under review

நற்றிணை

From Tamil Wiki

நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் ஐந்திணைகளிலும் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல். எட்டுத்தொகை நூல்களில் 'நல்' என்னும் அடைமொழியைப் பெற்ற ஒரே நூல்.

பதிப்பு, வெளியீடு

நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் (1915). பாட்டும் தொகையும் சங்க இலக்கியப் பதிப்பு (மூலம்) 1940-ல் வெளிவந்தது. நற்றிணை மூலம் மர்ரே ராஜம் பதிப்பு 1957-ல் வெளிவந்தது. 1962-ம் ஆண்டில் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக பொ.வே. சோமசுந்தரனார் உரையுடன் வெளிவந்தது. ஔவை சு. துரைசாமிப் பிள்ளையின் உரையுடன் இரு பாகங்களாக 1967, 1968 ஆண்டுகளில் வெளிவந்தது. புலியூர்க் கேசிகன் உரையுடன் 1967-லும் 1980-லும் இரு பதிப்புகள் வெளிவந்தன.

தொகுப்பு

நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது. நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தவரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று. 56 பாடல்களை எழுதியவர்களின் பெயர்கள் அறியவரவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்கள் 192 புலவர்கள்.

பாடியோர்

நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 192 புலவர்கள் பாடியுள்ளனர். 56 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.

பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள்

  • வண்ணப்புறக் கந்தத்தனார்
  • மலையனார்
  • தனிமகனார்,
  • விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
  • தும்பிசேர்க்கீரனார்
  • தேய்புரிப் பழங்கயிற்றினார்
  • மடல் பாடிய மாதங்கீரனார்

நூல் அமைப்பு

நற்றிணை கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடையதால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நானூறு பாடல்களில் 234-ம் பாடல் முழுமையாகவும், 385-ம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.

பாடல்அடிகள் பாடல்கள் திணை பாடல்கள்
7 1 குறிஞ்சித் திணை 132
8 1 முல்லைத் திணை 30
9 106 மருதத் திணை 32
10 96 நெய்தல் திணை 102
11 110 பாலைத் திணை 104
12 77
13 8

நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.

பாடல்கள் தலைவன், தலைவி, தாய், செவிலி, தோழி, பாங்கன் ஆகியோரின் கூற்றாக அமைந்துள்ளன. ஐவகை நிலங்களிலே வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வு முறை, கற்பொழுக்கம், களவொழுக்கம், கூடல், ஊடல், பிரிவு, குடும்ப வாழ்க்கை போன்றவை பாடுபொருளாக அமைகின்றன. ஐவகைத் திணைப் பாடல்களும் தம் முதல், உரி, கருப்பொருள்களும் பொருந்தி இயற்கை வர்ணனை, உவமைகள் கூடி அமைந்துள்ளன.

பாடப்பட்ட அரசர்கள்

நற்றிணை அகத்துறை சார்ந்ததாயினும், மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. குறுந்தொகைப் பாக்களில் குறிக்கப்பட்டாற் போலவே சேர சோழ பாண்டியர் தமக்குரிய பொதுப் பெயர்களால் நற்றிணைப் பாக்களில் குறிக்கப் பட்டுள்ளனர்.

