under review

ச.வே.சுப்ரமணியன்

From Tamil Wiki

To read the article in English: S.V. Subramanian. ‎

ச.வே.சுப்ரமணியன்

ச.வே.சுப்ரமணியன் (டிசம்பர் 31, 1929 - ஜனவரி 12, 2017) (ச.வே.சுப்பிரமணியன்) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். கல்வியாளர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

பிறப்பு, கல்வி

ச.வே.சுப்ரமணியன் திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் சு. சண்முகவேலாயுதம், இராமலக்குமி இணையருக்கு டிசம்பர் 31, 1929-ல் பிறந்தார். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலைத் தொடக்கப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, 1950 -1953-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பெற்றார்.

ச.வே.சுப்ரமணியம் தமிழூர்

தனிவாழ்க்கை

1953-1956 காலப்பகுதியில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் தமிழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றினார்.

உலகத்தமிழ்க்கல்வி இயக்கம்

இலக்கிய வாழ்க்கை

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்த ச.வே.சுப்ரமணியன் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வு நூல்களையும் இலக்கண ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளார். தமிழ் நிகண்டுகள் என்னும் இவருடைய நூல் தமிழ்வளர்ச்சித்துறை விருது பெற்றது. வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் நூலை பதிப்பித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் 1969-ல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கி குன்றக்குடி ஆதீன நிர்வாகத்திற்கு அளித்தார். இவருடைய வழிகாட்டலில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழில் 165 நூல்களும் ஆங்கிலத்தில் 9 நூல்களும் மலையாளத்தில் ஒரு நூலும் எழுதியுள்ளார்.

நெல்லை அருகே பல ஏக்கர் நிலம் வாங்கி அங்கே தமிழூர் என்னும் சிறுநகரை உருவாக்கினார். அங்கே உலகத்தமிழ் கல்வி இயக்கம் என்னும் அமைப்பை நிறுவி 25000 நூல்கள் கொண்ட மூன்று நூலகங்களையும் உருவாக்கினார். தமிழ்மாணவர்கள் தங்கி ஆய்வுசெய்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்தினார். வேளாண்மையில் ஈடுபாடுகொண்ட ச.வே.சுப்ரமணியம் தன் நிலத்தில் வேளாண்மைப் பட்டையப்படிப்பு வகுப்புகளையும் சிலகாலம் நடத்தினார்.

மறைவு

ஒரு விபத்துக்குப் பின் சிலகாலம் நோயுற்றிருந்த ச.வே.சுப்ரமணியன் ஜனவரி 12, 2017-ல் மறைந்தார்.

விருதுகள்

 • செந்தமிழ்ச் செம்மல் விருது
 • இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி விருது
 • சாகித்திய அகாதெமி வழங்கிய பாஷா சம்மான் விருது
 • தமிழாகரர் விருது
 • சைவநன்மணி விருது
 • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை விருது
 • ஔவைத்தமிழ் அருளாளர் விருது
 • தமிழியக்கச் செம்மல் விருது
 • ராஜா அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை விருது (ரூ. 1 இலட்சம் பரிசு)
 • தொல்காப்பியச் செம்மல் விருது
 • சென்னை கம்பன் விருது
 • தமிழக அரசின் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ரூ. 1 இலட்சம் பரிசு
 • கலைஞர் விருது ரூ. 1 இலட்சம் பரிசு
 • தருமபுர ஆதீனம் செந்தமிழ்க் கலாநிதி விருது

இலக்கிய இடம்

ச.வே.சுப்ரமணியம் தீவிரமான தமிழ்ப்பற்றில் இருந்து உருவாகும் வழிபாட்டுணர்வுடன் ஆய்வுகளை மேற்கொண்டவர். ஆகவே பெரும்பாலும் நயம்பாராட்டல், விதந்தோதல் ஆகிய கோணங்களிலேயே அவருடைய ஆய்வுகள் உள்ளன. மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, கே.என். சிவராஜ பிள்ளை போன்ற ஆய்வாளர்களின் புறவயமான பார்வையோ முறைமையோ அவரிடமில்லை. தமிழ் நூல்களின் காலங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறார்.

