under review

மு. கதிரேசன் செட்டியார்

From Tamil Wiki
கதிரேசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கதிரேசன் (பெயர் பட்டியல்)
செட்டியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: செட்டியார் (பெயர் பட்டியல்)
பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்
பண்டிதமணி2
பண்டிதமணி- கல்கி அட்டை
பண்டிதமணி சிலை
பண்டிதமணி இல்லம்
இந்திய இலக்கியச் சிற்பிகள் பண்டிதமணி முகதிரேசன் செட்டியார்
பண்டிதமணி கையெழுத்து

மு. கதிரேசன் செட்டியார் (பண்டிதமணி , பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்) (செப்டம்பர் 16, 1881 - அக்டோபர் 24, 1953) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். சமஸ்கிருதத்திலிருந்து தமிழிற்கு அவர் மொழிபெயர்த்த நூல்கள் மூலமும் தமிழில் வடசொற்களின் ஆய்விற்காகவும், சைவ சமய இலக்கியத்திற்காகவும், பழந்தமிழ் நூல்களின் உரைகளுக்காகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் மகிபாலன்பட்டி என்ற ஊரில் குமரப்பச் செட்டியாரின் மகன் முத்துக்கருப்பன் செட்டியாருக்கும், சிவப்பி ஆச்சிக்கும் செப்டம்பர் 16, 1881-ல் கதிரேசன் பிறந்தார். கதிரேசன் குழந்தையாய் இருந்தபோது இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டதால் 7 வயது வரை பள்ளிக்கூடம் போகவில்லை. நகரத்தார் தங்களின் தொழிலுக்கேற்றதாக எண்சுவடிப் படிப்புக்கு முக்கியத்துவம் தந்ததாலும் ஊரிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார்.

நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கடல் கடந்து சென்று தொழில் செய்வது வழக்கமாகையால் கதிரேசனும் 11-ம் வயதில் இலங்கை, நுவரேலியாவில் இருந்த ஒரு வியாபாரியிடம் மூன்று வருடம் வேலை பார்த்தார். 14 வயதில் தந்தை இறந்ததால் மகிபாலன்பட்டிக்குத் திரும்பினார். கதிரேசன் ஊருக்கு வந்தபின் வேறு வேலை செய்யவில்லை. இளம்பிள்ளைவாதம் அவரை மறுபடியும் பீடித்ததால் 14 வயதில் கோலூன்றி நடக்கவேண்டியதாயிற்று. வீட்டிலிருந்தே படிக்க ஆரம்பித்தார்.

இக்காலத்தில் கதிரேசன் செட்டியார் முறைப்படியாக யாரிடமும் படிக்கவில்லை என்றாலும் சோழவந்தான் மகாவித்துவான் அரசன் சண்முகனாரிடம் தொல்காப்பியம் சேனாவரையர் உரையுடன் பாடம் கேட்டார். தருவை நாராயண சாஸ்திரியிடம் சமஸ்கிருதமொழியை ஐந்து ஆண்டுகள் முறையாகப் படித்தார். காரைக்குடி சொக்கலிங்கம் என்பவரிடம் சைவ சமய இலக்கியங்களைப் பாடம் கேட்டார். ஆத்திசூடி, உலக நீதி தொடங்கி திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம், சில பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆகியவற்றைத் தாமே கற்றார்.

தனிவாழ்க்கை

1912-ல் கதிரேசன் செட்டியார் தன் 32-வது வயதில் தன் அத்தை மகள் மீனாட்சியை மணம் புரிந்தார். அக்காலத்தில் இருபது வயதுக்குள் திருமணம் நிகழ்வது வழக்கம். உடற்குறை காரணமாக கதிரேசன் செட்டியாரின் திருமணம் தள்ளிப்போயிற்று. அத்தைமகள் கல்யாணியை அவருக்கு மணம்பேசிப் பின் அதைத் தவிர்த்து கல்யாணியை இன்னொருவருக்கு மணம் புரிந்து கொடுத்தனர். கல்யாணியின் தங்கை மீனாட்சியை கதிரேசன் செட்டியார் மணம் புரிந்தார். திருமணத்தை ஒட்டி மேலைச்சிவல்புரி சன்மார்க்க சபை தலைவர் வ.பழ.சா.பழனியப்பச் செட்டியாரும் கருமுத்து அழகப்பச் செட்டியாரும் கதிரேசச் செட்டியாருக்குப் பொருளுதவி செய்தனர். மீனாட்சி ஆச்சியின் செல்வமும் அவருக்கு வந்தது. மலேயாவில் ஈப்போ நகரில் அவர் தொழில் தொடங்கினார். அவர்களுக்கு ஏழு மக்கள் பிறந்தனர்

கதிரேசன் செட்டியார் 1934 முதல் 1946 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியராவதற்கு முன்பே பாடத்திட்டக் குழுவில் இருந்த கதிரேசன் செட்டியார் ஓய்வுபெற்ற பின்பும் 1946 வரை இதே பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில் வருகைதரு பேராசிரியராக இருந்தார்.

