under review

குறுந்தொகை

From Tamil Wiki
panuval.com

குறுந்தொகை சங்க இலக்கியத்தில் பதினெண்மேல்கணக்குத் தொகையான எட்டுத்தொகையில் இடம்பெறும் இரண்டாவது நூல். குறுந்தொகை ஓர் அகப்பொருள் நூல். ஐந்து அகத்திணைகளிலுமாக 401 பாடல்கள் கொண்டது. உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் காட்டப்பட்டது. சங்ககாலத்தின் வாழ்வியல், பண்பாடு பற்றிய செய்திகளை அறியத்தருகிறது. அழகிய உவமைகளும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களை உடையது.

பெயர்க் காரணம்

நான்கு முதல் எட்டு வரையான குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.

பதிப்பு வரலாறு

சௌரிபெருமாள் அரங்கன் உரை archive.org

குறுந்தொகையை முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகை சௌரிப்பெருமாள் அரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915-ம் ஆண்டு 'குறுந்தொகை மூலமும் புத்துரையும்' என்ற பெயரில் பதிப்பித்து வெளியிட்டார். திணைக் குறிப்பின்றி இருந்த இந்நூலின் பாடல்களுக்குத் திணைக் குறிப்புகளை ஆராய்ந்து வகுத்தார்.

1930 -ல் டி.என்.சேஷாசலம் தாம் வெளியிட்டுவந்த கலாநிலையம் வார இதழில் திரு இராமரத்தின ஐயர் எழுதிய உரையுடன் குறுந்தொகையை வெளியிட்டுவந்தார் ( ஏப்ரல்1930 -டிசம்பர் 1930). சாம்பசிவ சர்மா என்பவரும் ஒரு திங்களிதழில் உரை எழுதினார்

1933-ல் அருணாசல தேசிகர் குறுந்தொகை மூலம் மட் கொண்ட பதிப்பு ஒன்றை வெளியிட்டார்.

1937-ல் உ.வே. சாமிநாதையரின் விளக்கவுரையுடன் கூடிய குறுந்தொகை ஆராய்ச்சிப் பதிப்பு வெளிவந்தது இப்பதிப்பில் உ.வே.சா கூற்று, கூற்று விளக்கம், மூலம், பிரதிபேதம், பழைய கருத்து. ஆசிரியர் பெயர், பதவுரை, முடிபு, கருத்து, விசேடவுரை, மேற்கோளாட்சி, ஒப்புமைப் பகுதி எனப் பன்னிரண்டு கூறாகப் பகுத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கமான உரை எழுதினார். குறுந்தொகையின் சிறப்பை முழுதாக அறியத்தந்தது இப்பதிப்பே.

1940-ல் சங்க இலக்கிய மூலங்களைத் தொகுத்துப் புலவர் பெயரடைவு அடிப்படையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பாக எஸ். வையாபுரிப் பிள்ளை வெளியிட்டார். குறுந்தொகையின் இப்பதிப்பு, மூல பாடத்தில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டமைந்த செம்பதிப்பு. இப்பதிப்பு உ.வே.சா. பதிப்பிலிருந்து மாறுபட்டு 234 புதிய பாடங்களைக் கொண்டிருந்ததாக மு. சண்முகம் பிள்ளை குறிப்பிட்டார்.

பழங்குறிப்புகளைப் பாடலை அடுத்துத் தந்து, பாடிய புலவர் பெயரைத் தருவது ஏடுகளில் காணப்படும் முறை. இம்முறை சோ.அருணாசல தேசிகர் பதிப்பு, உ.வே.சா. பதிப்பு ஆகியவற்றில் காணப்படுகினறது.

குறுந்தொகைப் பதிப்புகள்
  • முழு அளவில் மூலமும் உரையுமாக அமைந்தவை
    • 1915 - தி. சௌரிப்பெருமாளரங்கன்
    • 1930/2002 -கே.இராமரத்நம் ஐயர்
    • 1937 - உ.வே.சாமிநாதையர்
    • 1985 – மு.சண்முகம்பிள்ளை
  • பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைந்தவை
    • 1934 - இரா.சிவ.சாம்பசிவ சர்மா
  • முழு அளவில் மூலம் மட்டுமாக அமைந்தவை
    • 1933 – சோ.அருணாசல தேசிகர்
    • 1957 – எஸ்.ராஜம் (பதிப்பாசிரியர் குழு)
குறுந்தொகை வெளியீடுகள்
  • முழு அளவில் உரை மட்டுமாக அமைந்தவை
    • 1941 – சு.அ. இராமசாமி
  • முழு அளவில் மூலமும் உரையுமாக அமைந்தவை
    • 1947, 1993 – ரா.இராகவையங்கார்
    • 1955 – பொ.வே.சோமசுந்தரனார்
    • 1958 ஃ 1983 – சாமி சிதம்பரனார்
    • 1965 – புலியூர்க் கேசிகன்
    • 1986 – மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு
    • 1999 – இரா.பிரேமா
    • 2000 – மு.கோவிந்தசாமி
    • 2002 – தமிழண்ணல்
    • 2004 – வி.நாகராசன்
    • 2005 – துரை.இராசாராம்
    • 2007 – சக்தி
    • 2009 – ச.வே.சுப்பிரமணியன்
  • பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைந்தவை
    • 1956 – மு.வரதராசனார்
    • 1988 – ம.ந.இராசமாணிக்கம்
    • 2007 – தி.குலோத்துங்கன்
  • முழு அளவில் கவிதை நடையில் அமைந்தவை
    • 2003 – எம்.கு.பிரபாகர பாபு
    • 2006 – சுஜாதா
    • 2006 – இரா.சரவணமுத்து
  • பகுதி அளவில் கவிதை நடையில் அமைந்தவை
    • 1985 – மு.ரா.பெருமாள் முதலியார்
    • 2003 – கருமலைத் தமிழாழன்
    • 2009 – திருவேந்தி
  • முழு அளவில் மூலமும் உரையும் கட்டுடைத்துக் கோத்தவை
    • 2007 – கு.மா.பாலசுப்பிரமணியம்
குறுந்தொகை-பழைய உரைகள்

