, 21, 28, 29, 31, 32, 33, 56, 76 ஆகிய எண்களைக் கொண்ட செய்யுள்களில் இந்த விளியைக் காணலாம்.
பாடுபொருள்
ஏலாதி சமண சமயத்திற்குரிய அறநெறிகளாகிய கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றையும் காமம், கள் ஆகியவற்றையும் நீக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கூறுகிறது. இல்லறம், துறவறம் ஆகிய நெறிகளையும் விளக்குகிறது. சமண சமய நூலாக இருந்தாலும், இதில் கூறப்பட்டுள்ள அறநெறிகள் அனைவர்க்கும் பொதுவான நெறிகளாக அமைந்துள்ளது இதன் சிறப்பு.
பாடல்களில் கூறப்படும் சில கருத்துகள்
- துறவிகள், மாணவர், வறியவர், தென்புலத்தார், துணையற்றவர், சிறுவர், சான்றோர் ஆகிய இவர்களுக்கு நல்ல உணவைப் பகுத்துக் கொடுத்தவர் மறுமையில் மன்னராய் ஆட்சி செய்வர்(ஏலாதி-35).
- பொய் பேசாமல், பிறர் சொல்லும் பொய்மைக்கு இணங்காமல், புலால் உண்ணாமல், எவரையும் வையாமல், விருந்தினர் முகம் கோணாது முகம் மலர்ந்து பகுத்துக் கொடுத்து உண்பவர் அரசராகி மகிழ்ந்து புகழ் பெறுவர்(ஏலாதி-44).
- ஆதரவற்றோர்க்கு உணவு, உடை, கொடுத்து ஆதரிப்பவர், தீயனவற்றைப் பேசாமலும், செய்யாமலும் உள்ளவர்கள், நோய் தீர்ப்போர் முதலியவர்கள் மண்ணாளும் அரசராவர். பசித்துயரம் நீங்க உணவு கொடுத்து ஆதரிப்பவர் பெருவாழ்வு பெறுவர்.
- கொலை செய்யாது, மற்றவரைத் துன்புறுத்தாது வாழ்பவர், வஞ்சியாதவர் ஆகியோர் விண்ணவர்க்கும் மேலாவர் (ஏலாதி-2).
- விருந்தாய் வருகின்ற அனைவரிடத்தும் இன்சொல் கூறி அறுசுவை உணவு அளித்தல் விண்ணக வாழ்வை அளிக்கும். பொய்யாமையும் கொலை புரியாமையும், புலால் உண்ணாமையும், உணவு கொடுத்தலும் ஆகிய அறங்களே விண்ணுலக வாழ்வினை அடையும் வழிகள்.
பாடல் நடை
தேவரால் விரும்பப்படுபவர்
காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்
பாலில்லார் பற்றிய நூலில்லார் - சாலவும்
ஆழப் படும் ஊண் அமைத்தார் இமையவரால்
வீழப் படுவார் விரைந்து
(ஏலாதி-36)
பொருள்;
கை கால் இழந்தவர், பார்வையற்றவர், ஊமையர், தமக்குத் துணையாக எவருமே இல்லாதவர், நூலறிவு இல்லாதவர் முதலியவர்களுக்கு வயிறார உணவளித்தவர்கள் தேவர்களால் விரும்பிப் போற்றப்படுவார்கள்.
கற்றவர்க்கு ஒப்பாவான்
இடர்தீர்த்தல் எள்ளாமை கீழ்இனம் சேராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்
கண்டவர் காமுறும்சொல் காணில் கல்வியின்கண்
விண்டவர்நூல் வேண்டா விடும்
(ஏலாதி - 4)
பொருள்;
துன்பம் தீர்த்தல், பிறரை இகழாமை, கீழ்மைப் பண்புடைய மக்களோடு பழகாமை, பசித்துன்பம் போக்குதல், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதல், இனிய சொல் உடையவன் ஆதல் ஆகிய பண்புகளை உடையவன் கற்றவர்க்கு ஒப்பாவான் என்று காட்டுகிறது ஏலாதி.
விருந்தினரைப் போற்றல்
இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும்
வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல், -
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்! - நாளும்
விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து (ஏலாதி - 7)
பொருள்;
விருந்தினரிடம் இன்சொல் கூறலும், கலந்துறவாடலும் இருக்கை உதவலும், அறுசுவை உணவு அளித்தலும், கடுஞ்சொல் ஒழித்து மென்சொல் வழங்குதலும் ஒருவனிடம் அமைந்தால் அவனை வானோர் விருந்தினராய் ஏற்றுக்கொள்வார்.
