under review

உள்ளுறை உவமம்

From Tamil Wiki

உள்ளுறை உவமம் தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிநெறி. அகத்துறையில் காதல் மாந்தர்கள் உணர்வுளை விளக்கிக் காட்டுவதற்கு இயற்கைக் காட்சிகளை குறிப்பாகப் பயன்படுத்துவது உள்ளுறை உவமம். பாடலில் பயின்றுவரும் திணையின் கருப்பொருள்களால் உவமானத்தைக் கூறி உவமேயத்தைக் குறிப்பாக உணர வைப்பது.

தொல்காப்பியம் இதன் இலக்கணத்தை

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
தள்ளாது ஆகும் திணை உணர் வகையே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 49

என வகுக்கிறது.

இலக்கணம்

உள்ளுறை உவமம் அகப்பொருலின் ஐந்திணைகளில் மட்டுமே பயன்படுத்துவதற்கு உரியது. கருப்பொருள் என்னும் இயற்கைச் சூழலிலிருந்து புனையப்படுவது. வெளிப்பார்வைக்குச் செடி, கொடி, மரம், பறவை, விலங்குகளின் வர்ணனை போலக் காணப்பட்டாலும் வெறும் இயற்கைப் வர்ணனைகளாக இடம்பெறாமல், பாடலில் மாந்தரின் மன உணர்வுகளை விளக்கிக் காட்டும் பின்புலங்களாக இடம்பெறுகின்றன. புறத்திணை நூல்களில் இது பிறிது மொழிதல் அணி அல்லது ஒட்டணி எனப்படும். உவமானத்தைக் கூறி குறிப்பாக உவமேயத்தை உணர வைத்தல்.

வெறிகொள் இனக் கரும்பு மேய்ந்ததோர் காரான்
குறைபடு தேன் வேட்டுக் குறுகும் - நிறை மது சேர்ந்து
உண்டு ஆடும் தன் முகத்தே செவ்வி உடையது ஓர்
வண்டாமரை பிரிந்த வண்டு (தொல்காப்பியம் - அகத்திணையியல் - 51 - இளம்பூரணர் உரை மேற்கோள்)

(மருதத்திணை) தாமரைப் பூவில் தேன் உண்ட வண்டு தன் முகத்தில் தாமரைப் பூவின் மகரந்தத்தை அப்பிக்கொண்டு, தாமரையை விட்டுவிட்டு, தன் தேன் ஆசைக் குறையை நிறைவேற்றிக்கொள்ள வேறு மலரை நாடும். இது வெறி கொண்டு கரும்பு மேய்ந்த எருமையானது வண்டு தேன் உண்ட தாமரையையும் மேயச் செல்வது போல் உள்ளது.)

தாமரையை விட்டுவிட்டு வேறு மலர்களில் தேனுண்னச் செல்லும் வண்டும், கரும்பை மேய்ந்து பின் தாமரையையும் மேயும் எருமை இரண்டும் பரத்தையரை நாடிச் சென்ற தலைவனுக்கான உள்ளுறை உவமங்கள். தாமரை, கரும்பு இரண்டும் தலைவிக்கான உள்ளுறை உவமங்கள். உவமேயம் (தலைவன் தலைவியை விட்டு பிற பெண்களை நாடிச் சென்றது) இங்கு குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

உள்ளுறை கூறுவதற்கு உரியவர்

உள்ளுறை கூறுவதற்கு உரியவர் எவர்; எவர் என்னென்ன பொருள்களை உள்ளுறையாக மேற்கொள்ளலாம் என்பதற்கான இலக்கணங்களையும் தொல்காப்பியம் கூறுகிறது.

  • தலைவி தான் வாழும் நிலத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்தவளல்லளாதலின், அவள் கூறும் உள்ளுறை அவளறிந்த பொருளாகவே இருத்தல் வேண்டும்.
  • தோழி அவள் வாழும் நிலத்தில் உள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்தவளே ஆயினும், பிற நிலத்திற்குச் சென்று வந்தவள் அல்லளாதலின் அவள் கூறும் உள்ளுறை அந்நிலத்துப் பொருள்களாகவே இருத்தல் வேண்டும்.
  • தலைவனும் நற்றாயும் செவிலியும், பாங்கனும் எல்லா நிலங்களுக்கும் சென்று வந்தவர் ஆகவே அவர்கள் எப்பொருள் பற்றியும் உள்ளுறை கூற உரிமையடையவராவர்.
  • தலைவன் தன் ஆற்றல் தோன்ற உள்ளுறை உவமம் கூறுவான்.
  • பாங்கன் பாணன் முதலாயினார் தாம்தாம் அறிந்த செய்திகளைக் கொண்டு உள்ளுறை உவமம் கூறுவர்.
  • தலைவி மருதத்துள்ளும் நெய்தலுள்ளும் பெரும்பாலும் உள்ளுறைஉவமம் கூறுவாள்.
  • தலைவனுக்கு உள்ளுறை உவமம் கூற நிலம்/திணை வரையறை இல்லை.