அரசர்கள்
  • |அதியமான் நெடுமான் அஞ்சி ( 381 )
  • அழிசி ( 87, 191 )
  • அருமன் ( 367 )
  • அன்னி ( 180 )
  • ஆய்அண்டிரன் ( 167, 237 )
  • உதியன் ( 113 )
  • ஓரி ( 6, 52, 265, 320 )
  • காரி ( 320 )
  • கிள்ளிவளவன் ( 141, 390 )
  • குட்டுவன் ( 14, 105, 395 )
  • கொங்கர் ( 10 )
  • செம்பியன் ( 14 )
  • செழியன் ( 39, 298, 340, 387 )
  • சென்னி ( 265 )
  • கொல்லிப்பாவை ( 185, 192, 201
  • செம்பியன் ( 14 )
  • செழியன் ( 39, 298, 340, 387 )
  • சென்னி ( 265 )
  • சேந்தன் ( 190 )
  • சோழர் ( 10, 87, 281, 379, 400 )
  • தழும்பன் ( 300 )
  • தித்தன் ( 58 )
  • நன்னன் ( 270, 391 )
  • |பசும்பூண்சோழர் ( 227 )
  • பசும்பூண் வழுதி ( 358 )
  • பழையன் ( 10 )
  • புல்லி ( 14 )
  • பூழியர் ( 192 )
  • பெரியன் ( 131 )
  • பொறையன் ( 346 )
  • மலையன் ( 77, 100, 170 )
  • மழவர் ( 52 )
  • மாயோன் ( 32 )
  • மிஞிலி ( 265 )
  • முடியன் ( 390 )
  • முள்ளூர் மன்னன் ( 291 )
  • மூவன் ( 18 )
  • வடுகர் ( 212 )
  • வழுதி ( 150 )
  • வாணன் ( 340 )
  • வாலியோன் ( 32 )
  • விராஅன் ( 350 )
  • வேளிர் ( 280 )

ஊர்களின் பெயர்கள்

  • தொண்டி - சோனுக்குரிய துறைமுக நகரம் {8, 195),
  • போர் - பழையன் என்ற சிற்றரசனுக்கு உரியது (10),
  • கொற்கை - பாண்டியர் துறைமுக நகரம் (23)
  • மாந்தை - சேர நாட்டுக் கடற்கரை ஊர் (35, 395)
  • காண்ட வாயில் - கடற்கரை ஊர்
  • கூடல் - பாண்டியர் தலைநகரம் (39, 298)
  • கிடங்கில் (65)
  • சாய்க்காடு(73)
  • பொறையாறு (131)
  • அம்பர் (141)
  • ஆர்க்காடு (190)
  • மருங்கூர்ப்பட்டினம் - பாண்டிய நாட்டுக் கடற்கரை நகரம் (358)
  • புனல்வாயில் (260)
  • இருப்பையூர் (260)
  • பாரம் (265)
  • ஆறேறு (265)
  • குன்றூர் (280}
  • கழாஅர் (281)
  • முள்ளூர் (291)
  • ஊனூர் (300)
  • வாணன் சிறுகுடி (340)
  • அருமன் சிறுகுடி (357)
  • குடந்தைவாயில் (379)
  • வெண்ணி (390).

பாடல்கள் வழி அறியவரும் செய்திகள்

நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகளை அறியலாம். நிலங்களுக்கேற்ற முறையில் பண்பாடு – சடங்குகள் அமைகின்றன.