உயிரின் தொழில்கள்
எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே,
படுத்தலோடு, ஆடல், பகரின், அடுத்து உயிர்
ஆறு தொழில் என்று அறைந்தார், உயர்ந்தவர் -
வேறு தொழிலாய் விரித்து.(ஏலா-69)
பொருள்;
உயிரானது உடலில் பிறவி எடுக்கும், உடலில் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் முடங்கிக் கிடக்கும், உடலில் நிமிர்ந்து நிற்கும், உடலில் நிலைகொள்ளும், உடலில் படுத்துறங்கும், உடலில் படமெடுத்து ஆடும். சொல்லப்போனால், உயிரை அடுத்திருக்கும் தொழில்கள் இந்த ஆறும் என்று உயர்ந்தோர் விரித்துச் சொல்லி வைத்துள்ளனர்.
பல்லுயிர்க்கும் தாய்
நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே
பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை
வேயன்ன தோளாய் இவை உடையான் பல்லுயிர்க்கும்
தாய்அன்னன் என்னத் தகும்
(ஏலாதி-6)
பொருள்;
புலனடக்கம், பிறர்க்கு ஈதல், பொறுமை, பொய் சொல்லாமை, ஊன் உண்ணாமை, நற்குணமுடைமை முதலிய ஆறு பண்புகளை உடையவனாக இருப்பவன் பல உயிர்கட்கும் தாய்போலும் அன்பினை உடையவன்.
காலனுக்கு அஞ்சுக
வாளஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பஞ்சான்
ஆள்அஞ்சான் ஆம்பொருள் தான்அஞ்சான் - நாளெஞ்சாக்
காலன் வரவொழிதல் காணில் வீடெய்திய
பாலின்நூல் எய்தப் படும் (ஏலாதி - 22)
பொருள்;
ஒருவருடைய வாழ்நாளின் இறுதிக்காலம் அறிந்து வருபவன் காலன். அவன் பகைவனின் வாளுக்கும் அஞ்சான். கண்ணோட்டம் இல்லாத வீரத்துக்கு அஞ்சான், ஆண்மைத் தோற்றம் கண்டு அஞ்சான், ஆட்சியைக் கண்டு அஞ்ச மாட்டான், பொருளுக்கும் அஞ்சான். எதற்கும் அஞ்சாது வருவான். அவன் வருமுன்னே நல்லொழுக்கம் மேற்கொண்டு வீட்டு நெறி நிற்றல் வேண்டும்.
அழப்போகான், அஞ்சான் அலறினால் கேளான்
எழப்போகான் ஈடற்றார் என்றும் - தொழப்போகான்
என்னேஇக் காலன்ஈடு ஓரான் தவமுயலான்
கொன்னே இருத்தல் குறை
(ஏலாதி - 37)
பொருள்;
காலனானவன் ஒருவன் இறுதிக்காலம் வந்து விட்டால், அழுதாலும் விட்டுப் போகமாட்டான், ஓ என அலறிக் கூவினுங் கேட்கமாட்டான், எழுந்தெங்கேனுஞ்செல்வதற்கும் விடமாட்டான், இழந்து வலியற்றிருப்போர் நின்னையே குலதெய்வமாக வழிபடுவோம் என்று வணங்கினாலும் விட்டுச் செல்லமாட்டானெ, இக்காலனின் வலிமை ஈடற்றது , ஆதலின், காலனது வரவுக்கோர் உபாயஞ்சூழாது, தவம்புரியாது வீணாக கழித்துக் கொண்டிருப்பது தகாத செய்கை.
சொர்க்கமும் வீடும்
ஒல்லுவ, நல்ல உருவ, மேற் கண்ணினாய்!
வல்லுவ நாடி, வகையினால், சொல்லின்,
கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்;
அடையாத் தவத்தினால் வீடு
(ஏலாதி - 76)
தம்மோ டொத்தவாய்த் திருத்தக்கவேல் போன்ற கண்ணையுடையாய்! கொடையளிப்பதால் இம்மையில் இன்புற்றும் தவத்தினால் விண்ணுலக வாழ்வும் , மெய்யுணர்வினால் வீடு பேற்றையும் அடையலாம் என்று சிறந்த நூல்கள் உரைக்கின்றன.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
02-Mar-2023, 20:40:11 IST