கிழவி சொல்லின் அவளறி கிளவி
தோழிக்காயின் நிலம் பெயர்ந்து உரையாது
ஏனோர்க்கெல்லாம் இடம் வரைவின்றே (தொல்காப்பியம்)

உள்ளுறை உவமத்தின் வகைகள்

உள்ளுறை உவமம் ஐந்து வகைப்படும். உடனுறை உள்ளுறை உவமம், உவம உள்ளுறை உவமம்,சுட்டு உள்ளுறை உவமம், நகை உள்ளுறை உவமம், சிறப்பு உள்ளுறை உவமம். இவற்றுள் உவம உள்ளுறை உவமத்தைத் தவிர மற்ரவை சங்க இலக்கிய உரையாசிரியர்களால் விளக்கிக் காட்டப்படவில்லை

எடுத்துக்காட்டுகள்

குறுந்தொகை

திணை: மருதம் பரத்தை கூற்று

கழனி மாவத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியிற் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே '

(வயல்களின் குறுக்கே ஓடும் வாய்க்காலில் உள்ள தண்ணீரில் வசிக்கும் வாளை மீன் அந்த வயலின் வரப்பில் இருக்கும் மாமரத்தில் காய்த்துக் கனிந்து விழும் மாங்கனியைக் கவ்விப் பிடித்து உண்ணும் மருத நிலங்களுக்கு சொந்தமான தலைவன் என்னுடன் இருக்கும் போது என்னைப் புகழ்ந்து பேசி விட்டு, தனது வீட்டுக்குச் சென்ற பின்பு அவன் வீட்டில் கண்ணாடி முன் நின்று கையையும் காலையும் தூக்கினால் அந்தக் கண்ணாடியில் தெரியும் பிம்பமும் தனது கையையும் காலையும் தூக்குமே , அந்தப் பிம்பத்தைப் போலத் தனது மனைவி சொல்லைத் தட்டாமல் அவளது சொற்களைக் கேட்டு வாழ்கிறான்)

உள்ளுறைப்பொருள்

பரத்தை அவளாகவே தலைவனை நாடிச் செல்லவில்லை , மாறாக அவனே அவளிடம் இன்பம் துய்க்க வந்தான் என்பது . மாமரத்தின் மாங்கனியை நாடி வாளை மீன் போகவில்லை , மாங்கனியே தானாக வந்து வாளை மீனின் வாயில் விழுந்தது என்பதால் குறிப்பாக உணர்த்தப்படுகிறது. இங்கு வாளை மீன் பரத்தைக்கும் , மாங்கனி தலைவனுக்கும் உள்ளுறை உவமை ஆகின்றன.

அகநானூறு

திணை: குறிஞ்சி

கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை
ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின்மலைப்
பல்வேறு விலங்கும் எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கெவன் அரிய. . . (அகநானூறு, 2)

பொருள்:மரத்திலேயே நன்கு பழுத்துவிட்ட குலைகளினின்றும் வாழைப் பழங்கள் கனிந்து, கீழே இருக்கும் பாறையில் உதிர்ந்து விழுகின்றna. அருகிலிருக்கும் பலா மரத்திலிருந்து அதன் பழம் பழுத்து, வெடித்துச் சிதறி, அந்த வாழைக்குலையின் மேல் விழுகிறது. அந்த இரண்டு பழங்களின் கலவை, சாறாக வழிந்தோடி பாறையின் பெரிய குழிவான பகுதியில் சேர்ந்து, ஒரு சுனை போல் ஆகிறது. நாட்பட்ட அந்தச் சாறு நொதித்துப்போய் மதுவின் நிலையை அடைந்து தெளிந்து நிற்கிறது.அந்தப் பக்கம் நீர் குடிக்க வந்த ஒரு குரங்கு இந்தத் தெளிவை நீர் என்று எண்ணிக் குடிக்கிறது.போதை தலைக்கேற மிளகுக்கொடிகள் படர்ந்த ஒரு சந்தன மரத்தில் ஏறுவதை விட்டுவிட்டு, அதன் கீழுள்ள மலர்களின் குவியலில் படுத்துத் தூங்கிவிடுகிறது. எதிர்பாராத இன்பத்தைப்பெறும்.அதுபோலவே வேறு பல விலங்குகளும் எளிதில் இன்பம் எய்தும் நாட்டை உடையவனே! நீ விரும்பும் இன்பம் உனக்கு எவ்வாறு அரிதாகும்?