அமைப்புப்பணிகள்

பண்டிதமணி மேலைச்சிவபுரி வ.பழ.சா. பழநியப்பச் செட்டியாருடன் இணைந்து மே 13, 1909-ல் மேலைச்சிவபுரியில் 'சன்மார்க்க சபையை நிறுவினார். பின்னர் சபையின் கிளை நிலையமாக 'கணேசர் செந்தமிழ்க் கலாசாலை' நிறுவப்பட்டது.

சைவசமய ஆராய்ச்சிக்காக கதிரேசன் செட்டியார் பலவான்குடியில் மணிவாசகக் சங்கத்தையும், சிதம்பரத்தில் தில்லை தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கினார்

கல்விப்பணி

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியராகப் பணியாற்றிய பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அ. சிதம்பரநாதன் செட்டியார், டாக்டர் வ.சுப. மாணிக்கம் போன்றவர்களின் ஆசிரியராக இருந்தார்.

இலக்கியவாழ்க்கை

பண்டிதமணி தமிழ் ஆய்வாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என பல தளங்களில் தமிழ்ப்பணி ஆற்றியவர் பண்டிதமணி. வகுப்புகள் எடுப்பதிலும், சொற்பொழிவாற்றுவதில் ஈடுபாடு கொண்டவர். இவருடைய சொற்பொழிவுகள் நூல்களாக பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவரது கவிதைகள் சிலவும் கடிதங்களும், 'மாலதி மாதவம்' என்ற மொழிபெயர்ப்பும் கையெழுத்துப் பிரதிகளாக உள்ளன.

மொழியாக்கம்

பண்டிதமணியின் முக்கியப் பங்களிப்பாகச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழிற்கு அவர் மொழிபெயர்த்த நூல்களைச் சொல்லலாம். அவரின் மொழிபெயர்ப்பு நூல்கள் மண்ணியல் சிறுதேர், சுக்கிர நீதி, 'அர்த்த சாஸ்திரம்', 'சுலோசனை', 'உதயண சரிதம்', 'மாலதி மாதவம்', 'பிரதாப சரித்திரம்' ஆகியன.

கவி பாசன் எழுதிய ’சாருதத்தம்’ என்ற நாடகத்தை, சூத்திரகர் 'மிருச்சகடிகம்' என்ற பெயரில் நாடகமாக்கினார். இதையே பண்டிதமணி ’மண்ணியல் சிறுதேர்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இந்நாடகம் எழுபதுகளில் தமிழகப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நூலின் மூல உரையாடல் பகுதிகளை உரைநடை வடிவிலும், மூலப்பாடல்களைச் செய்யுள் வடிவிலும் மொழிபெயர்த்துள்ளார். 'சுக்கிர நீதி' நூலைப் பண்டிதமணி மொழிபெயர்த்தபோது, உ.வே.சா. வின் வலியுறுத்தலின் பேரில், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையினர், அண்ணாமலைச் செட்டியாரின் உதவியுடன் 1926-ல் இந்நூலை வெளியிட்டனர்.

அர்த்த சாஸ்திரம்

1942-ல் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை அண்ணாமலைப் பல்கலைகழகத் தமிழ்த்துறை தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பைப் பண்டிதமணியிடம் ஒப்படைத்தது. பண்டிதமணிக்கு உதவியாக ஆசிரியர் பி.எஸ். இராமானுஜாச்சாரி நியமிக்கப்பட்டார். முதல் மூன்று அதிகாரங்களை மொழிபெயர்த்த நிலையில் பண்டிதமணியின் உடல்நலம் குன்றியதால் பி.எஸ். இராமானுஜாச்சாரி நான்கு முதல் 12 அதிகாரங்களை மொழிபெயர்த்தார். 'அர்த்த சாஸ்திரம்' 1955-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்தது. இந்த நூலில் திருக்குறளின் பாடல்களை மேற்கோளாகச் சேர்த்து செப்பம் செய்தவர் வெள்ளைவாரணர்.

