தும்பைத் திணை
தும்பைத் திணை பண்டைத் தமிழிலக்கியத்தின் புறத்திணைகளில் ஒன்று. மண் காரணமாகவும் மதில் காரணமாகவும் நிகழ்ந்த போர்களைத் தொடர்ந்து 'வீரம்' என்பதையே மையமாக வைத்து மன்னரும், அவர் படையும் நிகழ்த்தும் போர் முறை ''தும்பைத்திணை'' எனப்படும். இப் போர் நிகழும்போது வீரர்கள் தும்பைப் பூவைச் சூடுவர்.
விளக்கம்
தும்பை தத்தம் வலிமையைக் காட்டிப் பிறரினும் மேம்பட நடப்பது. நால்வகைப் படையும் திறந்த வெளியில் நேருக்குநேர் நின்று செய்யும் கடும்போர். யார் வலியவர் என்பதே போருக்குக் காரணம். புறத்திணைகளின் இலக்கணம் கூறும் பழம்பாடல் 'அதிரப் பொருவது தும்பையாம்' என இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல்வெண்மையான தும்பைப் பூவைச் சூடிக் கொண்டு, குருதி பெருக்கெடுத்து ஓடக்கூடிய போர்க்களம் செல்லக் கருதுதல்' என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
செங்களத்து மறம்கருதி
பைந்தும்பை தலைமலைந்தன்று (கொளு - 1)
வெண்பா
கார்கருதி நின்றதிரும் கௌவை விழுப்பணையான்
சோர்குருதி சூழா நிலம்நனைப்பப் - போர்கருதித்
துப்புடைத் தும்பை மலைந்தான் துகள்அறுசீர்
வெப்புடைத் தானைஎம் வேந்து
புகழையும் சினம் மிக்க படையினையும் மேகம் போன்று முழங்குகின்ற முரசினையும் உடையவன் எம் வேந்தன். அவன், குருதி ஒழுகி நிலத்தை நனைக்கும் வண்ணம் செய்கின்ற கடும் போரையே நோக்கமாகக் கொண்டுள்ளான். அதற்காகத் தும்பை மாலையைச் சூடிப் போரினை மேற்கொண்டான்.' வெண்பா, ஒரு வீரனின் கூற்றாக அமைந்துள்ளது. தும்பைப் போரின் கடுமையைக் 'குருதி ஒழுகி நிலத்தை நனைக்கும்' என்ற குறிப்பு உணர்த்துகிறது.
தொல்காப்பியம்
தனது போர் வன்மையினை உலகத்தார் உயர்த்துப் புகழ்தலையே பொருளாகக் கருதிப் போர்மேற் கொண்டு வந்த வேந்தனை மாற்றானாகிய வேந்தன் எதிர்த்துச் சென்று அவனது தலைமையினைச் சிதைக்கும் சிறப்பினையுடையது தும்பைத்திணை என தொல்காப்பியம் கூறுகிறது.
தும்பைத் திணை நெய்தல் திணையின் புறப்பகுதியாகக் கொள்ளப்படும். அதிரப் போர் செய்ய வெட்டவெளியான நெய்தலே சிறந்தது என்பதால் இவ்வாறு வகுக்கப்பட்டிருக்கலாம்.
ஒரு வீரனின் உடலில் அம்புகளும் வேல்களும் நெருக்கமாகப் பாய்ந்து உடல் முழுதுமிருத்தலால் உயிர் சென்ற பிறகும் உடல் கீழே விழாமல் நிற்கிறது. அது மிகப் பல கால்களையுடைய அட்டையின் உடம்பு தரையில் படுதலில்லாதவாறு போல, இவ் வீரன் உடலும் தரையில் விழாது அம்பும் வேலும் தாங்கி நிற்கின்றன. இது போர் மறவனின் வீரச் சிறப்பை மட்டுமன்றிப் போரின் கடுமையையும் காட்டுகிறது.
தும்பைதானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. 12
கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு
இரு பாற் பட்ட ஒரு சிறப்பின்றே. 13
தும்பைத் திணையின் 12 துறைகளைக் குறிப்பிடுகிறது தொல்காப்பியம்
தானை யானை குதிரை என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்
வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்
தான்மீண்டு எறிந்த தார்நிலை அன்றியும்
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்
ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக்
கூழை தாங்கிய பெருமையும்
படையறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத் தானும்
களிறெறிந்து எதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு
பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அமலையும் வாள்வாய்த்து
இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்
செருவகத்து இறைவன் வீழ்வுறச்
சினைஇ
ஒருவனை
மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழிலும் உளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.
துறைகள்
தும்பைத் திணையின் துறைகள் பின்வருமாறு:
போர்ச்சூழல்
தனியியல்பு
போர்க்களத்தில் வீரச்செயல்கள்
போர்க்களத்து ஆடல்கள், கொண்டாடல்கள்
வீரச்சிறப்பு
எடுத்துக்காட்டு
புறநானூறு 283
- திணை: தும்பை துறை : பாண்பாட்டு
- பாடியவர்: அண்டர் நடுங்கல்லினார்
ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்னும்
வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
மன்றுள் என்பது கெட ......தானே பாங்கற்கு
ஆர்சூழ் குறட்டின் வேல்நிறத்து இங்க
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
மென்தோள் மகளிர் நன்று புரப்ப
இமிழ்ப்புறம் நீண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே.
பொருள் : ஒளிபொருந்திய செங்குரலிக்கொடி நிறைந்த குளிர்ந்த நீர்நிலை கலங்க, வாளைமீனை நீர்நாய் தனக்கு அன்றைய உணவாகப் பெற்றுக்கொண்டு, உணவு இல்லாமல் அங்கே வாழும் பாம்புகளை வரால்மீன் எனக்கருதி மயங்கி முதலைகளோடு மாறிமாறி முறையாக நீர்நாய்களும் முதலைகளும் போரிடும் அழும்பில் என்னும் ஊருக்குத் தலைவன், அடங்காதவனாக எதிர்நின்று போரிடக்கருதி எழுந்தான். வெற்றியை விரும்பும் கோசருடைய அவைக்களமும் போர்க்களத்தின் நடுவிடமும் இல்லையாக ... அவன் தோழனின் மார்பில் பகைவரின் அம்புகள் செருகி இருந்தன. அவை வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் அமைந்திருப்பதுபோல் இருந்தன. தோழனின் உயிர் உடலிலிருந்து நீங்காமல் ஊசலாடிக்கொண்டிருந்தது. திண்ணையில் வைத்து விளையாட வேண்டிய மண்பாவைகளைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும் சிறுமிகள் அவன் புண்களை ஆற்றி அவனை நன்கு காத்துவந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட தலைவன், சினந்து, ஒளியுடன் விளங்கும் நீண்ட பசிய இலைகளையுடைய மணங்கமழும் தும்பைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலையை நெற்றியில் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான்.
உசாத்துணை
தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2025, 11:56:48 IST