under review

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

From Tamil Wiki

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

கச்சிப்பேட்டு பெருந்தச்சனார் தொண்டை நாட்டில் காஞ்சி மாநகரை அடுத்த கச்சிப்பேட்டில் பிறந்தார். தச்சுத்தொழில் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் நற்றிணையில் 144, 213-ம் பாடல்களைப் பாடினார். இரண்டும் குறிஞ்சித்திணைப்பாடல்கள். குறிஞ்சி நில ஒழுக்கத்தை பாடுவதாக பாடல்கள் உள்ளன.

நற்றிணை 144-ஆவது பாடல் "ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது" என்ற துறையில் வருகிறது. தலைவன் தன்னைக்காண வரும் வழியின் ஆபத்துகளை நினைத்து தலைவி தோழியிடம் வருந்துவதாக பாடல் அமைந்துள்ளது.

நற்றிணை 213-ஆவது பாடல் "மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது" என்ற துறிஅயில் வருகிறது. தோழியர்கள் அறியாமல் தலைவியை சந்தித்து வந்த தலைவன் பிறிதொரு நாள் வரும்போது அவர்களிடம் தலைவியின் மேலுள்ள காதலைக் கூறி சந்திக்க அனுமதி பெறுவதாக அமைந்துள்ளது.

குறிஞ்சித்திணைப் பற்றிய செய்திகள்
  • இரைதேடி அலையும் பிளந்த வாயையுடைய பெண் புலி; பெரிய களிற்றியானையை புலி மோதிக் கொல்லும் போது அது மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகம் முழங்குவது போன்று பிளிற்றுகின்ற ஓசையுடையது.
  • நீரோடுகின்ற கரை காண்பதரிதாகிய "கான்யாற்றில் ஆழமுடைய புனல்".
  • அருவியொலிக்கின்ற பெரிய மலையையடைந்து, இளங்கன்று பலாப்பழத்தை தின்னும் காட்சி சொல்லப்படுகிறது. "மூங்கில் நெருங்கிய சிறுமலையின்கணுள்ள குளிர்ந்த நீர்".
  • கரிய மேகம் கல்லென்னும் ஒலியோடு மழையைப் பெய்யும். விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழுவிய கதிர்களையுடைய கொய்யத்தக்க புனைங்காவல்.
  • தலைவியை சந்திக்க தோழியின் அனுமதி தேவைப்படும் சூழல் உள்ளது.

பாடல் நடை

  • நற்றிணை 144

பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு,
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கு ஆகின்றால்- தோழி!- பகுவாய்ப்
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை,
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக்
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி,
விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே.

  • நற்றிணை 213

அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
'கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய் பயில் இறும்பின்-ம் அறல் பருகும்
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என,
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ?-
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Nov-2022, 09:44:03 IST