under review

மகடூஉ முன்னிலை

From Tamil Wiki

மகடூஉ முன்னிலை கவிஞர் பாடல்களில் சொல்ல வரும் பொருளை எதிரில் ஒரு பெண் இருப்பது போலவும், அவளை விளித்து அவளிடம் சொல்வது போலவும் எழுதும் ஓர் உத்தி. ( மகடூஉ -பெண், முன்னிலை - முன்னிலையாக்கிப் பேசுவது). காரிகை என்ற சொல்லும் பெண்ணைக் குறிக்கும் என்பதால் முழுதும் மகடூஉ முன்னியில் இயற்றபட்ட நூல்கள் காரிகை எனவும் அழைக்கப்படுகின்றன. யாப்பருங்கலக்காரிகை மகடூஉ முன்னிலை நூல்.

தலைவன் , தலைவி கூறுவதாகவே பதிவு செய்யப்பட்டு வந்த அகப்பொருள் செய்திகளும் மகடூஉ முன்னிலையில் வரும் புதுமை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காணக்கிடக்கின்றது.

நீதி நூல்கள் நன்னெறியை மக்களுக்கு எழுத்துச் சொல்வதால், பெரும்பாலும் படர்க்கையில், ஒருவரிடம் உரையாடும் வகையில் அமைந்தவை. பாடலின் கருத்து இலக்கியச் சுவையோடு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே ஓர் ஆணையோ (ஆடூஉ முன்னிலை) பெண்ணையோ (மகடூ உ முன்னிலை) விளித்து, அவர்களிடம் நீதியைக் கூறுபவையாக அமைந்தன.

எடுத்துக்காட்டுகள்

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக்காரிகை

யாப்பருங்கலக்காரிகை ஆசிரியன் தன் மாணவிக்கு பாவியல் இலக்கணம் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. தாழ்குழலே, ஐயநுண் இடையாய், ஒண் நுதலே, கறைகெழுவேல்கண் நல்லாய், பூங்கொடியே, கள்ளக் கருநெடுங்கண் சுரிமென்குழல் காரிகையே, நறுமென் குழல் தேமொழியே, பூங்குழல் நேரிழையே என இந்நூல் முழுவதும் ஒரு பெண்ணை முன்னிறுத்திப் பேசுவதால் இந்நூலுக்கு 'காரிகை' என்றும் ஒரு பெயர் வழங்கப்படுகிறது என ச.வே. சுப்ரமணியன் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த முதலாத் தொடுப்பதந் தாதி அடிமுழுதும்
வந்த மொழியே வருவ திரட்டை வரன்முறையான்
முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால்
செந்தொடை நாமம் பெறுநறு மென்குழல் தேமொழியே.

(அந்தாதியில் இலக்கணம் கூறும்போது நறு மென்குழல் தேமொழியே! என அழைத்து மகடூஉ முன்னிலையாக கூறப்பட்டது)

நீதி நூல்கள்

நீதி நூல்கள் நன்னெறியை மக்களுக்கு எழுத்துச் சொல்வதால், பெரும்பாலும் படர்க்கையில், ஒருவரிடம் உரையாடும் வகையில் அமைந்தவை. பாடலின் கருத்து இலக்கியச் சுவையோடு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே ஓர் ஆணையோ (ஆடூஉ முன்னிலை) பெண்ணையோ (மகடூ உ முன்னிலை) விளித்து, அவர்களிடம் நீதியைக் கூறுபவையாக அமைந்தன.

நீதி வெண்பா

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!
இருபோது போகியே யென்ப—திரிபோது
ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்
போகியே யென்று புகல் உண்பான்.

சித்தர் பாடல்கள்

குதம்பைச் சித்தரின் பாடல்கள் குதம்பாய் (காதணி அணிந்தவளே) என ஒரு பெண்ணை விளித்துப் பேசுபவையாக அமைந்தன.

பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
குற்றங்கள் இல்லையடி

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
நாலடியார்

இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய்
உப்போடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

(தடங்கண்ணாய்!எவ்வளவு கற்றாலும் சிலர் மனம் அடங்கார். உப்பும், நெய்யும், தயிரும், பெருங்காயமும் எவ்வளவுதான் சேர்த்து சமைத்தாலும் பேய்ச்சுரைக்காய் கசப்பு மாறாது).

நாலடியார்- தலைவி கூற்றில் மகடூஉ முன்னிலை

கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
என் ஈன்ற தாயும் பிழைத்ததென்? – பொன்னீன்ற
கோங்கரும்பு அன்ன முலையாய்! பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி.

(மன்மதனை முழுதும் எரிக்காது விட்ட முக்கண்ணனாம் சிவனும் தன்கூட்டில் பொரித்த குயில்குஞ்சைக் கொத்தாமல் பாதுகாப்பாய் வளர்த்த காகமும் சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த சர்ப்பமும் தன்னைப் பெற்றபோதே கொல்லாது விடுத்த தன்தாயும் ஒரு குற்றமும் செய்யவில்லை, எனக்குக் குற்றம் செய்தது பொருள் தேடத் தலைவன் பிரிந்த வழியே! தோழியிடம் கூறுவதுபோல் அல்லாமல் பொன்னீன்ற கோங்கரும்பு அன்ன முலையாய்! என மகடூஉ முன்னிலையாக தலைவியின் கூற்று அமைகிறது.)

உசாத்துணை

தமிழ்க்கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள், முனைவர் சுந்தராம்பாள், வல்லமை.காம்


✅Finalised Page