under review

தைந்நீராடல்

From Tamil Wiki

தற்காலத்தில் பாவைப்படல்களான திருப்பாவையும், திருவெம்பாவையும் மார்கழி மாதத்தில் ஆலயங்களில் ஓதப்படுகின்றன. மழைக்காலம் ஓய்ந்த மார்கழி, தை ஆகிய குளிர் மாதங்களில் அதிகாலை பொய்கை நீராடி பாவைப்பாடல் பாடும் வழக்கம் சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்து வருகிறது. மார்கழி மாத நிறைமதி (பௌர்ணமி) தொடங்கி தை மாத நிறைமதி நாள் வரையிலும் இளம் பெண்கள் பொய்கையிலும் , சுனைகளிலும் நீராடி நோன்பு நோற்றனர். சங்க இலக்கியங்கள் இச்செயலைத் ‘தைந்நீராடல்’ எனக் குறிப்பிடுகின்றன.

சந்திரமானம்-மாதங்களின் கணிப்பு முறை

இந்தியாவின் காலக் கணிப்பு முறை சூரியமானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி அமைந்துள்ளது. தற்காலத்தில் தமிழகத்தில் நாம் பின்பற்றும் மாதங்கள் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சூரிய மாதங்கள். பண்டைக்காலத்தில் சந்திரமானம் என்ற முறை புழக்கத்தில் இருந்ததை சங்க இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது.

சந்திரமானம் என்பது நிலவின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. சந்திரமானம் அமாந்தம்(அமாவாசையோடு முடிவுறும் மாத காலம்), பௌர்ணமாந்தம் (பௌர்ணமியோடு முடிவு பெறும் மாத காலம்) என இருவகைகளாகக் கணக்கிடப்பட்டது. அமாந்த முறையில் ஒரு கருநிலவு நாள்(அமாவாசை) தொடங்கி அடுத்த கருநிலவில் முடியும் கால அளவு ஒரு மாதம் என்றும், பௌர்ணமாந்த முறையில் முழுநிலவு தொடங்கி மறு முழுநிலவில் முடியும் கால அளவு ஒரு மாதம் என்றும் கணக்கிடப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற இடங்களில் அமாந்த முறை பின்பற்றப்படுகிறது. (தெலுங்கு வருடப் பிறப்பு கருநிலவுக்கு அடுத்த தினம் துவங்குகிறது). பண்டைத் தமிழகத்தில் பௌர்ணமாந்த முறை பின்பற்றப்பட்டிருக்கலாம்.

பௌர்ணமாந்த முறைப்படி மார்கழித் திங்களின் இடையில் முழுநிலவுக்குப் பின் வரும் மாதம் - மார்கழியின் பிற்பகுதியும், தையின் முற்பகுதியும் ஆகும். அதனால் தான் மார்கழி நோன்பு 'மார்கழி நீராடல்' என்றும், 'தைந்நீராடல்' என்றும் இருவகையாக வழங்கப் பெற்றது. (பேராசிரியர் மு.இராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி பக்கம் 196). பௌர்ணமாந்தத்தில் மதியை(சந்திரனைக்) கொண்டு மாதங்கள் கணக்கிடப்பட்டிருக்கலாம். சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொரு மாதத்தின் பெயரும் அந்தமாதத்தில் முழுநிலவு தினத்தின் விண்மீனின் பெயராலேயே அழைக்கப்படுகிறது( சைத்ரம்(சித்திர)-சித்திரை,வைகாசி- விசாகம், புஷ்யம்(தை)-பூசம், மார்கஷிரம்(மார்கழி)-மிருகசீரிஷம்). மார்கழி முழுநிலவு நாள் முதல் தை முழுநிலவு நாள் வரை தை மாதம் என்று வழங்கியிருக்கலாம்..[1][2]

சங்க இலக்கியத்தில் தைந்நீராடல்

தைந்நீராடலைப் பற்றிய குறிப்பு பரிபாடல், ஐங்குறுநூறு[3], நற்றிணை[4], கலித்தொகை[5], குறுந்தொகை[6] போன்ற சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது. பரிபாடலில் திருவாதிரை அன்று தொடங்கி வைகையில் முதிய பெண்கள் முறைமை கூறி வழிகாட்ட கன்னியர் 'அம்பா ஆடல்' என்னும் தை நீராடிய குறிப்பு காணப்படுகிறது.

கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடிப் பருமண் வருவியன்
ஊதையூர் தர வுறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்
றையன் மகளிர் ஈரணி புலர்த் தர
வையை நினக்கு மடைவாய்த்தன்று.”
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
            (பரிபாடல் -( 74-87) நல்லந்துவனார்)

.குளிரால் நடுங்குகின்ற முன்பனிப் பருவத்தில் சூரியனின் வெம்மை தாக்காத கடைமாரியை உடைய மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்து முழுமதிநாளில் அந்தணர் வேள்வியையும் வழிபாட்டையும் தொடங்கினர், கன்னியர் முதுமகளிர் முறைமை கூறி வழிகாட்ட, தம் அன்னையரோடு வைகையில் 'அம்பாவாடல்' எனப்படும் தைந்நீராடினர்.

மார்கழி மாதத்து மதிநிறைந்த நன்னாளிலேயே ஆண்டாள் பெண்களை நீராட அழைக்கிறாள் என்பதும் நோக்கத்தக்கது (திருப்பாவை- 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளான் நீராடப் போதுவீர்').

