under review

திருவெம்பாவை

From Tamil Wiki
நன்றி: temple.dinamalar.com

திருவெம்பாவை மாணிக்கவாசகர்(பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டு) இயற்றிய, 'பாவைப் பாட்டு' என்னும் வகைமையைச் சார்ந்த இருபது பாடல்களின் தொகுப்பு. கன்னிப்பெண்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் தம் தோழியரைத் துயிலெழுப்பி, புனலில் நீராடி, சிவனைப் போற்றிப் பாடும் வகையில் அமைந்த பாடல்கள் 'எம்பாவாய்' என்று முடிவதால், 'திருஎம்பாவை' என்பது பெயர் ஆயிற்று. திருவெம்பாவையுடன் மாணிக்கவாசகர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் சிவாலயங்களிலும் வீடுகளிலும் பாடுவது சைவர்களின் மரபு. எளிமையான பாவைப் பாடல்களின் வழியாக உருவ வழிபாட்டைத் தாண்டி, பக்திச்சுவையோடு, ஆதியும் அந்தமும் இல்லாத, காலங்களைக் கடந்த பரம்பொருளாக சிவத்தின் தத்துவப் பொருளை திருவெம்பாவை உரைக்கிறது.

ஆசிரியர்

திருவெம்பாவை மாணிக்கவாசகரால் திருவண்ணாமலையில் பாடப்பட்டது. மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர். வாதவூரார் என்றும் அழைக்கப்பட்டார். 9 -ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியனின் காலத்தைச் சேர்ந்தவர். அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார். பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் இயற்றியவை திருவாசகமும், திருக்கோவையாரும். திருவெம்பாவையை மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தங்கியிருந்த காலத்தில் இயற்றியதாகக் கடவுள் மாமுனிவர் எழுதிய 'திருவாதவூரர் புராணம்' கூறுகிறது.

 மாதர்கொள் மாதரெல்லாம்
மார்கழித் திங்கள் தன்னில்
ஆதிரை முன்ஈ ரைந்தே
ஆகிய தினங்கள் தம்மில்
மேதகு மனைகள் தோறும்
அழைத்திருள் விடிவ தான
போதிவர் தம்மிற் கூடிப்
புனற்றடம் ஆடல் செய்வார்.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்கச் சென்றபோது இளம்பெண்கள் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு முன்னதாகிய பத்து நாட்களில் கன்னியர் வீடுகள்தோறும் சென்று மற்ற பெண்களை அழைத்து விடியற்காலத்தில் தடாகத்தில் நீராடினார்கள். அவர்களுடைய இச்செயலைக் கண்ட மாணிக்கவாசகர், அப்பெண்கள் பாடியதாக ‘திருவெம்பாவை’யை அருளிச் செய்தார்.’ எனத் திருவாதவூரடிகள் புராணம் குறிப்பிடுகிறது. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் தமது திருப்பெருந்துறைப் புராணத்தில் அக் கருத்தையே ஏற்கிறார். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் திருவெம்பாவை தில்லையில் இயற்றப்பட்டதாகக் கருதி ஓர் ஆசிரியப்பா பாடியுள்ளார். இவர்களுக்கெல்லாம் காலத்தில் முற்பட்டவராகிய பெரும்பற்றப்புலியூர் நம்பி தமது திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் திருவெம்பாவை திருப்பெருந்துறையில் இயற்றப்பட்டதாகப் பாடியுள்ளார்.

பாடல் அமைப்பு

temple.dinamalar.com

திருவெம்பாவை இருபது எட்டடித்தரவுக் கொச்சகக் கலிப்பாக்களால் (வெண்டளையான் வந்த எட்டடி தரவுக் கொச்சகக் கலிப்பா) ஆனது. பாவை நோன்பிருக்கும் பெண்கள், தூங்கிக் கொண்டிருக்கும் தம்முடைய தோழியரை எழுப்பி, அனைவரும் ஒன்று சேர்ந்து நீர்நிலைகளுக்குக் கூட்டமாகச் சென்று நீராடி, தங்களின் வாழ்வு வளமாகவும், சிவனின் அடியவர்களே கணவனாக அமைய‌ அருளவும், சிவதொண்டைத் தொடரவும் வேண்டுவதாக திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.[1]

திருவெம்பாவையின் முதல் எட்டுப் பாடல்களும் துயிலெடைப் பாடல்கள் ( ஒருவர் மற்றவரைத் துயில் எழுப்பும் பாடல்) என்னும் வகையில் அடங்கும். ஒத்த வயதுடைய பெண்களின் பரிகாசம் தொனிக்கும் உரையாடல்களும் காணப்படுகின்றன.