பேராசிரியர் குறுந்தொகையின் 380 பாடல்களுக்கு உரை வரைந்தார் என்றும் அவர் உரையெழுதாது விட்ட இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரையெழுதினார் என்றும் நச்சினார்க்கினியரின் உரைச்சிறப்புப்பாயிரம் குறிப்பிடுவதாக குறுந்தொகையின் முதல் பதிப்பாசிரியரும் உரையாசிரியருமான தி.சௌரிப்பொருமாள் அரங்கன் குறிப்பிடுகின்றார். இவ்வுண்மையினை உ.வே.சா எஸ். வையாபுரிப்பிள்ளை, அ. சிதம்பரநாதன் செட்டியார், மு.அருணாசலம், மு. சண்முகம்பிள்ளை, கு.சுந்தரமூர்த்தி ஆகியோரும் குறிப்பிடுகின்றனர். ஆயினும் அந்த உரைகள் எதுவும் கிடைக்கவில்லை.

நூல் அமைப்பு

குறுந்தொகை 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் குறுந்தொகையும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் கருதப்படுகிறது. எட்டுத்தொகை நூல்களில் உரையாசிரியர்களால் அதிகமாக ( 235 பாடல்கள்) மேற்கோள் காட்டப்பட்டுள்ளதால் குறுந்தொகை முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. தொகுப்பு மற்றும் வைப்பு முறை நற்றிணை மற்றும் அகநானூறு தொகுப்புகளை ஒத்துள்ளது.

குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

குறுந்தொகையின் பாடல்கள் 4 முதல் எட்டு அடிகளைக் கொண்டுள்ளன. 307,391-ம் பாடல்கள் மட்டும் 9 அடிகளால் ஆனவை.

கூற்று

குறுந்தொகைப் பாடல்கள் ஒவ்வொன்றின் கீழும் அப்பாடல் யாருக்கு யாரால் கூறப்படுகிறது என்றும் எந்த நிகழ்வைக் கூறுகிறது என்றும் குறிப்பு ஒன்று காணப்படுகிறது. (உதாரணம்: பாடல் 307 தலைவி கூற்று, பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி சொல்லியது).குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்து எழுதிச் சேர்த்துள்ள பாரதம் பாடிய பெருந்தேவனார் இக்குறிப்புக்களை எழுதியிருக்கலாமென்று சிலர் எண்ணுகின்றனர். தலைவன், தலைவி, தோழி, பாங்கன், நற்றாய், செவிலி, வழிப்போக்கர் ஆகியோரின் கூற்றுக்களாக ஓர் தனிக்கூற்று நாடகம் (Dramatic Monologue) போலவே ஒவ்வோரு பாடலும் அமைந்துள்ளது.

திணைப்பொருத்தம்

குறுந்தொகையில் திணைவாரியாகப் பாடல்களின் எண்ணிக்கை:

  • குறிஞ்சி- 147 பாடல்கள்
  • பாலை- 90 பாடல்கள்
  • நெய்தல் - 71 பாடல்கள்
  • மருதம்-48 பாடல்கள்
  • முல்லை- 45 பாடல்கள்

