சின்ன அண்ணாமலை
சின்ன அண்ணாமலை. (இயற்பெயர்: நாகப்பன்; ஜூன் 18, 1920- ஜூன் 18, 1980)எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், திரைப்படக் கதாசிரியர், தயாரிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர். தமிழ்ப் பண்ணை’ என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தியவர். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் தலைமைப்பொறுப்பிலும் இருந்தார்.
பிறப்பு, கல்வி
நாகப்பன் என்னும் இயற்பெயர் கொண்ட சின்ன அண்ணாமலை, காரைக்குடியை அடுத்துள்ள ஓ.சிறுவயலில், நாச்சியப்பச் செட்டியார் - மீனாட்சி ஆச்சி இணையருக்கு, ஜூன் 18, 1920-ல் பிறந்தார். தொடக்கக் கல்வியை காரைக்குடியில் படித்தார். உயர்நிலைக் கல்வியை தேவகோட்டையில் உள்ள நகரத்தார் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
இலக்கியப் பேச்சாளரும், 'கம்பன் கழகம்’ நிறுவியவருமான கம்பன் அடிப்பொடி சா. கணேசன் சின்ன அண்ணாமலையின் உறவினர். அவர் மூலம் காங்கிரஸ் இயக்கம் பற்றியும், தேச விடுதலை பற்றியும் அறிந்தார். காரைக்குடிக்கு வருகை தந்திருந்த காந்தியையும் சந்தித்தார். சுதந்திரப்போரில் ஈடுபாடுகொண்டு சிறு வயதிலேயே நாட்டின் விடுதலை குறித்துப் பல இடங்களுக்கும் சென்று பேசினார். ஊர்வலங்களில் கலந்து கொண்டார். விளைவாகக் கல்வி தடைப்பட்டது.
மேற்கல்விக்காகக் கோபிச் செட்டிபாளையத்தில் உள்ள வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் சின்ன அண்ணாமலை. பள்ளிக்கு வருகை தந்திருந்த சத்தியமூர்த்தி, கோபியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சின்ன அண்ணாமலை பேச வாய்ப்பளித்தார். சின்ன அண்ணாமலை கதர் மட்டுமே அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அண்ணாமலையும் அதனை ஏற்றுக் கொண்டார்.
தனி வாழ்க்கை
சின்ன அண்ணாமலைக்கு 13-ஆவது வயதில் உமையாளுடன் திருமணம் நிகழ்ந்தது. சின்ன அண்ணாமலைக்கு ஒரே மகன்: பெயர் கருணாநிதி. தந்தையின் வியாபாரம் தொடர்பாக, குடும்பப் பொறுப்புகளும் அதிகரித்தன. ஆனாலும் தனது அரசியல், சுதந்திரப் போராட்டப் பணிகளைத் தொடர்ந்தார்.
அரசியல் வாழ்க்கை
இளம் பேச்சாளராக காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிமுகமானார் சின்ன அண்ணாமலை. தமிழ்நாடெங்கும் சென்று காங்கிரஸ் கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அதனால் தந்தை, சின்ன அண்ணாமலையை, மலேசியாவுக்கு, அங்குள்ள ஒரு ஆங்கிலோ சைனீஸ் பள்ளியில் படிக்கவும், தங்கள் தொழில்களை மேற்பார்வை செய்யவும் அனுப்பி வைத்தார்.
சின்ன அண்ணாமலை மலேசியா சென்றும் மாணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார். தொழிலாளர்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பதைக் கண்டு மதுவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தார். அதனால் ஏற்பட்ட கலவரத்தால் மதுக்கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. விசாரணைக்குப் பின் கவர்னரின் உத்தரவுப்படி சின்ன அண்ணாமலை மலேசியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்தியா திரும்பியவர் மீண்டும் சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். காந்தியின் 'வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைத் தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தினார். அதனால் பிரிட்டிஷ் அரசு, நள்ளிரவில் சின்ன அண்ணாமலையைக் கைது செய்து திருவாடானைச் சிறையில் அடைத்தது.
சினம் கொண்ட மக்கள், சிறைச் சாலையைத் தாக்கி, சிறைக் கதவை உடைத்து அண்ணாமலையை விடுவித்தனர். அதனைத் தொடர்ந்து பெரும் கலவரமும், துப்பாக்கிச் சூடுகளும் நிகழ்ந்தன. சின்ன அண்ணாமலை கைது செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் தொடர்பால் கல்கி, சி.ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி, நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை, டி.கே. சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் அ. சீனிவாச ராகவன், ஏ.கே. செட்டியார் உள்ளிட்ட பலரது அறிமுகம் நட்பும் சின்ன அண்ணாமலைக்குக் கிடைத்தது.
