எருமை மறம்
எருமை மறம் தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. எருமை போன்று தாங்கும் வீரம் என்பது இதன் பொருள். புறமுதுகிட்ட தன் படையினரைப் பாதுகாத்து நிற்றல் எருமை மறம்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தனது படைவீரர் புறமுதுகிட்ட நிலையிலும் வியர்வை அரும்பச் சினம் கொண்டு புறமுதுகிட்ட தன் படையினருக்குப் பின்னே பகைப்படையை அஞ்சாது எதிரிட்டு நிற்றல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வெயர் பொடிப்பச் சினம் கடைஇப்
பெயர் படைக்குப் பின்நின்றன்று (கொளு 7.13)
வெண்பா
கடுங்கண் மறவன் கனல் விழியாய்ச்சீறி
நெடும்கைப் பிணத்திடையே நின்றான் - நடுங்குஅமருள்
ஆள்வெள்ளம் போகவும் போகான் கை வேலூன்றி
வாள் வெள்ளம் தன் மேல் வர (139)
பொருள்: வீரம் மிக்க தும்பை மறவன், கண்டோர் நடுங்கும் கொடிய போரில்தன் படை புறமுதுகிட, தான் அவர்களுடன் போகாமல் பகைவரின் வாள்வீரரது வெள்ளம் தன்மேல் அடர்ந்துவர நெருப்புப்போல விழித்துச் சினந்து, தன் கைவேலை ஊன்றியவாறே, நெடுங்கைகளை உடைய யானைப் பிணத்தின் நடுவே நின்றான்.
எடுத்துக்காட்டு
புறநானூறு 80
- பாடியவர்: சாத்தந்தையார் பாடப்பெற்றவன் : கோப்பெரு நற்கிள்ளி
- திணை: தும்பை துறை: எருமை மறம்
இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லற் கடந்துஅடு நிலையே.
பொருள் : ஆமூரில் மல்லன் ஒருவனைக் கோப்பெரு நற்கிள்ளி வென்றதை இப்பாடலில் புலவர் சாத்தந்தையார் புகழ்ந்து பாடுகிறார்.
இனிமையும் புளிப்பும் கூடிய (அழன்ற ) கள்ளையுடைய ஆமூரில் வலிமை பொருந்திய மற்போர் வீரன் ஒருவனின் மிக்க வலிமையை அழித்து, ஒரு கால் அவன் மார்பிலும், மற்றொரு கால் அவன் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையில் அவன் முதுகிலும் வைத்துப் பசியோடு மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப்போல் தலையும் காலும் ஆகிய இரண்டும் முறிய மோதிப் போரவையில் மற்போர் புரிய வந்த மல்லனை எதிர்த்து நின்று அவனைக் கொன்ற நிலையை வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய இவன் தந்தையாகிய
புறநானூறு 274
- பாடியவர்: உலோச்சனார்.
- திணை: தும்பை துறை: எருமை மறம்
நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியே
தன்னும் துரக்குவன் போலும்; ஒன்னலர்
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே.
பொருள் : நீல நிறமுடைய கச்சையையும், பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆடையையும், மயில் தோகையால் தொடுக்கப்பட்ட மாலையையும் உடைய பெரியோனாகிய வீரன், தன்னைக் கொல்ல வந்த யானையை நெற்றியில் வேலால் தாக்கினான். அவன், இப்பொழுது, தன் உயிரையும் கொடுத்துப் போரிடுவான் போல் தோன்றுகிறது. பகைவர் தங்கள் வலக்கரங்களில் வேலை ஏந்தி யானைகளுடன் பரவி வந்து அவன் மீது எறிந்த வேலைப் பிடுங்கி, பகைவரின் கூட்டத்தை அழித்து, அவர்களைத் தோளோடு தழுவித் தன்னுடைய உடல் வலிமையால் அவர்களை உயரத் தூக்கி, நிலத்தில் மோதி, உயிர் நீங்கிய அவர்களின் உடலைத் தூக்கிக்கொண்டு நிற்கின்றான்.
புறநானூறு 275
- பாடியவர்: ஒரூஉத்தனார்
- திணை: தும்பை துறை: எருமை மறம்
கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,
ஒத்தன்று மாதோ, இவற்கே : செற்றிய
திணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன்
வடிமாண் எ.கம் கடிமுகத்து ஏந்தி,
"ஓம்புமின், ஓம்புமின், இவண்!' ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்,
கன்றுஅமர் கறவை மான ;
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.
பொருள்: வளைந்த மாலையும், வளைத்துக் கட்டப்பட்ட ஆடையும், அரசன் விரும்புவதைக் கூறி அவனைத் தன் வசப்படுத்தும் இயல்பும் இவனிடம் பொருந்தியுள்ளன. மனவலிமையையுடன் போர்புரியும் படைவீரர்கள் அஞ்சி அலறப் படையைப் பிளந்துகொண்டு தான் செல்லும் திசையை நோக்கி, நன்கு செய்யப்பட்ட, சிறந்த, கூரிய வேலின் இலைமுகத்தை ஏந்திச் செல்கிறான். "இவனை இங்கேயே தடுத்து நிறுத்துங்கள்." என்று வீரர்கள் கூறித் தடுத்தாலும், அவர்கள் தடுப்பதைக் கடந்து, தளைபூட்டப்பட்ட யானைபோல், இறந்த வீரர்களின் குடல்கள் காலைத் தடுக்க, தன் கன்றை விரும்பும் பசுவைப் போல் பகைவரின் முன்னணிப் படையினரால் சூழப்பட்டிருக்கும் தன் தோழனைக் காப்பாற்றச் செல்கிறான்.
உசாத்துணை
தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Jun-2025, 12:15:11 IST