சொற்பொழிவாளர்

பண்டிதமணி தமிழ் மாநாடுகளிலும், சிறப்புக் கூட்டங்களிலும் சொற்பொழிவாற்றினார். தஞ்சை, திருச்சி மாவட்டம் புலவர் மாநாடு, பூவாளூர் சைவ சித்தாந்த மாநாடு, தூத்துக்குடி சைவசித்தாந்தச் சபை பொன்விழா போன்ற பெரிய மாநாடுகளில் தலைமை தாங்கிப் பேசினார். சமஸ்கிருத நூல்களிலிருந்து சூத்திரங்களையும் பாடல்களையும் மேற்கோள் காட்டிப் பேசுவது, பாடல்களை அப்படியே ஒப்புவிக்காமல் விளக்கங்கள் தருவது ஆகியவை இவர் பேச்சின் சிறப்பம்சங்கள். இவரது பேச்சுகள் சிறுபிரசுரங்களாகவும், கட்டுரையாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. .

1925-ல் சென்னையில் உ.வே.சா. தலைமையில் 'பரிமேலழகரின் உரைநயம்' என்னும் இவரது உரை சிறுபிரசுரமாக வந்திருக்கிறது. 1940-ல் சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் நடத்திய குறுந்தொகை மாநாட்டிற்குப் பண்டிதமணி தலைமை தாங்கினார். அப்போது குறுந்தொகை கடவுள் வாழ்த்துக்கு மட்டும் இவர் கொடுத்த விளக்கம் அச்சில் வந்துள்ளது.

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் மறைமலையடிகள் சங்கப் பாடல்களிலும் தேவார திருவாசகப் பாடல்களிலும் வடமொழிக் கலப்பு இல்லை என்று பேசியதற்கு பண்டிதமணி கலித்தொகைப் பாடல் வரியையும், தேவாரத்தில் வரும் வரியையும் எடுத்துக்காட்டி மறுப்புரைத்தார். தூத்துக்குடியில் நடந்த சைவ சித்தாந்த ஆண்டுவிழாவில் பண்டிதமணி கம்பராமாயணத்தைக் குறித்து உரையாற்றினார். 1944-ல் சென்னை, கோகலே மண்டபத்தில் நடந்த கம்பன் விழாவில் பண்டிதமணி இராவணனைப் பற்றி உரையாற்றினார்.

ஆய்வுகள்

பண்டிதமணி 1933-ல் இலங்கையில் பொன். ராமநாதனின் வேண்டுகோளின்படி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். யாழ் நகரிலிருந்து வெளியான ஞாயிறு, ஈழகேசரி போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

பண்டிதமணி சமயம் பற்றியும், இலக்கியங்கள் பற்றியும் பேசிய பேச்சுகளும் திருச்சி வானொலி நிலையத்தில் பேசிய பேச்சும் நூல்களாக வந்துள்ளன. இவற்றில் 17 கட்டுரைகள் உள்ளன. 1941-ல் சமயம் பற்றிப் பேசிய சொற்பொழிவுகள் 'உரைநடைக் கோவை' என்ற தலைப்பில் முதல் பகுதியாக வந்தது. 1943-ல் இலக்கியம் குறித்த உரைகள் 'உரைநடைக்கோவை இரண்டாம் பகுதி' யாக வந்தது. எஞ்சிய கட்டுரைகள் 'இலக்கிய நயம்' என்னும் தலைப்பில் வந்தன. திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தார் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகியவற்றிற்குப் பண்டிதமணி எழுதிய விளக்கவுரை 'கதிர்மணி விளக்கம். ஒவ்வொரு பாடலுக்கும் கருத்துரை, பதவுரை, விளக்கவுரை மேற்கோள் பாடல், இலக்கண அமைதி ஆகியவற்றைக் கொண்டது. 1951-ல் இந்த உரை தமிழக அரசின் பரிசைப் பெற்றது.

விவாதங்கள்

பீமகவி என்பவரின் சொற்பொழிவில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டி வித்யாபானு என்னும் இதழில் கதிரேசன் செட்டியார் ஒரு கட்டுரை எழுதினார். அவர் கதிரேசன் செட்டியார் மேல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதற்காக சோமசுந்தர பாரதியார் கதிரேசன் செட்டியாருக்காக வாதாடினார். இவ்வழக்கு நீண்டநாள் நடைபெற்று கதிரேசன் செட்டியாருக்கு பொருளிழப்பையும் மனத்துயரையும் உருவாக்கியது.