  • நாட்களை எண்ண சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கம் இருந்தது
  • யாமக் காவலர் இரவில் ஊரைச் சுற்றிவந்து மக்களைக் கதவுகளை அடைத்துக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர்.குறிஞ்சிநில ஊர்களில் ஊர்க்காவல் இருந்தது. காவலர் குறிஞ்சி என்னும் பண்ணைப் பாடிக்கொண்டு இரவு முழுமையும் தூங்காமல் ஊரைக் காவல் காத்தனர் (255), நெய்தல் நில ஊர்களிலும் காவலர் யாமந்தோறும் மணியடித்து ஓசை யெழுப்பி, “தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்,” என்று கூறிச்சென்றனர் (132).
  • பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கம் இருந்தது(98)
  • மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கமும் இருந்தது
  • நில நடுக்கம் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது(201)
  • ஆறு மீன்களுடன் தோன்றும் கார்த்திகை மாதத்தில் செல்லும் ஒளிமண்டலக் கொடி பற்றிய குறிப்பு (202)
  • கழைக்கூத்தாடிகள் வளைத்துத் திரித்த வலிமையான கயிற்றின்மீது நடந்து வித்தை காட்டினர்(95)
  • பருத்தி உடைகளுக்குக்கஞ்சி போடும் வழக்கம் இருந்தது(90)
  • நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் எனக் கருதப்பட்டன (160)
  • காகத்துக்கு குயவன் பலிச்சோறு இடுதல்(293)
  • உடலில் வீக்கமோ வலியோ இருந்தால் அரக்கு, மெழுகு, தானியங்களின் மாவு இவற்றால் பத்துப் போட்டுக் காயவைக்கும் வழக்கம் இருந்தது
  • திருமணத்துக்கு முன்னர், தலைவியின் சிலம்பைக் கழற்றி நீக்கும் சிலம்புகழி நோன்பு என்னும் வழக்கம் இருந்தது (2)
  • தகுதி உடையவர் பெயரையும் அவர் வாழும் ஊரையும் ஏட்டில் வரைந்து ஊர்ப்பொது மன்றத்தில் வைத்திருப்பது வழக்கம் (365).
  • பல நாடுகளிலிருந்தும் கப்பல்கள் வந்து துறைமுகத்தில் தங்குவது வழக்கம் (293) . கடைத்தெரு நியமம் எனப்பட்டது (45). தமிழ் வாணிகர் வாணிகத்தின் பொருட்டு வடநாட்டிற்குச் சென்றனர்; கங்கையாற்றில் கலத்தில் சென்றனர் (189).
  • பரதவர் மீனை விற்றுக் கள்ளைப் பெற்றனர். உப்பு வாணிகர் உப்பை விற்று நெல்லைப் பெற்றனர் (183). அக்காலத்தில் பண்டமாற்று வழக்கில் இருந்தது தெரிகிறது
  • தமிழகத்தில் ஒவியர் இருந்தனர் (118, 146, 177, 182, 268). பாணர் சீறியாழ் (38), பேரியாழ் (40) வாசித்தனர். முழவு (67), மயிர்க்கண் முரசு (93), தண்ணுமை (130), கிணைப்பறை (108), தொண்டகச் சிறுபறை (104), குடமுழா (220), குழல் (69) முதலிய இசைக் கருவிகள் வழக்கில் இருந்தன. குறிஞ்சிநில மகளிர் நெல் முதலியவற்றைக் குற்றும்போது பாடிக்கொண்டே குற்றினர் (379).
  • அக்கால் மக்கள் தைத்திங்கள் முதல் நாளில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்டனர் (22). தை மாதத்தில் குளிர்ந்த நீரில் நீராடிப் பெண்கள் நோன்பிருந்தனர் (80).
  • நீண்ட சடையையும் அசையாத மெய்யையும் கொண்டு மலையில் தவம் செய்பவர்(தவசியர்) அக்காலத்தில் இருந்தனர் (141). கடற்கரையில் பலவகைக் கொடிகள் படர்ந்த இடங்களில் அக்கொடிகளை அறுத்து அவ்விடங்களில் நோன்பினைக் கொண்ட மாதர் உறைவது வழக்கம். அவர்கள் ‘படிவ மகளிர்’ எனப்பட்டனர் (272). இவர்கள் கவுந்தியடிகள் போன்ற சமண சமயப் பெண் துறவிகளாக இருக்கலாம்