இலக்கணநூல்களின் பதிப்பு மற்றும் உரையே ச.வே.சுப்ரமணியனின் முதன்மைப் பங்களிப்பு. விரிவான மூலநூல், பாடவேறுபாடு ஒப்புநோக்குதலும் செம்மையாக்கமும் கொண்ட நூல்கள் அவை. ச.வே.சுப்ரமணியன் தமிழ் நூல்கள் மீதான ஆய்வுசார்ந்த ரசனைவாசிப்பு முறை ஒன்றை உருவாக்கியவர். கம்பராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் இருந்து வரலாறு, வாழ்க்கை சார்ந்த நுட்பங்களை கண்டடையும் வாசிப்பு அது. பேராசிரியராக இரண்டு தலைமுறை மாணவர்களை தமிழறிஞர்களாக உருவாக்கியவர்.

நூல்கள்

 1. இலக்கிய நினைவுகள் (1964)
 2. சிலம்பின் சில பரல்கள் (1972)
 3. இலக்கியக் கனவுகள் (1972)
 4. மாந்தர் சிறப்பு (1974)
 5. ஒன்று நன்று (1976)
 6. அடியார்க்கு நல்லார் உரைத்திறன் (1976)
 7. இலக்கிய உணர்வுகள் (1978)
 8. கம்பன் கற்பனை (1978)
 9. காப்பியப் புனைதிறன் (1979)
 10. கம்பனும் உலகியல் அறிவும் (1981)
 11. கம்பன் இலக்கிய உத்திகள் (1982)
 12. கம்பன் கவித்திறன் (2004)
 13. இளங்கோவின் இலக்கிய உத்திகள் (1984)
 14. இலக்கிய வகையும் வடிவும் (1984)
 15. தமிழ் இலக்கிய வரலாறு (1999)
 16. சிலப்பதிகாரம் மூலம் (2001)
 17. சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் (2001)
 18. சிலம்பும் சிந்தாமணியும் (1977)
 19. திராவிட மொழி இலக்கியங்கள் (1984)
 20. இளங்கோவும் கம்பனும் (1986)
 21. தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் (1998)
 22. தமிழில் விடுகதைகள் (1975)
 23. தமிழில் விடுகதைக் களஞ்சியம் (2003)
 24. காந்தி கண்ட மனிதன் (1969)
 25. பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் (1982)
 26. நல்வாழ்க்கை (1992)
 27. மனிதம் (1995)
 28. மனமும் உயிரும் (1996)
 29. உடல் உள்ளம் உயிர் (2004)
 30. தமிழர் வாழ்வில் தாவரம் (1993)
 31. கூவநூல் (1980)
 32. சிலப்பதிகாரம் தெளிவுரை (1998)
 33. சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் (1993)
 34. தொல்காப்பியம் தெளிவுரை (1998)
 35. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை (2001)
 36. திருக்குறள் நயவுரை (2001)
 37. திருமுருகாற்றுப்படை தெளிவுரை (2002)
 38. சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை (2002)
 39. கானல்வரி உரை (2002)
 40. பத்துப்பாட்டு உரை (2002)
 41. இலக்கணத்தொகை எழுத்து (1967)
 42. இலக்கணத்தொகை சொல் (1970)
 43. இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் (1978)
 44. வீரசோழியம் குறிப்புரையுடன் (1977)
 45. தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் (1978)
 46. குவலயானந்தம் சந்திரலோகம் (1979)
 47. பிரபந்த தீபம் (1980)
 48. தொல்காப்பியப் பதிப்புகள் (1992)
 49. மொழிக்கட்டுரைகள் (1974)
 50. சங்க இலக்கியம் (2006)
 51. மெய்யப்பன் தமிழகராதி (2006)
 52. தமிழ் இலக்கண நூல்கள் (2007)
 53. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (2007)
 54. பன்னிரு திருமுறைகள் (2007)
 55. Descriptive Grammar of Chilappathikaram (1975)
 56. Grammar of Akananuru (1972)
 57. Studies in Tamil Language and Literature (1973)
 58. Studies in Tamilology (1982)
 59. Tolkappiyam in English (2004)
 60. சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் (மலையாளம்) (1966)

உசாத்துணை

[[]]✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:10 IST