குறுந்தொகைப் பாடல்களில் ஐந்திணைகளின் முதல், கரு, உரிப்பொருள்களுடன் தலைவன் தலைவியின் கற்பொழுக்கமும், களவொழுக்கமும் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் முதல்,கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வர்ணனைகளைவிட உணர்வுகள் அதிகம் கூறப்பட்டுள்ளன. புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிவு ஆகிய உரிப்பொருள்களுக்கேற்ற பொருத்தமான,உவமைகள், உள்ளுறை, இறைச்சி முதலியவற்றைக் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிப்பவை குறுந்தொகைப் பாடல்கள். குறுகிய அடிவரையறையே உடைமையால் முதற் பொருள் (நிலமும் பொழுதும்), கருப்பொருள் (இயற்கைச்சூழல்) வர்ணணனைகள் நற்றிணை, அகநானூறு போன்ற நூல்களைப் போல் போல இதில் விரிவாக இடம் பெறவில்லை. ஆயினும் தலைவன், தலைவி பெயர்க்குறியீடு, நிலம், மலர்கள், உயிரினம், பயிரினம் பற்றிய உவமைகள், சிறு அடைமொழித் தொடர்கள் போன்றவற்றால் இவை முதல், கருப்பொருள்களை உணர்த்தி, தம் திணைத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

குறுந்தொகையில் கைக்கிளை, பெருந்திணை ஆகியவும் பயின்று வருகின்றன. மடலேறுதல் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன (14, 17, 32, 173, 182). மடலேறியும் தலைவியும் அவள் சுற்றமும் சம்மதிக்காவிட்டால் வரை பாய்ந்து(மலையில் இருந்து குதித்து உயிரைவிடும் வழக்கம் இருந்தது(17).

பாடியவர்கள்

குறுந்தொகைப் பாடல்களை பாடியவர்கள் 203 புலவர்கள்.

பார்க்க: குறுந்தொகைப் புலவர்கள்

10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பாடல்களில் இடம்பெற்ற தொடர்கள் அல்லது உவமைகளைக் கொண்டே ஆசிரியர் பெயர்களை அமைத்து வழங்கினர். அவர்களில் சிலர்:

  • அணிலாடு முன்றிலார்'
  • காக்கைப்பாடினியார்
  • காலெறிகடிகையார்
  • கல்பொரு சிறுநிறையார்
  • குப்பைக்கோழியார்
  • செம்புலப்பெயல் நீரார்
  • குப்பைக் கோழியார்
  • விட்ட குதிரையார்
  • மீனெறி தூண்டிலார்
  • ஒரேழுவனார்

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.குறுந்தொகைப் புலவர்களில் அரசர்கள் மற்றும் பல்வேறு தொழில்களைச் செய்தவர்களும் அடக்கம்.

  • அரச மரபினர்-கருவூர்ச் சேரமான் சாத்தன்.சோமானெந்தை, நம்பி குட்டுவன், பாலை பாடிய பெருங்கடுங்கோ (சேர மரபினர்). மாவளத்தான், கோப்பெருஞ்சோழன் (சோழ மரபினர்), குறுவழுதி, பாண்டியன் பன்னாடு தந்தான்(பாண்டிய மரபினர்), மிளைவேல் தித்தன் ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன் (சிற்றரசர்கள்)
  • அரசு அலுவலர்கள்- வள்ளுவன் பெருஞ்சாத்தன்
  • படைத்தலைர்- 'ஏனாதி' நெடுங்கண்ணன்
  • இசைக்கலைஞர்கள்-உறையூர் முதுகூத்தனார், வேம்பற்றுார்க் கண்ணன் கூத்தன், குழல் தித்தன்
  • வணிகர்- பேரி சாத்தனார், மதுரைச் சீத்தலைச் சாத்தனார். மதுரை அறுவை வாணிகள்ன் இளவேட்டனார்
  • வீடு கட்டுப்வர்கள்- உறையூர் முது கொற்றனார், கொற்றனார், செல்லூர்க் கொற்றன், படுமரத்து மோசி கொற்றன், காஞ்சிக் கொற்றன், கூழிக் கொற்றன்
  • கொல்லர்-கொல்லன் அழிசி, தங்கால் முடக் கொல்லனார். மதுரைக் கொல்லன் புலவன், மதுரைப் பெருங்கொல்லன்
  • பெண்பாற் புலவர்கள்- அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், கச்சிப் பேட்டு நன்னாகையார், கழார்ர்கீரன் எயிற்றியார், காக்கைப்பாடினியார் நச்செள்ளையார், நன்னாகையார், நெடும்பல்லியத்தை, பூங்கண் உத்திரையார், மதுரை நல்வெள்ளியார், வருமுலையாரித்தி, வெண்பூதி, வெண்மணிப்பூதி, வெள்ளிவீதி