இலக்கிய வாழ்க்கை
சிறுகதைகள்
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார் சின்ன அண்ணாமலை. அந்த விழாவில் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரும் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட ராஜாஜி, அண்ணாமலையின் சேவைகளைப் பாராட்டிப் பேசும் போது, அவரைத் தனித்துக் குறிப்பிட வேண்டி 'சின்ன அண்ணாமலை’ என்று குறிப்பிட்டார். நாளடைவில் அந்தப் பெயரே நிலைத்தது. அப்பெயரிலேயே எழுதினார்.
சின்ன அண்ணாமலை கல்கியில் சில கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். "சீனத்துச் சிங்காரி" என்பது சின்ன அண்ணாமலை எழுதிய முதல் சிறுகதை. அவரது சிறுகதைகள் பின்னர் தொகுக்கப்பட்டு அதே தலைப்பில் நூலாகவும் வெளிவந்தது.
சின்ன அண்ணாமலை தன் வாழ்க்கை வரலாற்றை 'சொன்னால் நம்பமாட்டீர்கள்' என்னும் தலைப்பில் குமுதம் வார இதழில் தொடராக எழுதினார். பின்னர் அது நூலாக வெளியாகியது.
பதிப்புப்பணி
ஏ.கே. செட்டியாரின் தூண்டுதலாலும், கல்கி, ராஜாஜி போன்றோரது ஆலோசனையின் பேரிலும் 'தமிழ்ப் பண்ணை’ என்னும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தார் சின்ன அண்ணாமலை. தமிழ்ப் பண்ணையின் முதல் வெளியீடாக 'தமிழன் இதயம்’ என்ற நாமக்கல் கவிஞரின் நூல் வெளிவந்தது. அந்நூல் நாமக்கல் கவிஞரின் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவக் காரணமானது.
தனது தமிழ்ப் பண்ணை மூலம் ராஜாஜி, கல்கி, பெரியசாமி தூரன், ம.பொ.சி., வெ. சாமிநாத சர்மா, வ.ராமசாமி ஐயங்கார், டி.எஸ். சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரது நூல்களை வெளியிட்டார். பூட்டை உடையுங்கள், அன்ன விசாரம் போன்ற புத்தகங்களை வெளியிட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் ஆறுமாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
இதழியல் வாழ்க்கை
'குமரி மலர்’ என்ற இதழை நடத்தி வந்த ஏ.கே.செட்டியார் சின்ன அண்ணாமலையை சென்னைக்கு அழைத்து வந்தார். குமரி மலரில் சிலகாலம் பணியாற்றினார்.
1946-ல் வெள்ளிமணி வார இதழைத் தொடங்கினார் சின்ன அண்ணாமலை. சாவி அதன் ஆசிரியராக இருந்தார். அதில் 'சங்கரபதிக் கோட்டை’ என்ற தொடரை எழுதினார் அண்ணாமலை. கல்கியுடன் இணைந்து இந்தியா முழுக்கப் பயணம் மேற்கொண்டு அந்த அனுபவங்களை 'காணக் கண் கோடி வேண்டும்’ என்ற தலைப்பில் எழுதினார்.
காந்தி 'ஹரிஜன்’ என்ற ஆங்கில இதழை நிறுவி நடத்தி வந்தார். அதில் காந்தியின் பல கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதனை அறிந்த சின்ன அண்ணாமலை, காந்தியை நேரடியாகச் சந்தித்து அந்த இதழைத் தமிழில் நடத்த அனுமதி பெற்றார். தமிழில் 'தமிழ் ஹரிஜன்’ என்ற பெயரில் அந்த இதழ் வெளியானது. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை மற்றும் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை இருவரும் அதன் ஆசிரியராக இருந்தனர்.
'சங்கப் பலகை’ என்ற இதழையும் நடத்தி வந்தார் அண்ணாமலை.
