under review

வெள்ளிவீதியார்

From Tamil Wiki

வெள்ளிவீதியார், சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.

வாழ்க்கைக் குறிப்பு

வெள்ளிவீதியாரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் பெண்பாற்புலவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆதிமந்தி போலக் காதலனைத் தேடிப் பித்துப் பிடித்து நான் அலையமாட்டேன் என தனது பாடலில் குறிப்பிடுவதைக் கொண்டு வெள்ளிவீதியாரும் ஆதிமந்தியாரும் ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகிறது. வெள்ளிவீதியாரின் பாடல்கள் அனைத்தும் அகத்திணைப் பாடல்கள். வெள்ளிவீதியார், தம் சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவற்றையே பாடல்களாக வடித்துள்ளதாக நச்சினார்க்கினியர் தனது உரையில் குறிப்பிடுகிறார்.

சங்ககால பெண்பாற் புலவர்களில் ஒருவரான ஔவையார் எழுதிய பாடலொன்றில் (அகம் 147) வெள்ளிவீதியார் பற்றிய குறிப்பு உள்ளது. தலைவன் பொருள் தேடப் பிரியப் போகும்போது, தலைவி தானும் வெள்ளிவீதி போலத் தலைவனுடன் செல்ல விரும்புவதாகக் குறிப்பிடுகிறாள். வெள்ளிவீதியார் பொருளீட்டச் சென்ற தன் கணவனுடன் தானும் சென்றார் எனத் தெரியவருகிறது.

இலக்கிய வாழ்க்கை

வெள்ளிவீதியார் இயற்றியதாக கீழ்காணும் 13 பாடல்கள் சங்க இலக்கிய தொகையில் இடம்பெற்றுள்ளன;

பாடல்கள் வழி அறியவரும் செய்திகள்

  • வாகை மரத்தின் காய்ந்த நெற்றுகள் (உழிஞ்சில் நெற்று) காற்றில் கலகலக்கும்போது கயிற்றில் ஏறி ஆடுவோர் முழக்கும் பறையைப் (ஆடுகளப் பறையைப்) போல ஒலியெழுப்பும் . ஆட்டன் அத்தி காவிரி வெள்ளத்தில் அடித்துக்கொண்டுபோகப்பட, கரைவழியே ஊர் ஊராகச் சென்று “என் கணவனைக் கண்டீரா?” என்று ஆதிமந்தி தேடினாள்(அகம் 45)
  • குறுக்கைப் பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் திதியன் என்ற அரசன் அன்னியின் புன்னையை வெட்டி வீழ்த்தினான். அதைக் கொண்டாட வயிரியர் யாழிசைத்துப் பாடினர்(அகம் 45).
  • உறவுகளோடு மகிழ்ந்து விழாக் கொண்டாடும் மக்கள் தாமும் தம் சுற்றமும் மகிழ்ந்து வாழ தெய்வத்திடம் வேண்டி நின்றனர்.
  • கரும்பு வயல்களில் மணலால் உயர்ந்த பாத்திகள் போடப்பட்டிருந்தன(குறு 149).
  • பொன்மாலை அணிந்த வானவரம்பன் ஒரு சேர மன்னன். கடலிலிருந்து புயல்காற்று வீசுவது போல வேல் வீசி கோட்டைகளைத் தாக்குபவன்.
  • துவைக்கும் துறையில் துவைத்த தூய்மையான வெள்ளை ஆடைகளின் நிறத்தையுடைய சிறகுகளையுடைய வெள்ளைக் குருகிடம் எங்கள் ஊருக்கு வந்து குடிக்கும் நீர் துறைகளில் சினைக் கெளிற்று மீன்களை நிறைய உண்டு விட்டு, தலைவன் ஊருக்குச் சென்று தன் வருத்தத்தைக் கூறுமாறு வேண்டுகிறாள் (நற்றிணை 70)

பாடல் நடை

அகநானூறு 45

திணை: பாலை

"வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே, காதலர். மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார்,
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!

அகநானூறு 362

திணை - குறிஞ்சி

'பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத்
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே;
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து,
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய,
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி,
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின்,
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே;
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச்
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்,
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்,
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே!

குறுந்தொகை 27

திணை - பாலை

கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குலென் மாமைக் கவினே.

நற்றிணை 70

திணை - மருதம்

'சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,
சினைக் கௌற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ-
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!

உசாத்துணை


✅Finalised Page