பாடல்களால் அறியவரும் செய்திகள்

  • ஆரியக்கூத்தர் மூங்கிலில் கட்டிய கயிற்றின்மேல் நின்று ஆடினர். கூத்தின்போது பறை கொட்டப்பட்டது (7).
  • ஆலமரத்தடியில் ஊரவை கூடும் மரபு இருந்தது (15)
  • புத்தர் காலத்தில் சிறப்புற்ற பாடலிபுரம் பல நூற்றாண்டுகள் மகத நாட்டின் தலைநகராக இருந்தது. அது சோணையென்னும் துணையாறு கங்கையைக் கூடும் இடத்தில் அமைந்திருந்தது. அத் தலைநகரத்து யானைகள் சோணையாற்றில் நீராட்டப்பட்டன என்றும், பாடலி செல்வச் சிறப்புடையது என்றும் படுமரத்து மோசி கீரனார் என்ற புலவர் பாடியுள்ளார் (75).
  • கொல்லி மலையின் ஒரு பகுதியில் செதுக்கப்பட்ட ஒரு பாவை கொல்லிப்பாவை எனப்பட்டது (89, 100).
  • ஊரில் பலர் கூடிக் கடவுளை வணங்கவும் ஊர்ச் செய்திளைப் பேசவும் மன்றம் இருந்தது (241) .
  • ஊரில் தெருக்கள் பல இருந்தன. அந்தணர் தெரு 'ஆசில் தெரு’ எனப்பட்டது (272).
  • ஊரார் உண்ணுதற்கும் நீராடுவதற்கும் ஊருக்கு அண்மையில் பொய்கைகள் இருந்தன (113, 370). ஊருக்கு அண்மையில் பொய்கையும் அதற்கு அப்பால் சிறிது -தொலைவில் காட்டாறும் இருந்தன என்று ஒரு செய்யுள் கூறுகின்றது (113). சில ஊர்களில் கேணிகள் இருந்தன (369)
  • குறிஞ்சி நிலத்தில் குறவன் மரங்களை வெட்டி நிலத்தை உழுது தினை விதைப்பான் (214); தினை அறுவடையானதும் மீண்டும் தினை விதைப்பான்; அப்பொழுது அவரையையும் உடன் விதைப்பான் (82). அவன் யானையாலும் எட்டமுடியாதபடி குன்றின்மீது கட்டப்பட்ட பரணிலும் வேங்கை மரத்தின்மீது கட்டப்பட்ட பரணிலும் இருந்து தினைப்புனத்தைக் காப்பான்; யானை முதலிய விலங்குகள் வந்து பயிரை மேயாதபடி இரவில் கொள்ளியைக் காட்டுவான். தீயைக் கண்ட விலங்குகள் விலகி ஓடும். இங்ஙனம் மிகவுயர்ந்த பரணில் இருந்தமையால் அவன் 'சேணோன்’ எனப்பட்டான் (150, 357).
  • காதல் கொண்ட தலைவி தன் இயல்பு நிலை மாறுவதைக் கண்ட குடும்பத்தினர் வேலன் வெறியாட்டு நிகழ்த்தினர் (263) வேலன் வெறியாடலில் வேலன் என்பது பூசாரியைக் குறிக்கும்.
  • பறை, பணிலம் (15), பதலை (59), முழவு (71), தட்டைப்பறை (133), குளிர் (197, 291, 360), முரசு (365) முதலிய இசைக் கருவிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. தெய்வ வழிபாட்டில் பலவகை இசைக்கருவிகள் ஒலிக்கப்பட்டன (263), பாணர் பலவகை யாழ்களைக் கொண்டு இசைக்கலையை வளர்த்தனர் (323, 336).
  • நடனம் ஆடுபவள் ஆடுகளமகள் எனப்பட்டாள். ஆண்மகன் ஆடுகளமகன் எனப்பட்டாள். கூத்தர் என்பவர் துணங்கை முதலிய கூத்து வகைகளையும் கதையைத் தழுவிவரும் கூத்துகளையும் ஆடினர். அவர் ‘கோடியர்’ என்றும் பெயர் பெற்றனர் (78).
  • மலைப்பக்கத்தில் சூலத்தை ஏந்திய பெண்தெய்வம் ‘சூலி’ என்ற பெயருடன் வணங்கப்பட்டது. அக்கால மக்கள் நல்வினை தீவினைகளில் நம்பிக்கை பெற்றிருந்தனர் (246); நிரையம் (நரகம்) இருந்ததென்று நம்பினர் (258). உயிர்களை உடலிலிருந்து பிரிப்பவன் கூற்றம் எனப்பட்டான் 267). நோன்பிருந்தவர் நோற்றோர் எனப்பட்டனர் (344) இதனால் நோன்பிருக்கும் வழக்கம் இருந்தது என்பது தெரிகிறது.
  • நாழிகைக் கணக்கர் இரவில் உறங்காது காலக்கணக்கை ஆராய்ந்து அறிவித்து வந்தனர் (261).
  • தலைவன் செல்வத்தை ஈட்டுவதையே முதற் கடமையாகக் கொண்டான் (331).
  • பரம்பரையாக வந்த பெரிய செல்வர் ‘பெருமுது செல்வர்’ எனப்பட்டனர் (337).

வரலாற்றுச் செய்திகள்

குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. புறக்கூறுகளும் தகவல்களும் குறுந்தொகைப் பாடல்களில் உவமைகளாகவும் ஒப்பீடுகளாகவும் பாடப்பட்டுள்ளன. அலர் எழுவதற்கு உவமையாகப் பல்வேறு புறச்செய்திகள் இடம்பெறுகின்றன.

