ஓரம்போகியார்
ஓரம்போகியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது 110 மருதத் திணைப் பாடல்கள் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
ஓரம்போகியார் என்பது இயற்பெயர். ஓரேர் போகியார், ஒன்னார் உழவர், காம்போதியார் என்றும் சில பாடல்களில் காணப்படுகிறது. இவரை ஆதரித்தவர் சேர மன்னன் ஆதன் அவினி.
இலக்கிய வாழ்க்கை
ஓரம்போகியார் சங்கத்தொகைப் பாடல்களில் 110 பாடல்கள் பாடினார். ஐங்குறுநூற்றின் முதல் நூறு பாடல்கள் மருதத்திணைப் பாடல்கள். இவற்றை ஓரம்போகியார் பாடினார். அதைத் தவிர இவர் பத்து பாடல்கள் பாடியுள்ளார். இவற்றுள் அகத்திணைப் பாடல்கள் 9, புறத்திணைப் பாடல் ஒன்று. அகத்திணையில் ஏழு மருதத்திணைப் பாடல்கள். அகநானூற்றில் இரண்டு, குறுந்தொகையில் ஐந்து, நற்றிணையில் இரண்டு, புறநானூற்றில் ஒன்று என பாடல்கள் விரவியுள்ளன.
பாடல்கள்
- ஐங்குறுநூறு 1 முதல் 100 எண்ணுள்ள மருதத்திணைப் பாடல்கள்
- அகநானூறு 286, 316
- குறுந்தொகை 10, 70, 122, 127, 384,
- நற்றிணை 20, 360
- புறநானூறு 284
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- ஓரம்போகியார் தம்மை ஆதரித்த ஆதன் அவினியோடு கடுமான் கிள்ளி, ஆமூரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சோழன் முதலிய வேறு சிலரையும் தம் பாடல்களில் பாடியுள்ளார்.
- தலைவன் தலைவியை விட்டு பரத்தையிடம் செல்வதைப் பற்றிய பாடல்கள் பெரும்பாலும் உள்ளன.
அகநானூறு
- காஞ்சிமர நிழலில் மணலை நெல்லெனக் குவித்துக் குற்றிக்கொண்டு சிறுமியர் விளையாடும்போது அவர்களின் குடிப் பெருமையை அவர்கள் பாடும் வள்ளைப் பாட்டைக் கேட்டுக்கொண்டே வரால் மீனை அருந்திய சிரல் பறவை அங்குள்ள மருத மரத்தில் உறங்கும்.
- எருமைக்கடா பொய்கையில் ஆம்பலை மேய்ந்துவிட்டுப் பொழுது இறங்கும் நேரத்தில் வரால்மீன் எழுந்தோடும்படி தன் கொம்புகளில் பகன்றைப் பூங்கொடிகள் சுற்றிய கோலத்தில் போருக்குச் செல்லும் மள்ளர்களைப் போல வெளியேறும் ஊரன் தலைவன்.
- பால் இல்லாத வறண்ட முலையைச் சுவைக்கும் குழந்தையை எண்ணி தலைவனை ஏற்றுக் கொள்ள தலைவியிடம் தோழி கூறுகிறாள்.
குறுந்தொகை
- காஞ்சி: காஞ்சி மரங்கள் நிறைந்த ஊரன் தலைவன். உழவர் வளைத்துப் பறித்துச் சூடிக்கொள்ளும் காஞ்சி பயறு போல் மகரந்தக் காம்பினை உடையது.
- 'விழவு முதலாட்டி' என்பதில் உள்ள 'முதல்' என்னும் சொல் தலைவன் தலைவியரின் விதைமுதலாக வந்துள்ள குழந்தையைக் குறிக்கும். குழந்தைமுதல் தோன்றியுள்ளதை விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
- கொக்கு நிற்பது போல் ஆம்பல் கூம்பி நிற்கும் மாலை வந்துவிட்டது. நானும் கொக்கைப் போலவும், ஆம்பலைப் போலவும் தனியே நிற்கிறேன் என்கிறாள் தலைவி.
