தும்பை அரவம்
தும்பை அரவம் தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. தும்பைப் போரைத் தொடங்கும் ஆரவாரத்தைப் பேசுவது தும்பை அரவம். தும்பை சூடிப் போரினை மேற்கொள்ளும் அரசன், தன் படை வீரர்களுக்குப் பரிசில்கள் கொடுத்து உற்சாகப்படுத்துதலை இத்துறை காட்டுகிறது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பொற்கழல் புனைந்த மன்னன் தன் படைவீரர்களுக்குத் தலையளி (சிறப்பு) செய்து ஊக்கப்படுத்துவான் என்று கூறுகிறது. எத்தகைய பொருள்கள் கொடுத்து மன்னன் ஊக்கப்படுத்துவான் என்பதைத் துறைக்குரியை வெண்பா விளக்கமாகக் காட்டுகிறது.
பொன்புனைந்த கழல்அடியான்
தன்படையைத் தலை அளித்தன்று
(கொளு 7.2)
வெண்பா
வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்
கொல்களிறும் மாவும் கொடுத்தளித்தான் - பல்புரவி
நன்மணித்தேர் நயவார் தலைபனிப்பப்
பல்மணிப் பூணான் படைக்கு (128)
பொருள்: வெல்லும் போர்க்கருவிகளையும், விரும்பும் விழுமிய பொருள்களையும்,குளுமையான அடைவு நிலங்களையும், யானை, குதிரைகளையும் பகைவர் நடுங்கும்படித் தன் படையினருக்கு வேந்தன் அளித்தான்
உசாத்துணை
தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:03:55 IST