இளம் பெண்கள் தம் தாயோடு நீராடியதால் இது 'அம்பா ஆடல்' எனப் பெயர்பெற்றது என பரிமேலழகர் தம் உரையில் குறிப்பிடுகிறார். வேறு சில உரையாசிரியர்கள் பராசக்தி அன்னையை வேண்டி நோன்பு நோற்றதால் 'அம்பா ஆடல்' எனப் பெயர் வந்ததாகக் கருதுகின்றனர். தைந்நீராடலின் போது பெண்கள் நல்ல கணவன் தமக்கு அமைய வேண்டுமென்று நோன்பு நோற்றதாகப் பரிபாடலுக்கு உரை எழுதிய பரிமேலழகர், கலித்தொகைக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். மார்கழி மாதத்துத் திருவாதிரையன்று தொடங்கிய விழாவிற்குரிய தெய்வம் சிவபெருமான் என்று பொ.வே.சோமசுந்தரனார் பரிபாடல் உரையில் குறிப்பிடுகிறார்.

திருவெம்பாவையும் தைந்நீராடலும்

மாதர்கொள் மாதரெல்லாம்
மார்கழித் திங்கள் தன்னில்
ஆதிரை முன்ஈ ரைந்தே
ஆகிய தினங்கள் தம்மில்
மேதகு மனைகள் தோறும்
அழைத்திருள் விடிவ தான
போதிவர் தம்மிற் கூடிப்
புனற்றடம் ஆடல் செய்வார்.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்கச் சென்றபோது இளம்பெண்கள் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு முன்னதாகிய பத்து நாட்களில் வீடுகள்தோறும் சென்று மற்ற பெண்களை அழைத்து விடியற்காலத்தில் குளிர்ந்த நீரையுடைய தடாகத்தில் நீராடினார்கள். அவர்களுடைய இச்செயலைக் கண்ட மாணிக்கவாசகர், அப்பெண்கள் பாடியதாக ‘திருவெம்பாவை’யை அருளிச் செய்தார்.’ எனத் திருவாதவூரடிகள் புராணம் குறிப்பிடுகிறது.

அழகிய பாவை செய்து நீராடி வழிபட்டமையே அம்பாவாடல் என்னும் பெயர் அமையக் காரணம் எனவும் கருதப்படுகிறது. அம்+பாவையாடல் எனப் பிரித்துப் பொருள் கொள்ள வழியுள்ளது. ‘பாவையாடல்’ என்னும் தொடர் சங்க காலத்திலேயே தமிழரின் முயற்சிச் சுருக்கம் காரணமாக ‘பாவாடல்’ என்று சுருங்கி இருக்க வேண்டும். திருவாதவூரடிகள் புராணத்தில் கூறப்பட்ட படி மார்கழி நீராடல் திருவாதிரைக்குப் பத்துநாட்கள் முன் தொடங்கித் திருவாதிரையில் முடிவுபெறும் என்பதும், தைந்நீராடல் மார்கழித் திருவாதிரையில் தொடங்கி நடைபெறும் என்பதும் இங்கே கண்ட வேறுபாடாம். நூற்பிரமாணம் உள்ளனவும் இல்லனவுமாய் மக்கள் வழக்கவொழுக்கங்களிற் காணப்படும் இன்னோரன்ன நிகழ்ச்சிகள் இங்ஙனம் காலந்தரத்தில் வேறுபடுதல் இயல்பே." (பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், திருவெம்பாவை உரை , பக்கம் 14)

தைந்நீராடல் மார்கழி நீராடலாக மாற்றம்பெற்று வழங்கல்

"பக்தி இயக்க காலத்தில் அம்பாவாடல் மார்கழி நீராடல் என்று பெயர் மாற்றம் பெற்றதுடன்; தைந்நீராடல் தனிப்பொருளும் சிறப்பும் பெற்றது" என முனைவர் ச.கண்மணி கணேசன் குறிப்பிடுகிறார்[7]. ஆண்டாளின் திருப்பாவையின் ”மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”(பா-4) என்பதிலிருந்து மார்கழி நீராடல்’ என்னும் புதுப்பெயர் வழக்கு தோன்றியது அறியப்படுகிறது. நாச்சியார் திருமொழியில்

தையொரு திங்களும் தரைவிளக்கித் தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்*
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*
உய்யவும் ஆங்கொலோ? என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்*
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! 1

என்று தை மாதம் தெருவில் கோலமிட்டு, அலங்கரித்து கன்னியர் காமனை வழிபட்டதை அறிகிறோம்.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும் பெண்கள் கூடிப் பாடிய பிறகு இறுதியில்,

      “போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்”(பா-20) என முடிகிறது.

மார்கழி நீராடல், தைந்நீராடல் என்று இருவேறு கொண்டாட்டமாகத் திரிந்தமையால் பக்தி இயக்கத்திற்குப் பிற்பட்ட காலத்தில் பாவைநோன்பு திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடங்கியமை மாறி, மார்கழி முதலிலிருந்தே தொடங்கியிருக்கலாம்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. பாவை நோன்பு மார்கழி நீராடலா, தை நீராடலா, தென்றல் இதழ், ஜனவரி 2007
  2. பாவைப் பாட்டும் பாவை நோன்பும் – சௌந்திர. சொக்கலிங்கம்
  3. நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
    தைஇத் தண் கயம் போல

  4. இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
    தைஇத் திங்கள் தண் கயம் படியும்பெருந் தோட் குறுமகள்

  5. வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ
    தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?

  6. பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
    இத் திங்கள் தண்ணிய தரினும்,
    வெய்ய உவர்க்கும் என்றனிர்

  7. பொம்மைக் கல்யாணம் என்ற விளையாட்டின் வேர், முனைவர் கண்மணி கணேசன், மின்தமிழ் மேடை


✅Finalised Page