'கோசர்' என்ற குடியினர் பற்றிய குறிப்புகள் குறுந்தொகையில் காணப்படுகின்றன. நாலூர் கோசர் (குறுந். 15), ஒன்று மொழி கோசர் (குறுந். 73) போன்றோர் ஓர் குழுவாக இயங்கினார்கள். கோசர் குடியில் பிறந்த பெண்ணைக் கொன்ற, மா மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட, 'பெண் கொலை புரிந்த' (குறுந். 292) என்று புலவர்களால் பழிக்கப்பட்ட நன்னன் என்ற மன்னனோடு கோசர்களுக்குப் பகை ஏற்பட்டது. நன்னனைப் பழி தீர்க்கக் கருதிய கோசர்கள் செய்தி சூழ்ச்சியும் பரணர் பாடலில் கூறப்படுகிறது(73).

பரணரின் மற்றொரு பாடலில்(31) ஆதிமந்தி காவிரிக் கரையெங்கும் ஆட்டன் அத்தியைத் தேடிய கதை கூறப்படுகிறது.

பசும்பூட் பாண்டியன் கொங்கரை அழிக்க அதிகன் என்ற படைத்தலைவனை ஏவியதும், பறந்தலைப் போரில் அதிகன் கொங்கரால் கொல்லப்படுவதும் பரணர் பாடலில்(393) கூறப்படுகின்றன. அதிகன் இறந்தபோது கொங்கர் செய்த ஆரவாரம் போல் அலர் எழுந்ததாக இப்பாடல் கூறுகிறது.

அதியமானின் யானைப்படையும், கொடைச்சிறப்பும் ஔவையாரின் பாடலில் (91) கூறப்படுகின்றன.

குறிப்பிடப்படும் மன்னர்கள்
  • குட்டுவன் (34),
  • பெரும்பூண் பொறையன் (89),
  • திண்டேரிப் பொறையன் (128)
  • வளங்கெழு சோழர்(116)
  • பசும்பூண்பாண்டியன் (393)
  • எவ்வி ((19)
  • நன்னன்-பெண்கொலை புரிந்தவன் (73,291)
  • எழினி (80)
  • ஆய் (84)
  • அஞ்சிதகடூர் அதியமானஞ்சி (91)
  • வல்வில் ஓரி-கொல்லி மலைத் தலைவன் (100)
  • தொன்று முதிர் வேளிர் (164)
  • பாரி (196)
  • மலையன் திருக்கோவலூரையும் முள்ளுரையும் ஆண்டவன் (312)
  • ஓரி (199)
  • கள்ளி (210)
  • அழிசி (257)
  • தொண்டையர் (260)
  • ஆதி அருமன் (293)
  • அகுதை (298)
  • விச்சிக்கோ (328).
ஊர்கள்
  • காஞ்சியூர் (10)
  • சிறு நல்லூர் (பொதுப் பெயர் 55, 345)
  • குறும்பூர் (328)
  • குட்டுவன் மாந்தை (34, 116)
  • பொறையன் கொல்லி (89)
  • கொல்லிக் குடவரை (100)
  • சோழர் உறந்தைப் பெருந்துறை (116)
  • பொறையன் தொண்டி (128. 210, 238)
  • வேளிர் குன்றூர் (164)
  • பாரி பறம்பு (196)
  • மலையன் கானம் (198)
  • நள்ளி கானம் (210)
  • முள்ளூர் கானம் (312)

பண்பாட்டுச் செய்திகள்

குறுந்தொகை அகப்பொருள் நூலாக இருந்தாலும் புறச்செய்திகளையும், அக்காலத்தின் சமூக விழுமியங்களையும் அறியத்தருகிறது. சான்றோரின் தன்மையைக் கூறுமிடத்து புகழப்படும் முன்னரே நாணம் கொள்ளும் தன்மை வாய்ந்த சான்றோர், பழிச்சொல்லைத் தாங்கமாட்டர் எனக் குறிப்பிடுகிறது(255).

செல்வத்தின் பயனும் முன்னோர் சேர்த்த செல்வத்தை விரையமாக்குபவரின் அழிவும் (உள்ளது சிதைப்போர் உளரெனப் படஆர்), பொருளில்லாதவரின் துன்பமும் பேசப்படுகின்றன. முன்னோர்களின் செல்வத்தை வைத்திருப்பவர்கள் செல்வந்தர்கள் அல்லரென்றும், தாமாக உழைத்து செல்வம் ஈட்டாதவர் வாழ்வு பிறரிடம் இரத்தலைவிட இழிந்தது எனவும் கருதப்பட்டன(283) ஈகையும் , விருந்தோம்பலும் சமூகத்தின் இன்றியமையாத குணங்களாகக் கருதப்பட்டன. விதிக்கப்பட்ட வினை(செயலே) ஆண்களுக்கு உயிராக இருக்க, பெண்கள் ஆடவரைச் சார்ந்து வாழ்ந்தனர். இல்லறத்தார் பேணுகின்ற உயர்நெறியாகிய அன்பும் புரிதலும் எடுத்துரைக்கப்படுகிறது.

