under review

பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்

From Tamil Wiki

பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் அகநானூற்றிலும்(2), நற்றிணையிலும்(1) உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பொதும்பை (தற்போதைய மதுரையில் பொதும்பு என வழங்கப்படும் ஊர்) என்ற ஊரில் வெண்கண்ணனார் பிறந்தார். கிழான் என்பது சிறப்புப் பெயர்.

இலக்கிய வாழ்க்கை

அவர் பாடியனவாக மூன்று பாடல்கள் அகநானூறு(130, 192), நற்றிணையில்(57) உள்ளன. குறிஞ்சி, நெய்தல் திணைப் பாடல்கள் பாடினார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நற்றேர் வழுதி கொற்கை அரசன். குதிரை சென்ற காலடிகளைக் கடலலை கொண்டுவரும் முத்துக்கள் தூர்க்கும்.
  • உவமை: காதலியின் கண் கொற்கைக் கழியில் பூத்த நெய்தல் மலர் போல் மதமதப்போடு நோக்கும்.

பாடல் நடை

  • அகநானூறு: 130

அம்ம வாழி, கேளிர்! முன் நின்று
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை,
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ,
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம்
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும்
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.

  • அகநானூறு: 192

மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல்
பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ!
யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின்
எய்யா வரி வில் அன்ன பைந் தார்,
செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி,
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல்
வளை சிறை வாரணம் கிளையொடு கவர,
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
நீ வந்து அளிக்குவைஎனினே மால் வரை
மை படு விடரகம் துழைஇ, ஒய்யென
அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்,
இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல்
உரும் இறை கொண்ட உயர்சிமைப்
பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே.

  • நற்றிணை: 57

தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்
மா மலை நாட! மருட்கை உடைத்தே-
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை, எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே!

உசாத்துணை


✅Finalised Page