- தன்னைக் கொத்த வந்த குருகிடமிருந்து கெண்டைமீன் தப்பித்துகொண்டது. பின்னர் அருகில் பூத்திருந்த தாமரை மொட்டைப் பார்த்துக் கொக்கோ என மருண்டது. அது போல ஒரு பாணன் பொய் சொல்ல எந்தப் பாணனைப் பார்த்தாலும் பொய்யன் என்றே தோன்றுகிறது.
- "பரத்தையர் உழுந்து போல் திரண்ட கழுத்தையும், கரும்பைப் போல் இனிக்கும் பருத்த தோளையும் உடையவர். அவர்களின் நலனை உண்டுவிட்டுத் துறந்து சென்றாயானால் 'பிரியமாட்டேன்' என்று பரத்தையரிடம் சொன்ன சூளுரை மிகவும் நன்றாயிருக்கிறது" என பரத்தையர் கூறுவதாக உள்ளது.
நற்றிணை
- கூந்தலில் தொங்கும் மராம் பூ (மரமல்லிகைப் பூ) கமழ, கலிங்கம் என்னும் மேலாடை அசைந்துவர, வளையல் ஒலி கேட்கும்படி கைகளை வீசிக்கொண்டு அவள் தெருவில் மெல்ல மெல்ல அடியிட்டுச் சென்றாள். அவள் மேனியைச் சுணங்கு(பூப்புக்குப் பின் மகளிர் மேனியில் தோன்றும் நிறப்பொலிவு) அழகு செய்தது. அதில் பூண் அணிந்திருந்தாள். நீ அவளது மார்பில் அழுத்திய பழம் புண்ணாகிய வடு அவளது தோள்களில் இருந்தது. அதனை அவள் அணிந்திருந்த காதுக்குழை தொட்டு மகிழ்ந்துகொண்டிருந்தது.
- உவமை: விழாக் கொண்டாட்டத்துக்குப் பின் மன்றில் கிடக்கும் சிலை போலக் கொட்டுமுழக்கம் இல்லாமல் இருக்கிறாள்; பழக்குபவன் யானைமேல் இருந்துகொண்டு காழால் (அங்குசம்) குத்தியதைப் பொறுக்கமாட்டாமல் அவனைக் கையால் எடுத்துக் கவளம்போல் வைத்திருக்கும் யானை போல நான் உன்னை வைத்திருக்கிறேன் -
புறநானூறு
தூதன் நூலரிமாலையை (நூலில் கோத்த முத்துமாலை) மிறையாகத் (கொண்டி) தலையில் அணிந்துகொண்டு தனியே வருகிறான். பகையரசனின் பல்முத்து மாலை அது. அதனைப் பார்த்த வாட்படை ஒதுங்கி நின்று அவன் கோலத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரிக்கிறது.
பாடல் நடை
- அகநானூறு 286
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு,
அறனும் பொருளும் வழாமை நாடி,
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன்
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்;
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங்காலை,
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே?
- ஐங்குறுநூறு 1
(வேட்கைப் பத்தில் முதல் பாடல்)
'வாழி ஆதன், வாழி அவினி!
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க!' என வேட்டேமே.
- குறுந்தொகை 10
யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே.
- நற்றிணை 20
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்,
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,
சென்றனள் வாழிய, மடந்தை! நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,
பழம் பிணி வைகிய தோள் இணைக்
குழைந்த கோதை, கொடி முயங்கலளே.
- புறநானூறு 284
'வருகதில் வல்லே; வருகதில் வல்' என,
வேந்து விடு விழுத் தூது ஆங்கு ஆங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடி, காலின்,
தமியன் வந்த மூதிலாளன்
அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய் வாள் திருத்தா,
தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Sep-2025, 11:32:10 IST