இலக்கிய இடம்

பண்டிதமணியின் தமிழ்நடையை டாக்டர் இரா. மோகன் விரிவாக ஆராய்ந்துள்ளார். 'இவர் எளிய நடையை விரும்ப வில்லை. இலக்கண வரம்புடன் திரிசொற்கள் விரவாமல் இயற் சொற்களால் எழுதுபவர். பழைய இலக்கண விதிகளுக்கு அமைய சந்திவிகாரங்களைக் கையாண்டவர். நீண்ட வாக்கியங்களை விரும்புபவர்' என்று குறிப்பிடுகிறார்

. ஆய்வு என்னும் வகையில் கதிரேசன் செட்டியாரின் நூல்கள் அதிகமாக உசாத்துணையாக சுட்டப்படுவதில்லை. அவருடைய இலக்கியப்பார்வையும் மரபானது, பண்டிதத்தன்மை கொண்டது. கதிரேசன் செட்டியார் பேராசிரியர், சொற்பொழிவாளர் என்னும் தளங்களில் தமிழின் செவ்விலக்கிய மரபின் தொடர்ச்சியை நிலைநிறுத்திய அறிஞர்களில் ஒருவர்.

விருதுகள்

  • மண்ணியல் சிறுதேர் வெளிவந்த காலத்தில் விபுலானந்தர் பண்டிதமணியை 'கவிமணி' எனப் பாராட்டினார்.
  • 1925-ல் ’பண்டிதமணி’ என்ற பட்டத்தை மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் 16-ம் ஆண்டு விழாவில் உ.வே.சா. தலைமையில் ரா. ராகவையங்கார் வழங்கினார்.
  • 1942-ல் மகோபாத்யாயா பட்டத்தை பிரிட்டிஷ் மன்னரின் பிறந்த நாளில், மாநில ஆளுநர், சென்னை அரசு சார்பாக வழ்ங்கினார். இச்சிறப்பு விருதுக்கு அரசு, ஆண்டுதோறும் 100 ரூபாய் வழங்கியது. இந்திய விடுதலைக்குப் பின் இது நிறுத்தப்பட்டது.
  • 1951-ல் குன்றக்குடி அடிகளார் இவருக்குச் 'சைவ சித்தாந்த வித்தகர்' என்ற பட்டத்தைக் கொடுத்தார்.
  • தமிழ்ப் புலவர் மாநாட்டில் அண்ணாமலை செட்டியார் 'முது பெரும் புலவர்' என்ற பட்டத்தை அளித்தார்.
  • பாண்டித்துரைத் தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி வைத்த புலவர்களின் பட்டியலில் பண்டிதமணியையும் சேர்த்தார்.
நாட்டுடைமை

பண்டிதமணியின் நூல்கள் 2009-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இறுதிக்காலம்

பண்டிதமணி வரலாறும் தமிழ்ப்பணியும்

அக்டோபர் 24, 1953-ல் பண்டிதமணி இரத்த அழுத்த நோயால் காலமானார்.

வாழ்க்கை வரலாறுகள்,நினைவகங்கள்

  • பண்டிதமணி கதிரேசன் செட்டியார்- சா.கிருஷ்ணமூர்த்தி
  • பண்டிதமணி- சோமலெ
  • பண்டிதமனி முகதிரேசன் செட்டியார்-நிர்மலா மோகன் (இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை
  • பண்டிதமணி: வரலாறும் தமிழ்ப் பணியும்- மீனாட்சி லட்சுமணன்

நூல்கள்

மொழிபெயர்ப்பு
  • பிராதபருத்தரீயம்
  • மாலதி மாதவம்
  • சுக்கிர நீதி
  • உதயணன் சரிதை
  • சுலோசனை
  • மண்ணியல் சிறுதேர் (மிருச்சகடிகம்)
  • கெளடலீயம் பொருணூல் (கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்)
  • மிருச்சகடிகம்
  • இரசங்காதாரம்
சைவ சமயம்
  • உரை நடைக் கோவை (முதற்பகுதி) சமயக் கட்டுரைகள்
  • உரை நடைக் கோவை (இரண்டாம் பகுது) இலக்கியக் கட்டுரைகள்
  • திருவாசகம் விளக்கம்
  • திருச்சதகம் விளக்கம்
  • நீத்தல் விண்ணப்பம்
  • திருவெம்பாவை விளக்கம்
  • பதிற்றுப்பத்தந்தாதி
சொற்பொழிவு
  • பரிமேலழகரின் உரைநயம்
  • குறுந்தொகை கடவுள் வாழ்த்து
பிற
  • நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு
  • பண்டிதமணி பாடல்கள்
  • பண்டிதமணி கடிதங்கள்
  • கதிர்மணி விளக்கம் (திருவாசக விளக்கம்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Mar-2024, 11:24:26 IST