under review

கச்சிப்பேட்டு நன்னாகையார்

From Tamil Wiki

கச்சிப்பேட்டு நன்னாகையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய எட்டு பாடல்கள் குறுந்தொகையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

நாகையார் என்பது இயற்பெயர்.‘நல்’ என்பது சிறப்பைக் குறிக்கும் சொல். நகரின் புறத்தில் அதைச் சார்ந்து இயங்கும் வணிக நிலையத்தை ‘பேட்டு’ என்னும் சொல் குறிக்கிறது. காஞ்சிபுரத்திலுள்ள கச்சிப்பேட்டு என்னும் ஊரில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கச்சிப்பேட்டு நன்னாகையார் குறுந்தொகையில் 30, 118, 172, 180, 192, 197, 287, 325 ஆகிய பாடல்கள் பாடினார். இந்த எட்டு பாடல்களும் தலைவன் பொருள்வயின் பிரிந்தது கண்டு மனைவியின் ஆற்றாமையயும், அவ்வாற்றாமையைக் கண்டு தோழி ஆறுதல் கூறுவதையும் பாடல் பொருளாகக் கொண்டது. தலைவி கூற்று,தோழி கூற்று ஆகிய கூற்றுகளில் பாடல்கள் அமைந்துள்ளன. பாலை, நெய்தல், முல்லை ஆகிய திணைகளில் பாடல்கள் உள்ளன.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • வண்டுகள் விழுந்து மெலிந்த குவளை மலர்கள் தலைவி தலைவனின் பிரிவால் மெலிந்தமைக்கு உவமை சொல்லப்பட்டது
  • சங்க காலத்தில் இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் யாராவது திண்ணையில் இருக்கிறார்களா என அறியும் பொருட்டு “உள்ளே வருவதற்கு யாரேனும் உள்ளீர்களா?” என்று கேட்ட பின்னரே உறங்கச் செல்லும் வழக்கம் இருந்துள்ளது.
  • ஏழு ஊரில் உள்ளவர்களுக்குப் பொதுவாகப் பயன்படும்படி, ஓர் ஊரில் அமைத்த, கொல்லன் உலையில் பொருத்திய ஓயாது உழைக்கும் துருத்தி.
  • ஏந்தல்-யானைக்கூட்டத்தின் தலைமை ஆண் யானை. பேயின் நகங்களைப் போல பருத்த நகங்களையும் பரந்த பாதங்களையும் கொண்ட யானைக்கூட்டம் செல்லும் போது கரும்புகள் வீழ்ந்து அதன் கணுக்களின் இடையேயுள்ள பகுதி போல அமைந்த ஒற்றை மூங்கில் ஓங்கிய பாலை நிலத்தின் வழி.
  • உவமை: பொன்னிறமான பூந்த்தாதுக்கள் படிவதால் மின்னும் சிறகுகளையுடைய கருங்குயில், பொன்னை உரைத்துப் பார்க்கப் பயன்படும் கட்டளைக்கல் போல் தோன்றுகிறது. அக்குயில், மாமரத்தின் கிளையில், பூந்தாதைக் கோதுகின்ற இளவேனிற் காலம்
  • கடல் நீர் ஆவியாகி மேகம் சூழ் கொண்டு, மின்னல் இடி ஆகியவற்றோடு கூடித் தோன்றும் மழையுடன், ஊதைக் காற்றின் குளிர்ச்சியோடு கலந்த, கூதிர்க் காலத்தின் உருவத்தையுடைய கூற்றம் எனும் தெய்வம்.
  • பன்னிரண்டு மாதம் நிறை கர்ப்பம் தாங்கித் தளர்ந்து நடக்க முடியாமல் புளியங்காய் தின்பதில் விருப்பமுடைய முதன்முதலாகக் கர்ப்பம் அடைந்த மகளிர் போல நீரை முகந்து வானத்தில் ஏற முடியாமல் அந்த நீர்ச்சுமையைத் தாங்கி ஒன்றோடு ஒன்று சேர்ந்து மலைகளை நோக்கி, பெரிய முழக்கத்தோடு மேகங்கள் எழுகின்ற கார்ப் பருவம்
  • உவமை: தலைவனது பிரிவால் அழுத தலைவியின் கண்ணீரால் அவள் முலைகளின் இடையிலுள்ள இடம் நிறைந்து கரிய காலையுடைய வெண்ணிறமான நாரை உணவை உண்ணும் பெரியகுளம் போல ஆனது

பாடல் நடை

  • குறுந்தொகை:30 (திணை: பாலை)

கூற்று: தலைவன் பொருள்வயின் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமைக் காரணத்தைத் தோழி வினாவத் தலைவி உரைத்தது

கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.

கூற்று: பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது

யாதுசெய் வாம்கொல் தோழி நோதக
நீர்எதிர் கருவிய கார்எதிர் கிளைமழை
ஊதையம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த என்குறித்து வருமே

உசாத்துணை


✅Finalised Page