  • இன்னும் என்ன உறக்கம் (வாழி ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்! ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?)
  • இன்னும் உறங்குகிறாயே, உன் செவிகள் செவிடாகிவிட்டனவோ (மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்),
  • பரஞ்சோதியின் மேல் பாசம் வைத்ததாகக் கூறினாயே, இப்போது மெத்தை மேல் பாசம் வந்துவிட்டதோ? (பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே),
  • இனிக்க இனிக்கப் பேசுவாயே, இப்போது எழுந்து கதவைத் திற (தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்),
  • உனக்குப் பொழுது விடியவில்லையா, தூங்கி வீண் பொழுது போக்காதே(கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே),
  • சிவனே சிவனே என நாங்கள் அரற்றுவதை உணரவில்லையா (சிவனே சிவனேயென்றோலம் இடினும் உணராய்ணராய்காண்),
  • நாளை நாந்தான் உங்களையெல்லாம் எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கு வெட்கப்படாமல் எங்கே போனாய்,(மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய்),
  • கல்நெஞ்சுடைய பேதையைப் போலத் துயிலில் கிடக்கிறாயே, தூக்கத்தின் பெருமைதான் என்ன?(வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்)

எனப் பலவிதமாக உறங்கும் தோழியரை எழுப்பிக்கொண்டு புனலாடச் செல்கின்றனர்.

'ஒன்பதாவது பாடலில் கன்னியர் தம் நோன்பின் நோக்கமாக (சங்கல்பமாக) சிவத்தொண்டையும், சிவனின் அடியார்களையே கணவனாகப் பெறவேண்டும் என்றும் சிவனிடம் வேண்டுகின்றனர் . பின் வரும் பத்து பாடல்களில் சிவனைப் பரம்பொருளாகப் பாடி,

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

எனப் பொய்கையில் பாய்ந்து, குடைந்து, நீந்தி நீராடுகின்றனர்.

பதினாறாம் பாடலில் நாடு செழிக்க மழை வரம் வேண்டி, தம்மை ஆட்கொண்டருளுமாறும் வேண்டுகின்றனர். பத்தொன்பதாம் பாடலில்

எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க,
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க

என இப்பிறவியில் சிவத்தொண்டைத் தவிர வேறொன்றும் வேண்டாம் என்றும் இவ்வரங்களை அருளினால் சூரியன் தன் திசையை மற்றினாலும் எமக்குக் கவலையில்லை எனச் சரணாகதி அடைகின்றனர். இறுதிப்பாடல் போற்றிப் பாடல்.

திருவெம்பாவையில் பக்தி செய்வதே முழுநோக்கம் என்று கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட நோன்போ அல்லது அதற்கான வரைமுறைகளோ கூறப்படவில்லை. 'தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்து ஈசன்' (2) என்றும், 'ஆரழல்போல் செய்யா, வெண்ணீறாடி – மையார் தடங்கண் மடந்தை மணவாளா' (11) என்றும், 'செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை – அங்கண் அரசே அடியோங்கட்கு ஆரமுதே'(11) என்றும், 'கண்ணார் அமுதமுமாய் நின்றான்' (18) என்றும், 'என்னானை என்னரையன் இன்னமுது' (7) என்றும் சிவபெருமானை விளித்துப் போற்றுதல் காணப்படுகிரது.

சிவனின் தன்மைகளாகக் கூறப்படுபவை
  • ஊழி முதல்வன், ஏழை பங்காளன்
  • உலகின் மிக முற்பட்டவற்றுக்கும் முற்பட்டவன், மிகப் புதியவற்றையும் விடப் புதியவன்.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

  • ஆதியும் அந்தமும் இல்லாதவன், இப்புடவிக்கு ஆதியும் அந்தமும் ஆனவன்( ஆதித் திறம்பாடி அந்தம்ஆ மாபாடி) இருத்தலாகவும், இன்மையாகவும், இரண்டுக்கும் அப்பாலாகவும் விளங்குபவன்
  • அடிமுடி காணாத் தன்மையன். (அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம் எனப்) புராண மொழியில் தரப்படும் ஏழுநிலைத் தாழ்மன மண்டலங்களிலும் ஊடுருவி நீளும் பாதங்களும், எவ்வகைப் பொருள் முடிவிலும் நீட்சிகொண்டு நிமிரும் முடியும் கொண்டவன்)

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே,
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்

  • மாதொரு பாகன், பல வடிவங்கள் கொண்டவன் (பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்)
  • பிறவித் துயர் நீக்குபவன்.தில்லையின் ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தபிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவன்.