உவமைகள்

  • உடலில் போடப்படும் அரக்குப் பத்து காயக் காய செதில் செதிலாக அடுக்குகளாகக் காணப்படும். அப்படிப்பட்ட ஒழுங்கான வரி அடுக்குகளைக் கொண்ட பிடவம் பூ(25)
  • மண்ணாற் செய்து சுடப்பட்ட தயிர்த்தாழியில் மத்தாற் கலக்கப்பட்டபோது வெப்பம் மிக்குழி நன்கு திரளாது சிதறிக்கிடந்த வெண்ணெய் போன்ற உப்புப் பூத்த களரையுடைய பாலை (84)
  • தலைவியின் தோள் தலைவனுக்கு பெரியன் ஆளும் பொறையாறு போல இன்பம் தருவது(134)
  • தலைவி நொச்சி நிழலில் மாணிக்கக் கல்லில் செய்த பொம்மை நடை கற்றுக்கொண்டு செல்வது போல் நடந்து தெற்றி ஆடுவாள் (184)
  • கண்ணிற்கு ஒரு துன்பம் என்றால் விரைந்து சென்று தீர்க்கும் கை போல உயர்ந்தோர் பிறர் துன்பகாலத்தில் யோசிக்காது உதவுவர்(216)
  • தழும்பனின் ஊணூரில் பிச்சை ஏற்க வரும் யானையைப் போல் தலைவன் தலைவியின் சமையல் கூடத்தின் கூறையைத் தொட்டுக்கொண்டு நின்றான் (300)
  • அகன்ற வானத்தில் தோன்றும் முழு நிலாவைக் கருப்புப்பாம்பு சிறிதளவு விழுங்கியதைப் போல் கருத்த கூந்தலுக்குள்ளே தெரியும் தலைவியின் முகம் (377)
உள்ளுறை

உப்பு வணிகரின் வண்டிச் சக்கர ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு நிற்பது இயற்கைக்காட்சி. காட்சிக்கு உள்ளே, தலைவனின் மணமுரசொலி கேட்டுத் தலைவியைப் பழிதூற்றி வந்தவர்கள் திடுக்கிட்டு அடங்கும் வாழ்க்கைக் காட்சி மறைவாகப் பொதிந்திருக்கிறது

வீட்டு முற்றத்திலுள்ள பலாமரத்தின் பழங்களை குரங்கு உண்டு, விதைகளை உதிர்ப்பது, தலைவன் தலைவியோடு களவொழுக்கத்தில் ஈடுபட்டு மகிழ்ந்து, அதன் பலனாய் ஊரில் அலரைப் பரப்புவதைக் குறிப்பாக உணர்த்துகிறது(373)

சிறப்புகள்

நற்றிணையில் உள்ள பாடல்கள் சங்ககால மக்களின் அக வாழ்வையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கின்றன. நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறியவும் பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன.

மூலிகை மருத்துவர்கள் மரமே இறந்துவிடும்படி வேரோடு மூலிகையைப் பறிக்க மாட்டார்கள். தவம் மேற்கொள்வோர் உயர்ந்த தவமானாலும் தன் உயிர் போகுமளவு தவத்தை மேற்கொள்ள மாட்டார்கள். அதுபோல நல்ல அரசன் குடிகளின் நலம் கெடும்படி வரி விதிக்க மாட்டான் (226) என்று நல் அரசனுக்கான நீதியை நற்றிணை குறிப்பிடுகிறது. உண்மையான செல்வம் பொன்னோ, பொருளோ அல்ல, பிறர் துன்பத்தில் உதவும் தன்மையே(210) என அறிவுறுத்துகிறது.

பிற்காலத்தில் சிறந்து விளங்கிய 'தூது' என்ற சிற்றிலக்கியத்திற்கு முன்னோடியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் தன்மை காணப்படுகிறது. உவமம், உள்ளுறை, தற்குறிப்பேற்றம் போன்ற பல அணிகளும், நயங்களும் பயின்று வருகின்றன.

பாடல் நடை

கடவுள் வாழ்த்து

பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்

மாநிலம் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக
விசும்பு மெய்யாகத் திசை கையாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற வெல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே.

குறிஞ்சி

பாடியவர் - பெருங்குன்றூர்கிழார்

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

முல்லை

பாடியவர் - இடைக்காடனார்

மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், . . . . [05]
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க - பாக! - நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் . . . . [10]
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
'வந்தீக, எந்தை!' என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.

மருதம்

பாடியவர் - மாங்குடி கிழார்.

தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, . . .
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை-
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, . . . .
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.

உசாத்துணை


✅Finalised Page