ஏதேனும் ஒரு செயலைச் செய்வதன் பொருட்டு சூளுரைத்தவர் அச்செயலை செய்யாது ஒழியின் அவர்களைத் தெய்வம் வருத்தும் என்ற நம்பிக்கை பழந்தமிழர்களிடம் காணப்பட்டது. நிமித்தம் பார்த்தல், தெய்வ வழிபாடு, படையலிட்டு தெய்வங்களுக்கான கடனை நிறைவு செய்தல், வேலன் வெறியாடல் ஆகிய பண்டைத் தமிழரின் நம்பிக்கைகள் காட்டப்பட்டுள்ளன.

கல்வியைப் பெற விரும்பும் மாணாக்கர்கள் குருவின் இருப்பிடம் நாடிச் சென்று கல்வி இரந்துண்டு வாழ்ந்தனர் என்றும் உடல் மெலிந்து வாழ்ந்தனர் (33) என்று தெரிய வருகிறது.

உவமைகள்

குறுந்தொகையில் பல அழகிய உவமைகள் உள்ளன.கயமனார்(9) , செம்புலப்பெயல் நீரார்(40), அணிலாடு முன்றிலார்(41), நெடுவெண்ணிலவினார்(47), மீனெறி தூண்டிலார்(54), போன்ற பதினெட்டிற்கும் மேற்பட்ட புலவர்கள் தங்களின் பாடல்களில் காணப்படும் உவமைகளைக் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.

  • காற்றிலே ஆடுகின்ற வாகை மரத்தின் கிளைகள் அதனோடு சேர்ந்து வாகை மரத்திலுள்ள முற்றிய நெற்றுகள் ஓசை எழுப்பும் ஓசை கழைக் கூத்தாடும் ஆரியக் கூத்தாடிகள் கயிற்றில் ஏறி ஆடும் போது எழுப்புகின்ற ஓசையைப் போலிருந்தது(7)
  • ஒருவர் கையையும் காலையும் தூக்கத் தானும்தூக்கும் ஆடிப்பாவை போல தலைவன் தலைவியின் சொல்கேட்டு நடப்பதாகப் பரத்தை பழித்துரைக்கிறாள் (8)
  • மரத்தின் சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதுபோல, தலைவியின் மிகச்சிறிய உயிர் தலைவன் மேல்கொண்ட பெருங்காதலைத் தாங்கிக்கொண்டிருக்கிறது-'சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு' (18)
  • நீர்நிலையிலே பெருகிய நுரை அலையின் மிகுதியால் கரையிலே உள்ள கல்லில் மோதி உடைவது போல (கல்பொரு சிறுநுரை) தலைவனைப் பிரிந்த தலைவியின் உள்ளம் பிரிவு எனும் கல்லில் மோதி சிறிது சிறிதாக உடைந்து அழிகிறது (290)
  • சினைபிடித்த பச்சைப் பாம்பின் உடல் போன்று பருத்த கணுக்களைக் கொண்ட கரும்பின் மடல் அவிழ (35)
  • செம்மண் நிலத்தில் பொழிந்த மழை நீர் அந்த நிலத்தின் தன்மையை ஏற்று ஒன்று கலப்பது போல் நம் நெஞ்சங்கள் கலந்தன -செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' (40)
  • 'அணிற் பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து' அணிலின் பல்லைப்பொன்ற வரிசையான கூரிய இதழ்கள் கொண்ட தாமரை(49)
  • நீரில் இணைந்து நீந்திச் செல்லும்போது தாமரைத்தண்டு இடைப்பட்டு விலகும் ஒரு கணத்தில் பல்லாண்டுகள் பிரிந்தது போன்று துயறுறும் அன்றில் பறவைகள் போலப் பிரிவுத் துயருறும் தலைவனும் தலைவியும்(57) .
  • கடும் வெய்யிலில் வெம்மையான பாறையின்மேல் இருக்கும், கையில்லாத ஊமை ஒருவன் கண்ணால் பாதுகாக்க முயலும், வெண்ணெயைப் போல் தலைவனின் காமநோய் கட்டுக்கடங்காமல் பரவுகிறது(58)
  • வேப்பம் பழத்தைக் கிளி தன் அழகிய சிவந்த வாயால் கவ்வியிருப்பது போல் அழகிய தாமரை போன்ற கரங்களை உடைய தலைவியின் சிவந்த நகங்களுக்கிடையே பொன்னாலான மணி தங்கியிருந்தது (67)
  • சேவலின் சிவந்த கொண்டையைப் போல் கொத்துக் கொத்தாய் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியிருந்தன(107)
  • கருவிளை மலரின் நடுவில் உள்ள புள்ளியை மயிலின் தோகையிலே காணப்படும் கண் போன்றிருக்கிறது (110)
  • காட்டுவழியில் உள்ள பெரிய உருண்டையான குன்று போன்ற கருங்கல் ஒரு யானை தன் துதிக்கையை மறைத்துக் கொண்டு, கையற்ற யானையொன்று நிற்பது போலிருந்தது (111)
  • தலைவனின் நெஞ்சம், ஒரே ஒருஏர் வைத்துள்ள உழவன் நிலத்தின் ஈரம் காய்வதற்குமுன் தன் நிலத்தை விரைவாக உழுவது போல் விரைந்து செல்ல நினைக்கிறது(131).
  • ஈதலை கடமையாகக் கொண்டவனது கைப்பொருள் ஒருவழி நில்லாது விரைந்து செல்லுதல் போல் தலைவியின் பசலை நோய் தலைவனைக் கண்டதும் விரைந்து நீங்கியது (143)
  • தலைவனுடன் கூடிக்கிடந்த என் தோளைப் பிரிக்க கூரிய வாள் போல் வைகறை வந்ததடி(157)
  • ஏழு ஊரில் உள்ளவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்து முடிப்பதற்கு ஒரே ஒரு உலையில் உள்ள துருத்தி இடைவிடாமல் வேலை செய்வதுபோல், என் நெஞ்சு இடைவிடாமல் தலைவரை நினைத்து வருந்துகிறது(172)
  • நீர்நிலையிலே பெருகிய நுரை அலையின் மிகுதியால் கரையிலே உள்ள கல்லில் மோதி உடைவது போல கல்பொரு சிறுநுரை)தலைவனைப் பிரிந்த தலைவியின் உள்ளம் பிரிவு எனும் கல்லில் மோதி சிறிது சிறிதாக உடைந்து அழிகிறது (290)
  • நீர்நாயின் மேலுள்ள அழகிய வரிகள் பிரம்பின் மேலுள்ள வரிகள் போல் இருந்தன-'அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்' (364)
  • வில்லவன் ஒருவன் தன் அம்பின் நுனியை உகிரால்(நகத்தால்) வருடும் ஓசை ஆண்பல்லி பெண் பல்லியை ஒலி செய்து அழைக்கும் ஓசை போல் ஒலித்தல்
  • யானைக்குக் குளகு என்ற இலையை உண்டால் மதம் பிடிக்கும்; வாழை இலையின் குருத்து மதத்தை நீக்கும்(308)