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி

  • பெண்ணாகியும், ஆணாகியும், மூன்றாம் பாலினமாகியும் விளங்குகின்றவன். ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனையிலிருந்து வேறுபட்டும் நிற்பவன்.

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி

தைந்நீராடல்

தற்காலத்தில் பாவைப்படல்களான திருப்பாவையும், திருவெம்பாவையும் மார்கழி மாதத்தில் பாடப்படுகின்றன. மழைக்காலம் ஓய்ந்த மார்கழி, தை ஆகிய குளிர் மாதங்களில் அதிகாலை பொய்கை நீராடி பாவைப்பாடல் பாடும் வழக்கம் சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்து வருகிறது. மார்கழி மாத நிறைமதி (பௌர்ணமி) தொடங்கி தை மாத நிறைமதி நாள் வரையிலும் இளம் பெண்கள் பொய்கையிலும் , சுனைகளிலும் நீராடி நோன்பு நோற்றனர். சங்க இலக்கியங்கள் இச்செயலைத் ‘தைந்நீராடல்’ எனக் குறிப்பிடுகின்றன. "திருவாதவூரடிகள் புராணத்துட் கூறப்பட்ட படி மார்கழி நீராடல் திருவாதிரைக்குப் பத்துநாட்கள் முன் தொடங்கித் திருவாதிரையில் முடிவுபெறும் என்பதும், தைந்நீராடல் மார்கழித் திருவாதிரையில் தொடங்கி நடைபெறும் என்பதும் இங்கே கண்ட வேறுபாடாம். நூற்பிரமாணம் உள்ளனவும் இல்லனவுமாய் மக்கள் வழக்கவொழுக்கங்களிற் காணப்படும் இன்னோரன்ன நிகழ்ச்சிகள் இங்ஙனம் காலந்தரத்தில் வேறுபடுதல் இயல்பே." (பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், திருவெம்பாவை உரை , பக்கம் 14) பார்க்க: தைந்நீராடல்

உரைகள்

திருவெம்பாவைக்கு சி. சுப்ரமணிய தேசிகர், மு. கதிரேசன் செட்டியார், கி.வா. ஜகந்நாதன், ரா. சண்முகசுந்தரம் செட்டியார் உள்ளிட்ட பலர் உரை எழுதியுள்ளனர். திருவெம்பாவையின் முதல் எட்டுப்பாடல்கள் உரையாடற் போக்கில் அமைந்தன. அவற்றுள் ' பாசம் பரஞ்சோதி'(2) போன்ற சில பாடல்களில் எது உள்ளே இருப்பவள் பேச்சு, எது வெளியே இருப்பவர்கள் பேச்சு என்பதில் அறிஞர்கள் மாறுபடுகிறார்கள்சில பகுதிகள் உள்ளே இருப்பவள், வெளியே இருப்பவர்கள் ஆகிய இருவர் பேச்சா? அன்றி உள்ளே இருக்கும் ஒருத்தி பேச்சா? எனபதில் உரைகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ரா. சண்முகசுந்தர செட்டியார், பி.ஸ்ரீ. போன்றோர் இருவர் பேச்சாகக் கொண்டுள்ளனர். கி.வா.ஜ. மட்டும் இப்பகுதி முழுவதையும் உள்ளே இருப்பவளின் பேச்சாகக் கொண்டு உரையெழுதினார்[2].

