மங்கை
மங்கை (1946-1950) குகப்பிரியை ஆசிரியையாக இருந்த பெண்கள் இதழ். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.
வெளியீடு
மங்கை இதழ் 1946-ல் இருந்து பெண்கள் இதழாக சக்தி அச்சகத்தில் இருந்து வெளிவந்தது. நான்காண்டுகாலம் வெளிவந்து 1950-ல் நின்றது.
உள்ளடக்கம்
மங்கை இதழில் குடும்பப் பாதுகாப்பு, வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, குழந்தை மனோதத்துவம், உடலோம்புதல், சமையல், தையல், கட்டுரை, கதை, கவிதை, பெரியார் வரலாறு, சயன்ஸ் போன்ற தலைப்புகளில் படைப்புகள் வெளிவந்தன.
கட்டுரைகள்
- வாழ்க்கையில் வெற்றிபெற்ற புகழ்பெற்ற பெண்களின் வரலாற்றுக் கட்டுரைகள் இவ்விதழின் தனித்த பங்களிப்பாக கருதப்பட்டது. கஸ்தூரிபாய், சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், ஆர்.எஸ். இலட்சுமி அம்மாள் போன்ற பலரின் கட்டுரைகள் வெளிவந்தன.
- வ.வே. சுப்பிரமணிய ஐயர் போன்ற எழுத்தாளர்கள் பெண்களின் பழைய மற்றும் இன்றைய நிலையை ஒப்பிட்டு விளக்கி கட்டுரைகள் எழுதினர். கல்விகற்று, பண்டிதர்களுடன் தர்க்கம் செய்து, கந்தர்வ விவாகம் செய்த அக்காலப் பெண்களின் நிலையை எட்டுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்ற தொனியுடைய கட்டுரைகள் எழுதினார்.
- பெண்கள் சமூக வாழ்வில் பங்குகொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்டுரைகள் எழுதப்பட்டன.
- மகளிர் தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில், சமுதாயப் போக்குகளில், நாட்டு நடப்புகளில் நாட்டம் உள்ளவர்களாக இருந்து அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தும் பல கட்டுரைகள் வெளிவந்தன.
- குழந்தைத் திருமணம், மறுமணம் சார்ந்த விழிப்புணர்வு கட்டுரைகள் வெளிவந்தன.
இலக்கிய இடம்
மங்கை இதழ் மூலம் அக்காலகட்டத்தில் சமூகத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது, பெண்கல்வி எந்த அளவில் ஊக்குவிக்கப்பட்டது, பால்ய விவாகத்தின் கொடிய நிலை என்ன? போன்றவை புலப்படுகின்றன. வரதட்சினை கொடுமை, ஆணாதிக்கம் மிகவும் மேலோங்கியிருந்த காலகட்டத்தில் பெண்கள் எந்தெந்த விதங்களிலெல்லாம் துன்புற்றார்கள் போன்ற செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. இவற்றின் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த வந்தவர்களையும் மங்கை இதழ் பதிவு செய்துள்ளது.
உசாத்துணை
- தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்: 19 - குகப்பிரியை
- மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Dec-2022, 09:09:11 IST