தொன்னூல் விளக்கம்
தொன்னூல் விளக்கம் (1730) தமிழ் இலக்கண நூல். வீரமாமுனிவர் எழுதியது. பிற்காலத்தைய சில இலக்கண நெறிகள் இதிலுள்ளன. வீரமாமுனிவர் கொண்டுவந்த மொழிச்சீர்திருத்தங்களும் உள்ளன.
பார்க்க தென்னூல்
எழுத்து, பதிப்பு
தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர் 1730-ல் எழுதியது. நெடுங்காலம் சுவடிகளில் இருந்த இந்நூலை 1838-ம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து களத்தூர் வேதகிரி முதலியார் முதன்முறையாகப் பதிப்பித்தார். ஐந்திலக்கணம் கூறும் இந்நூல் ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.
பதிப்புகள்
- புதுவையில் களத்தூர் வேதகிரி முதலியார் (1838)
- நாகையில் அமிர்தநாதர் (1864)
- ஜி.மென்கன்சி காபின் அய்யர் (1891)
- செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளை (1898)
- ச.வே.சுப்பிரமணியன் (1978)
அமைப்பு
இந்நூல் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
- எழுத்ததிகாரம்
- சொல்லதிகாரம்
- பொருளதிகாரம்
- யாப்பதிகாரம்
- அணியதிகாரம்
மொத்தம் 370 பாக்களால் ஆன இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 40 பாடல்களும், சொல்லதிகாரத்தில் 102 பாடல்களும், பொருளதிகாரத்தில் 58 பாடல்களும், யாப்பதிகாரத்தில் 100 பாடல்களும், அணியதிகாரத்தில் 70 பாடல்களும் உள்ளன
சிறப்புகள்
- எ,ஒ வடிவம் புள்ளியிட்டால் குறிலாகவும் இடாவிட்டால் நெடிலாகவும் வழங்குதல்.
- கட்டளைக்கலிப்பா, சந்தவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறல்.
- அகத்திணை, புறத்திணைகளை ஒரே நூற்பாவில் தொகுத்துரைத்தல்.
உரைகள்
இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். இவ்வுரையில் பழந்தமிழ் நூல்களிலிருந்தும், தானே எழுதிய பிற நூல்களிலிருந்தும் எடுத்துக்காட்டுப் பாடல்களை ஆசிரியர் தருகிறார். பின்னர் ச.வே.சுப்ரமணியன் விரிவான உரை எழுதியிருக்கிறார்
பதிப்புகள்
- தொன்னூல் விளக்கம், பதிப்பாசிரியர்: ச. வே. சுப்பிரமணியன், சென்னை (1978)
- ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம், கிறித்தவத் தமிழ்த் தொண்டர் கான்ஸ்டன்சியஸ் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர், கழக வெளியீடு, சென்னை, (1984-முதற் பதிப்பு)
உசாத்துணை
- தொன்னூல் விளக்கம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY
- தொன்னூல் விளக்கம்: ச.வே.சுப்பிரமணியன் archive.org
- தமிழ்ச்சுரங்கம் -ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
- நடராசா, எஃப். எக்ஸ். சி. (பதிப்பாசிரியர்), வீரமாமுனிவர் எழுதிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் - மூலமும் உரையும் - எழுத்ததிகாரம், மட்டக்களப்பு. 1991.
- தொன்னூல் விளக்கம் விக்கி
- முனைவர் ஆ.மணி - தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 46
- தொன்னூல் விளக்கம் – வெண்பா யாப்பியல் கோட்பாடுகள் – வல்லமை
- பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): தமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Apr-2023, 07:41:39 IST