தத்துவப் பொருள்

திருவெம்பாவைக்குத் தத்துவப் பொருள் கூற வந்த பழைய திருப்பெருந்துறைப் புராணம் திருவாசகச் சிறப்புரைத்த சருக்கத்தில், "மல இருளில் அழுந்திக் கிடந்துவிடாமல், இறைவன் அருளாகிய குளிர்ந்த நீரில் நீராட வருக என உயிர்களை அழைப்பதே திருவெம்பாவை" (“மலவிருளுற் றுறங்காமல் மன்னுபரிபாகர் அருள் செலமுழுக வருகவெனச் செப்பல் திருவெம்பாவை”) என வரைவிலக்கணம் கூறுகிறது. பக்குவப்பட்ட ஆன்மாக்கள், மும்மலங்களில் மூழ்கிக்கொண்டிருக்கும் பக்குவப்படாத ஆன்மாவின்மேல் அன்புகொண்டு அதனை எழுப்பி இறைவனின் அருள்பெற அழைத்துச்செல்வது என்பதே திருவெம்பாவையில் பொதிந்திருக்கும் தத்துவப்பொருள் என்று அறிஞர்களால் கருதப்படுகிறது. மனோன்மணி, சர்வதத தமனி, பலப்பிரமதனி, பலவிகரணி, கலவிகாரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமி என்னும் ஒன்பது சக்திகளுள் முன்னுள்ளவர் பின்னின்றவரைத் துயில் எழுப்புமுகமாகவும் எல்லோரும் கூடிப் பரம்பொருளைப் பாடுவதாகவும் அமைந்த பாடல்களின் தொகுதி திருவெம்பாவை எனத் தத்துவச் சார்புடையோர் கூறுவர். 'விண்ணுக்கொரு மருந்தை, வேத விழுப்பொருளை, கண்ணுக்கினியானைப் பாடி' என்ற வரிகளில் பெத்தான்மாவிற்கு(பந்த பாசங்களால் கட்டுண்ட ஆன்மாவுக்கு) காமியப் பொருளாகவும்(இச்சைப் பொருள், விரும்பிய நோக்கம்), ஞானியருக்கு நூலறிவாகவும், சிவஞானியருக்கு அநுபவப் பொருளாகவும் விளங்கும் இறையின் இயல்புகள் கூறப்படுகின்றன. இறுதியான போற்றிப் பாடல் படைத்தல் ('எல்லாவுயிர்க்கும் தோற்றமாம்'), காத்தல்(போகமாம் பூங்கழல்கள்), அழித்தல் (' எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்), அருளல் ('யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்'), மறைத்தல்('மால் நான்முகனும் காணாத புண்டரிகம்') ஆகிய இறைவனின் ஐந்து தொழில்களையும் குறிக்கிறது. திருவடிகள் அநாதி நித்யமானவை ('ஆதியாம் பாதமலர்', 'அந்தமாம் பூங்கழல்கள்') என்பதை அறிவிக்கின்றது. திருமந்திரம் நீங்கலாக மற்ற சைவத் திருமுறைகளுள் இறைவனின்(சிவனின்) ஐந்து தொழில்களையும் விளங்கக் கூறும் பாட்டு இது ஒன்றே என அறிஞர்கள் கருதுகின்றனர்.

இலக்கிய/பண்பாட்டு இடம்

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை தன் பக்திச்சுவைக்காகவும், ஞானப்பார்வைக்காகவும், இலக்கிய நயத்திற்காகவும் தமிழ்மக்களிடையே புகழ்பெற்றது. மார்கழி மாதத்தில் அனைத்து சைவ ஆலயங்களிலும் இல்லங்களிலும் பாடவும், ஓதவும் படுகிறது. 1950-களில் செம்மங்குடி ஶ்ரீனிவாசய்யர் பாணியிலும், இசையமைப்பிலும் எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருப்பாவை/திருவெம்பாவை இசைத்தட்டு மிகப் புகழ்பெற்றது[3]. நித்யஶ்ரீ மகாதேவன், ஷோபனா மற்றும் இளைய தலைமுறை இசைக்கலைஞர்களின் குரல்களிலும் திருவெம்பாவைப் பாடல்கள் ஒலிக்கின்றன. உருவ வழிபாட்டைக் கடந்து, ஆதியந்தமில்லா அரும்பெரும் சோதியாய், பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய், அடிமுடி காணாதவனாய், காலவெளிகளைக் கடந்து நிற்கும் தோற்றமாய், பெண்ணாய், ஆணாய், மூன்றாம் பாலினமாய், அம்மூன்றையும் கடந்ததாய், வேத விழுப்பொருளாய் சிவனைக் காணும் மாணிக்கவாசகரின் ஞானப் பார்வையே பக்திச்சுவையை விட திருவெம்பாவையில் மேலோங்கி நிற்பதாக உரையாசிரியர்கள் கருதுகின்றனர். பொய்கை நீராடும் சடங்குகளும், பாவைப் பாடல்கள் போன்ற இலக்கியங்களும் ஓர் இனத்தின் பண்பாட்டுத் தனித்தன்மையை விளக்கும் தொன்மையுருக்களாகின்றன(archetypes). பண்டைத் தமிழ் நிலத்தில் நடைபெற்ற தைந்நீராடல் என்னும் சமூக, பண்பாட்டுக் கொண்டாட்டத்தின் நீட்சியாய், பக்திக் காலத்தில் சைவ வழிபாட்டின் தத்துவங்களை மேலும் உட்செறித்து, சைவம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் ஓர் இன்றியமையாத அங்கமாய் விளங்குகிறது திருவெம்பாவை.