உள்ளுறை, இறைச்சி

குறுந்தொகைப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் உள்ளுறை உவமைகளும், இறைச்சியும் தலைவன் தலைவியின் காதல் வாழ்வில் நிகழும் ஒழுக்கங்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. கருப்பொருள்களின் வழியாகப் புலவர்களின் உணர்த்தல் திறன் உத்தி வெளிப்படுகின்றது. பாடல்களில் இடம்பெறும் குறிஞ்சி நில உள்ளுறைகள் தலைவனின் இரவுக்குறி வருகை, காவல், வழியின் துன்பம், வரைவு கடாதல், உடன்போக்கு ஆகிய பொருண்மைகளில் அமைந்து பாடல்களின் உட்பொருளை உய்த்தறிய உதவுகின்றன. முல்லைத்திணையின் உள்ளுறைகள் தலைவன் பிரிவு அதனால் தலைவிக்கு ஏற்பட்ட துயர் ஆகியவற்றை விளக்குகின்றன.தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தின் இயல்பினை மருதத்திணையும் பிரிவுத் துன்பத்தின் வலியை நெய்தல் திணையும் தலைவன் பொருள் தேடும் ஆர்வம் அதனால் தலைவிக்கு ஏற்படும் துன்பம் ஆகியவற்றைப் பாலைத் திணைப் பாடல்களும் விளக்குகின்றன.

கழனி மாஅத்து விளைந்துகும் தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரண் ” (குறு 8)

வயல் வரப்பிலே நிற்கும் மாமரத்தில் முதிர்ந்த கனி , தானே கனிந்து வயலில் வீழ்ந்த போது மட்டும் அதை உண்னும் வாளை மீன் என்ற மருத நில கருப்பொருள் கூறப்பட்டுள்ளது. தலைவன் காமத்தால் கனிந்து தன்னை வேண்டி இல்லம் வந்தால் மட்டுமே யாம் நுகர்வோம் அல்லாது தலைவியினைப் போல் தானே வலிந்து நுகர்வோம் அல்லேம் என்பது உள்ளுறை உவமம்.

இறைச்சியில் திணைக்குரிய கருப்பொருள் மூலம் குறிப்பாக வேறு பொருள் உணர்த்தப்படுகிறது.

கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்
தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட

பெண்யானை தன் கன்றின் பசியைப் போக்கிக் கொண்டே தானும் தினையை உண்ணும் நாட்டை உடையவனே -எனக் கூறி பொருளை ஈட்டி, விரைவில் வந்து தலைவியைத் திருமணம் செய்து மகிழ்விக்க வேண்டும் என்று இறைச்சிப் பொருளில் தலைவனுக்குக் குறிப்புணர்த்தப்படுகிறது.

மொழியாக்கங்கள்

அமெரிக்காவில் வாழும் வைதேகி ஹெர்பர்ட் சங்க இலக்கியத்தில் அடங்கிய பதினெட்டு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். இங்கிலாந்தைச் சார்ந்த ராபர்ட் பட்லர் (Robert Butler) குறுந்தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதிலுள்ள பாடல்களுக்கு விளக்கமும் அளித்துள்ளார். ஃபிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஈவா வில்டன் (Eva Wilden) குறுந்தொகையின் பாடபேதங்கள் அனைத்தையும் ஆய்வுசெய்து மொழிபெயர்ப்பையும் விளக்கங்களையும் மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

சிறப்புகள்

எட்டுத்தொகை நூல்களின் பட்டியலைச் சொல்லும் பாடல் 'நல்ல குறுந்தொகை' எனக் குறிப்பிடுகிறது. மெல்லிய உணர்வுகளைக் கூறும் தன்மையால் அதிகம் மேற்கோள் காட்டப்படுகிறது. குறுந்தொகையில் இடம்பெறும் 401 பாடல்களில் 50 பாடல்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. 29 உரையாசிரியர்கள் தத்தம் உரைகளிலேயே சுமார் 716 முறை குறுந்தொகைப் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர். நச்சினார்க்கினியர் மட்டுமே 208 இடங்களில் தன் உரைகளில் குறுந்தொகைப் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். குறுந்தொகை உவமைகளும், கவிதை நயமும் நிறைந்தது. சங்க கால மக்களின் வாழ்வியல், வரலாறு, பண்பாட்டுச் செய்திகளை அறியத் தருகிறது.

'யாயும் யாயும் யாராகியரோ' , 'நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தன்று' போன்ற பாடல்களில் காதலின் உச்சம் கூறப்படுகிறது. இல்லறத்தின் பெருமையும், விருந்தோம்பல், பொருள் தேடுதல், கல்வி, ஈகை போன்ற நெறிகளை வாழ்வியலோடு வகுத்து வாழ்ந்த பண்பாட்டையும் அறியத் தருகிறது. 'யாயும் யாயும் யாராகியரோ' பாடலின் ஆங்கில மொழியாக்கம் லண்டனில் உள்ள ஓர் சுரங்கப்பாதையில் பொறிக்கப்பட்டுள்ளது.

பாடல் நடை

கடவுள் வாழ்த்து

பாடியவர்:பாரதம் பாடிய பெருந்தேவனார்

தாமரை புரையும் காமர் சேஅடிப்
பவளத்து அன்ன மேனித் திகழ் ஒளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்
சேவல் அம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே. '

குறிஞ்சி

தலைவன் கூற்று பாடியவர்: செம்புலப்பெயல்நீரார்

(தெய்வத்தாலாகிய கூட்டத்தின்பின்பு தலைவி, தலைவன் பிரிவா னோவென ஐயுற்றவிடத்து அதனைக் குறிப்பாலறிந்த தலைவன் ‘ஒரு தொடர்பு மில்லாத நாம் ஊழின் வன்மையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.)

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே (குறு: 40)

முல்லை

தலைவன் கூற்று பாடியவர்: கிள்ளிமங்கலங்கிழார்

கூற்று:

  • கூற்று - 1: பருவங்கண்டு அழிந்த (வருந்திய) தலைமகள் தோழிக்கு உரைத்தது.
  • கூற்று – 2: தலைமகனைக் கொடுமைகூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதுமாம் (வற்புறுத்தியதும்) ஆம்.

வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு
யாரா கியரோ தோழி நீர
நீலப் பைம்போ துளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி
நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று
இன்னா தெறிதரும் வாடையொடு
என்னா யினள்கொல் என்னா தோரே. (குறு:110)

மருதம்

தோழி கூற்று பாடியவர் : கொல்லன் அழிசி.

  • கூற்று-1: குறிபிழைத்த தலைமகன், பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழித் தோழி, சிறைப்புறமாகக் கூறியது.
  • கூற்று – 2: இரவுக்குறி நேர்ந்ததூஉமாம்.

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே. (குறு:138)

நெய்தல்

தலைவி கூற்று பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்

கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

தாஅ வலஞ்சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுன் மாலை
எமிய மாக ஈங்குத் துறந்தோர்
தமிய ராக இனியர் கொல்லோ
ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த
உலைவாங்கு மிதிதோல் போலத்
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.(குறு: 172)

பாலை

தலைவி கூற்று பாடியவர்: வெள்ளிவீதியார்

கூற்று: பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே. (குறு:27)

உசாத்துணை


✅Finalised Page