பிறிதுமொழிதலணி (பிறிது மொழிதல் அணி)
பிறிது மொழிதல் அணி என்பது தான் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றை ஏற்றிக் குறிப்பாகக் கூறுதல். கருத்திலே ஒன்றைக் கொண்டு, அது குறிப்பால் விளங்கித் கொள்ளுமாறு வேறொன்றைக் கூறல். புலவர் தான் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல் அதனை ஒத்த பிறிதொன்றினைச் சொல்வது. பிறிது மொழிதலணி ஒட்டணி என்றும் அழைக்கப்படுகிறது. தண்டியலங்காரம் இதன் இலக்கணத்தை
கருதிய பொருள்தொகுத்து அதுபுலப் படுத்தற்கு
ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப
(தண்டி. நூ. 52)
என வகுக்கிறது. அகத்திணைப் பாடலில் இடம்பெறும் பிறிது மொழிதல் அணி உள்ளுறை உவமம் எனப்படுகிறது.
விளக்கம்
புலவர் உவமானத்தைக்கூறி உவமேயத்தைக் குறிப்பாக விளங்க வைப்பது பிறிது மொழிதல் அல்லது ஒட்டணி.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
திருவள்ளுவர் கூறிய பொருள்:
மென்மையான மயில் இறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டத்தை அளவோடு ஏற்றாமல் அளவுக்கு மீறி மிகுதியாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும்.
கூறக் கருதி, குறிப்பாக உணர்த்திய பொருள்
ஓர் அரசன் தன் பகைவர்கள் தன்னைக் காட்டிலும் வலிமையில் குறைந்தவர்கள் என்று கருதி வாளாவிருந்தால் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூடி அவனை எதிர்த்துப் போரிடும் பொழுது அந்த அரசன் தன் வலிமை கெட்டு அழிந்து போவான்.
கூறக் கருதிய பொருளை உவமானத்தால் குறிப்பாக உணர்த்தியதால் இது பிறிது மொழிதலாகிறது.
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு-1
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
கூறிய பொருள்
வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.
கூறக் கருதி, குறிப்பாக உணர்த்திய பொருள்
வலிமையான எதிரியிடம் போரிட்டுத் தோற்பது வலிமையற்ற எதிரியிடம் போரிட்டு வெல்வதைவிட பெருமை மிக்கது.தான் கூறவந்த பொருளை உவமானத்தின் மூலம் குறிப்பாக உணர்த்தியதால் இது பிறிது மொழிதலணி.
எடுத்துக்காட்டு-2
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
கூறிய பொருள்
முள்மரங்களை சிறியதாக இருக்கும்போதெ முளையிலேயே கிள்ளியெறிந்து நீக்கிவிடவேண்டும். வளர்ந்தபின் நீக்குவோம் என்றிருந்தால்,. நீக்க முயற்சிக்கும்போது பெரிய துன்பத்தைத் தந்துவிடும்( நீக்குபவர் கையையே வெட்டி விடும்).
கூறக் கருதி, குறிப்பாக உணர்த்திய பொருள்
நன் பகைவர் வலிமையற்றவராக் இருந்தாலும், முளையிலேயே அழித்து விட வேண்டும். வாளாவிருந்துவிட்டு பின்னர் நீக்க முயற்சிக்கும்போது பெரிய துன்பத்தைத் தந்துவிடும். பகையைப் பற்றிக் கூறவந்ததை முள்மரமாகிய உவமானத்தின் மூலம் குறிப்பாக உணர்த்தியதால் இது பிறிது மொழிதலணி.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Jan-2023, 06:25:28 IST