இலக்கிய நயம்-எடுத்துக்காட்டு

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த (13)

பங்குவளைக் கார்மலரால்: நீலநிறமான குவளையும் செந்தாமரையும் அருகருகே இருப்பதால் பொய்கை இறைவி (நீல நிறம்)-இறைவனைப்(செந்நிறம்) போல் தோன்றல்

அங்கங்குருகினத்தால்: (பொய்கை -குருகு(நாரைகள்)சூழ்ந்திருப்பதால் ,இறைவன் - இறைவி-அங்கு அங்கு உருகு இனத்தால்-ஆங்காங்கே பக்தியில் உருகியிருக்கும் மக்களால்)

பின்னும் அரவத்தால்: (அரவம்- ( (குளத்தில் நீராடும்) ஓசை, சிவனின் உடலைப் பின்னியிருக்கும்) பாம்பு,)

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்: ( பொய்கை-உடல் அழுக்கைக் கழுவ வரும் மக்களால் , இறைவன்- தன்+கன்மலங்கள் கழுவ வரும் மக்களால் )

என்ற வரிகளில் தாங்கள் நீராடும் பொய்கைக்கும், சிவ-பார்வதிக்கும் உள்ள ஒப்புமைகளைக் கூறும் பாடல் நயம் மிக்கது.[4]

திருப்பாவையுடன் ஒப்பீடு

திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரு பாவைப் பாடல்களுக்குமான மையம் பொதுவானது. எனினும் அவற்றிடையே நுட்பமான வேறுபட்ட பரிமாணங்களும் உள்ளன.. நீராடலின் சித்திரம் திருவெம்பாவையில் விரிகிறது. நோன்பின் சித்திரம் திருப்பாவையில் விரிகிறது.

இறைத்தொண்டும், எழுபிறவிகளிலும் இறைவனை மறவாமலிருப்பதுமே இரண்டிலும் வரங்களாக வேண்டப்படுகின்றன.

(எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்- திருப்பாவை

திருவெம்பாவையில் பக்தி செய்வதே முழுநோக்கம் என்று கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட நோன்போ அல்லது அதற்கான வரைமுறைகளோ கூறப்படவில்லை. திருப்பாவையில் நோன்பும் அதற்குண்டான வரைமுறைகளும் கூறப்பட்டுள்ளது. (நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்,மலரிட்டு நாம் முடியோம்).

திருப்பாவையில் திருமாலின் விபவநிலை(அவதாரங்களும்) அந்நிலையில் ஆற்றியவையும் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளன (அன்றிவ்வுலகம் அளந்தாய்', கஞ்சன் வயிற்றினில் நெருப்பென நின்ற நெடுமாலே). திருவெம்பாவையில் சிவனின் திருவிளையாடல்களோ மற்ற இயல்புகளோ குறிப்பிடப்படாமல் பரம்பொருள் தன்மை மட்டுமே பாடப்படுகிறது.

திருப்பாவை, திருவெம்பாவை இரண்டும் நாடு செழிக்க மழை பொழிய வேண்டுகின்றன. (தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் -திருப்பாவை , என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்-திருவெம்பாவை). மேகங்கள் கடல் நீரை முகந்ததும், மின்னல், இடி போன்றவற்றிற்கு இறைவனின் ஆபரணங்களையும், ஆயுதங்களையும் எடுத்துக்காட்டுகளாக அமைத்த விதத்திலும் திருப்பாவையும், திருவெம்பாவையும் ஒத்திருக்கின்றன[5]. திருப்பாவையில் நோன்பின் நிறைவில் கொண்டாட்டமாக நல்லுடையும் அணிகளும், பாலன்னமும் உண்ணும் பேறோடு கண்ணனின் தரிசனமும் பறை பெறுதல் என்னும் கைங்கரியப் பிராப்தியும் (இறைத்தொண்டு செய்யும் வரம்) கிடைக்கின்றன. திருவெம்பாவையில் நோன்பும், கொண்டாட்டங்களும் இல்லை, கைங்கர்யப் பிராப்தி மட்டுமே வேண்டப்படுகிறது.