உள்ளுறைப்பொருள்

தலைவியின் தாய் வாழைப்பழக் குலை போல ஓர் இனிமையான பெரிய செல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவள். தலைவியின் தந்தை பலாப்பழத்தைப்போன்று பல உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்தவன். இவர்கள் இருவரின் மகள் மயக்கும் தேறலின் சுவையைப் போன்ற தலைவியை ஆண் குரங்கு தேனை அறியாது நுகர்ந்து தன் இயல்பான தொழிலாகிய மரம் ஏறுதலையும் கைவிட்டு, உறங்குவது போல, நீயும் களவொழுக்கத்தில் இன்பம் நுகர்ந்து, உன் தொழிலாகிய அறநெறியையும் கைவிட்டு, களவொழுக்கத்தை நீட்டித்து, மணம் முடிக்காது நிற்கிறாய்- தோழி கூற்று. தோழி தலைவனிடம் மணம் மேற்கொள்ள வேண்டும் என்று நேராகக் கூறாமல் கருப்பொருள் கொண்டு குறிப்பு காட்டுகிறாள்.[1]

நற்றிணை

திணை: குறிஞ்சி தாய் தன்னை இற்செறிக்க எண்ணுகின்றாள் எனத் தலைவி குறிப்பால் கூறியது

முன்றில் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி 5
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே

வீட்டு முற்றத்தில் உள்ள பலாமரத்தின் பழுத்துள்ள சுளைகளைக் கையால் வளைத்து, புல்லிய தலையைக் கொண்ட மந்தி உண்டபின் கொட்டைகளைக் கீழே உதிர்க்க, தந்தையின் முகில் தவழும் பெரிய மலையைப் பாடியவளாய்க் குறமகள் ஐவனம் என்னும் மலைநெல்லைக் குற்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனோடு, வருத்தும் தெய்வங்கள் உள்ள மலைச் சரிவில் அருவியில் நீராடி கார்காலத்து அரும்பி மலர்ந்த, சோதிடனைப் போன்று காலங்கூறும் வேங்கை மரத்தின் பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தைவளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு வாய்ப்புக் கிட்டுமோ, நாளைக்கும் நமக்கு?

உள்ளுறைபொருள்

வீட்டு முற்றத்திலுள்ள பலாமரத்தின் பழங்களை குரங்கு உண்டு, விதைகளை உதிர்ப்பது, தலைவன் தலைவியோடு களவொழுக்கத்தில் ஈடுபட்டு மகிழ்ந்து, அதன் பலனாய் ஊரில் அலரைப் பரப்புவதைக் குறிப்பாக உணர்த்துகிறது.

உள்ளுறை உவமம், இறைச்சி- ஒப்பீடு

ஒற்றுமை
  • இரண்டும் குறிப்பால் அறியப்படுவன.
  • இரண்டும் கருப்பொருளின் அடிப்படையில் அமைவன.
  • இரண்டும் அகப்பாடலுக்கே உரியன.
வேற்றுமை

உள்ளுறையில் கருப்பொருள் தொடர்பான சொல்லும், பொருளும் அதனால் பெறப்படும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் பொருந்தி வரும். கருப்பொருள் உவமை போலவும், அதன் வழி நாம் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் உட்கருத்து உவமேயம் போலவும் அமையும்.

இறைச்சியில் கருப்பொருளும் உட்பொருளும் ஒத்து முடியாமல் எதிர் மறையாகவும் முடியலாம். இரண்டுக்கும் மேலாக வேறு ஒரு கருத்தும் வெளிப்படலாம்.

புலவன் சொல்லுகின்ற உவமத்தோடு ஒத்துக் கூறக் கருதிய பொருள் வந்து முடியுமாறு அமைந்திருப்பது உள்ளுறை உவமம். புலவன் இயற்றிய செய்யுளின் பொருளுக்குப் புறத்தே தோன்றுமாறு அதாவது குறிப்பு பொருளினின்று தோன்றும் குறிப்பு பொருள் இறைச்சி.

தலைவனிடம் வரைவு வேண்டும்போதும், வரைந்த தலைவன் பரத்தமை காரணமாகப் பிரிந்தபோதும் தலைவி தோழியரால் உள்ளுறை பயன்படுத்தப் படுகிறது. கேட்போர் எதிரில் இருக்கும்போதே உள்ளுறை பயன்படுத்தப்படுகிறது. கேட்போர் இல்லாத சூழலிலும் இறைச்சி பயன்படுத்தப் படுகிறது என்று டாக்டர் ஆ.இராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார் (அகத்திணை மாந்தர் ஓர் ஆய்வு, பக். 228).

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Feb-2023, 17:10:10 IST