under review

தன்னை வேட்டல்

From Tamil Wiki

தன்னை வேட்டல் தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. தன் அரசன் இறந்த்தால் வீரன் தன்னைக் களப்பலியாகக் கொடுத்தல், தலைவி தன் தலைவனைத் தேடி போர்க்களத்துக்கு வருதல் என இருவகையான பொருள்களைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் இரு கொளுப்பாடல்கள் இதன் இலக்கணத்தை வகுக்கின்றன.

கொளு 1

தன் மன்னன் வீரமரணம் அடைந்ததன் காரணமாக வீரன் தன்னை களப்பலி கொடுத்தல்.

தம் இறைவன் விசும்பு அடைந்து என
வெம் முரணான் உயிர் வேட்டன்று (கொளு 7.26)

வெண்பா

வானம் இறைவன் படர்ந்தென வாள் துடுப்பா
மனமே நெய்யா மறம் விறகாத் - தேன் இமிரும்
கள்அவிழ் கண்ணிக் கழல் வெய்யோன் வாள் அமர்
வெள்ளல்உள் வேட்டான் உயிர் (152)

பொருள்: தமது அரசன் விண்ணுலகை அடைந்தான் என வீரன் ஒருவன் தன் உயிரை ஆகுதியாகத் தந்தான். போராகிய நெருப்பில் வீரத்தை விறகாகவும், மானத்தை நெய்யாகவும், வாளை நெய் ஊற்றும் துடுப்பாகவும் கொண்டு தனது உயிரை வேள்வி செய்தான்.

கொளு 2

பகைவரைக் கொல்கிற வேலினைக் கொண்ட கணவனைக் காண அவன் மனைவி போர்க்களம் நோக்கிச் சென்றது

காய்கதிர் நெடுவேல் கணவனைக் காணிய
ஆயிழை சேறலும் அத்துறை ஆகும் (கொளு 7.27)

வெண்பா

கற்பின் விழுமியது இல்லை கடைஇறந்து
இல்பிறப்பும் நாணும் இடை ஒழிய - நற்போர்
அணங்கிய வெம்களத்து ஆர் உயிரைக் காண்பான்
வணங்கிடைத் தானே வரும் (153)

பொருள்: தன் உயிராகிய கணவனைக் காண குடிப்பிறப்பையும் நாணத்தையும் மறந்து மனை எல்லையைக் கடந்து போரில் வீரர்கள் இறந்து கிடந்த போர்க்களத்திற்குத் தனியாக வந்தாள் வீரனின் மனைவி.

உசாத்துணை

தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jul-2025, 11:17:45 IST