திருவெம்பாவை- சில பாடல்கள் எளிய பொருளுடன்

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

(ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அருட்பெருஞ்சோதியப் பாடுவதைக் கேட்டும், உறங்குகிறாயோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ?மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். (குறிப்பு: பக்குவம் நிறைந்தோர் சிவபெருமானின் திருநாமத்தைக் கேட்டவுடனே தம்மை மறந்து இருப்பர் எனக் கூறப்பட்டது). அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய நீ விழித்தெழாதிருப்பது ஏனோ?

ஏழை பங்காளனைப் பாடேலோரெம்பாவாய்

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

(அதிகாலையில் கோழி கூவ, எங்கும் குருகுகள் ஓசையிட, இசை ஒலிக்க, எங்கும் வெண்சங்கு முழங்குகிறது. ஒப்பற்ற பரஞ்சோதியான சிவபெருமானது, அளவற்ற கருணையைப்பாடினோம். இவை உனக்குக் கேட்கவில்லயாஇது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான உன் பக்தியும் இவ்வளவுதானா? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஏழை பங்காளனான உமை பாகனையே பாடுவாயாக)

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

(முற்பட்டனவாகிய பழமைக்கும் முற்பட்ட பழமையான பொருளே! புதியவற்றிற்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இவ்வரம் கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் குறையற்றவர்களாக இருப்போம்)

ஆதித் திறம் பாடி அந்தமா மாபாடி

காதார் குழை ஆடப், பைம்பூண் கலன் ஆடக்,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆடச்,
சீதப் புனல் ஆடிச், சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப்பொருள் ஆமா பாடிச்,
சோதி திறம் பாடிச், சூழ்-கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை-தன்
பாதத் திறம் பாடி ஆடு, ஏலோர் எம்பாவாய்.

( காதில் பொருந்திய குழை அசையவும், பசும்பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் தலையில் அணிந்த கொன்றையைப் பாடி, அவன் இப்புடவிக்கு ஆதியும் அந்தமுமான தன்மையைப் பாடி, நம் மனப்பக்குவத்திற்கேற்ப நம்மை ஆக்கமாகப் பக்குவப்படுத்தி, உயர்த்திய, வளையலை உடைய உமையம்மையின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.)

எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்க

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று,
அங்கு அப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்,
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்,
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க,
எம் கை உனக்கு அல்லாது எப் பணியும் செய்யற்க,
கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க,
இங்கு இப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்,
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு, ஏலோர் எம்பாவாய்.

(எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிற தெய்வங்களுக்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எந்த திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன?)

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர்,
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்,
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்,
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணை அடிகள்,
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்,
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்,
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு, ஏலோர் எம்பாவாய்.

( எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் மலரடிகள் போற்றி; எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகள் போற்றி; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்னடிகள் போற்றி.;எல்லாவுயிர்களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலடிகள் போற்றி.; எல்லாவுயிர்களுக்கும் முடிவிற்குக் காரண்மான பொன்னடிகள் போற்றி; திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரைகள் போற்றி;நாம் உய்யும்படி காத்து ஆட்கொண்டருளும் தாமரை மலரடிகள் போற்றி -இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.)

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கீழ்ப்பெண்ணாத்தூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வலைத்தளம்
  2. ஈசனின் இன்ப அன்பு, முனைவர் தெ.ஞானசுந்தரம், தினமணி, டிசம்பர் 20, 2013
  3. திருப்பாவை, எம்.எல். வசந்தகுமாரி, youtube.com(playlist) uploaded by Madhura ganam
  4. பைங்குவளைக் கார்மலரால் -தினமணி, டிசம்பர் 25,2017,
  5. ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் . (திருப்பாவை-4)
    முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
    என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
    மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
    பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
    என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
    தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
    முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
    என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.(திருவெம்பாவை-16


✅Finalised Page