சிவாஜி ரசிகர்மன்றத் தலைவராக சிவாஜி ரசிகன் என்னும் இதழையும் சின்ன அண்ணாமலை நடத்தினார்
திரைப்பட வாழ்க்கை
'தங்கமலை ரகசியம்’, 'நான் யார் தெரியுமா?’ போன்ற படங்களின் கதை சின்ன அண்ணாமலையினுடயது. 'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, 'ஆயிரம் ரூபாய்’, 'கடவுளின் குழந்தை’ போன்ற படங்களைத் தயாரித்தார். சிவாஜி நடித்த ஜெனரல் சக்ரவர்த்தி, தர்ம ராஜா போன்ற படங்களை சின்ன அண்ணாமலை தயாரித்தார்
ஆகஸ்ட், 1969-ல், அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தை உருவாக்கி ஒருங்கிணைத்தார் சின்ன அண்ணாமலை. சின்ன அண்ணாமலையின் நோக்கம், சிவாஜி ரசிகர்களை, சிவாஜி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் இயக்கத்தோடு ஒருங்கிணைப்பதுதான். அதற்காகவே 'சிவாஜி ரசிகன்’ என்ற இதழை ஆரம்பித்து நடத்தினார்.
விருதுகள்
- தேசியச் செல்வர்
- தியாகச் செம்மல்
- தமிழ்த் தொண்டர்
- தமிழ்ப் பதிப்பியக்கப் பிதாமகர்
மறைவு
ஜூன் 18, 1980-ல் சின்ன அண்ணாமலையின் அறுபதாவது பிறந்தநாள் விழாவில் புனிதக் கலச நீர் அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, குருதிக் கொதிப்பினால் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.
ஆவணம்
சின்ன அண்ணாமலையின் நூல்களைத் தமிழக அரசு 2009-ல் நாட்டுடைமை ஆக்கியுள்ளது. அவர் எழுதிய நூல் ஒன்று, தமிழ் இணைய நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. டாக்டர் நல்லி குப்புசாமிச் செட்டியார், சின்ன அண்ணாமலையின் பேரன் திலக் என்கிற மீனாட்சி சுந்தரத்துடன் இணைந்து சின்ன அண்ணாமலை குறித்த நூற்றாண்டுத் தகவல் களஞ்சியம் ஒன்றை உருவாக்கி வருகிறார்
இலக்கிய இடம்
தமிழ் இதழியல், தமிழ் பதிப்பியக்கம் இரண்டிலும் சின்ன அண்ணாமலைக்கு இடமுண்டு. முன்னோடித் தமிழ் பதிப்பாளர்களில் ஒருவர். வேடிக்கை கலந்து இதழியலுக்காகக் கதைகள் கட்டுரைகள் எழுதியவர். "பேசும் ஆற்றலைபோல் எழுதும் ஆற்றல் படைத்தவர் ஸ்ரீ சின்ன அண்ணாமலை. அழகிய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சிறந்த நாவல்கள் எழுதியிருக்கிறார். ரஸமான பிரயாணக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார், கல்கி. சின்ன அண்ணாமலையின் ’சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ தமிழில் குறிப்பிடத்தக்க தன்வரலாறுகளில் ஒன்று.
நூல்கள்
- சீனத்துச் சிங்காரி
- கண்டறியாதன கண்டேன்
- காணக் கண் கோடி வேண்டும்
- சொன்னால் நம்ப மாட்டீர்கள் (தன்வரலாறு)
- சிரிப்புக் கதைகள்
- தியாகச் சுடர்
- கதைக்குள்ளே கதை
- வசந்தம் வந்தது
- சர்க்கரைப் பந்தல்
- சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்
- ராஜாஜி உவமைகள்
உசாத்துணை
- சொன்னால் நம்ப மாட்டீர்கள் நூல்:தமிழ் இணைய நூலகம்
- திருவாடானை சிறை உடைப்பு
- கல்கியும் சின்ன அண்ணாமலையும்
- சின்ன அண்ணாமலையும் சிவாஜி கணேசனும்
- சின்ன அண்ணாமலை பற்றி நல்லி குப்புசாமிச் செட்டியார்
- வரலாற்றில் வாழ்வது: பாவண்ணன்
- சின்ன அண்ணாமலை: தினமலர் கட்டுரை
- சின்ன அண்ணாமலை-பசுபதிவுகள்
- சின்ன அண்ணாமலை பற்றி ஆர்வி கட்டுரை
- சின்ன அண்ணாமலை நூற்றாண்டு நிறைவு:இந்து தமிழ் திசை கட்டுரை
- தென்றல் இதழ் கட்டுரை
- கடலூர் சீனு
- இந்து தமிழ் திசை கட்டுரை
- தேசியத் தமிழர் சின்ன அண்ணாமலை: மரபின் மைந்தன் முத்தையா
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:58 IST