மாறோக்கத்து நப்பசலையார்
- நப்பசலையார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நப்பசலையார் (பெயர் பட்டியல்)
மாறோக்கத்து நப்பசலையார் சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய எட்டு பாடல்கள் சங்கநூல் தொகுப்புகளில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
மாறோக்கத்து நப்பசலையார் மாறோக்கம் என்னும் ஊரில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
மாறோக்கத்து நப்பசலையார் பாடிய பாடல்கள் நற்றிணையிலும்(304), புறநானூற்றிலும்(37, 39, 126, 174, 226, 280, 383) இடம்பெறுகின்றன.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமான் திருமுடிக் காரி, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், வானவன், வளவன், செம்பியன், சோழர், அவியன், கபிலன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் இவரின் பாடல்களில் உள்ளன.
நற்றிணை
- அசுணத்தைக் கொல்பவர் யாழை மீட்டி அது மயங்கும்போது அதனைக் கொல்வர். அசுணம் என்பது சங்க காலத்தில் இருந்த பறவை.
புறநானூறு
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்: பறவையின் துன்பம் தீர்த்த செம்பியனின் (சிபிச் சக்கரவர்த்தி) வழித்தோன்றல். முதலைகள் கொண்ட அகழிகளையும், செம்பு போன்ற திடமான கோட்டையும் சிதைக்கும் வல்லமை உடையவன். ஏழு போர்களில் வெற்றி கண்டவன். கோட்டைக் கதவின் குறுக்குத் தாழ்ப்பாள் மரம் (எழு) போன்ற தோளை உடையவன். ஆத்தி மாலை சூடியவன். குதிரை வீரன். இமயத்தில் வில் பொறித்த வானவனை வெற்றி கொண்டவன்.
- மலையமான் திருமுடிக்காரி: பெண்ணையாறு பாயும் நாட்டுக்கு உரிய தலைவன். முள்ளூர் நாட்டைத் தனதாக்கிக் கொண்டவன். பகைநாட்டை வென்று அவரது பட்டத்து யானையின் ஓடையில் (நெற்றிப் பட்டம்) இருக்கும் பொன்னைக் கொண்டு வாடாத் தாமரை செய்து பாணர்க்கு விருதளித்தான். வேறொருவரிடம் பரிசில் பெறவேண்டிப் பாடாத அளவுக்குக் கொடை அளிப்பவன். வேந்தன் தன் யானையுடன் போர்க்களத்தில் மடியும்படிப் போரிட்டு வென்றவன். அறிவில் அழுக்காறு இல்லாத அந்தணப் புலவன் அவனை கபிலர் பாடியுள்ளார்.
- வானவன்: குடகடலில் பெரும்படையுடன் நாவாய் ஓட்டினான். பொன் வளத்தைத் தன் நாட்டுக்குக் கொண்டுவந்தான். அவன் நாவாய் ஓட்டியபோது வேறு நாவாய்க் கலங்கள் ஓடாமல் பார்த்துக்கொண்டான். குடகடலில் வானவன் கப்பல் ஓட்டியபோது வேறு கப்பல்கள் குடகடலில் செல்லாது.
- மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்: முள்ளூரை ஆண்ட மன்னன்
- முள்ளூர்: கபிலன் பாடிய மலையினைக் கொண்டது. போரை விரும்பும் மறவர்களைக் கொண்டது. புலி பொறித்த கோட்டையினை உடையது.
- சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்: 'திண்தேர் வளவன்' என்று போற்றப்படுகிறான். தேர்மேல் இருந்து வலிமையாகத் தாக்க வல்லவன். பாடுபவர்களுக்கெல்லாம் வாரி வழங்குபவன். இதனை அறிந்த கூற்றுவன் இவருக்கு முன்னே கைகூப்பித் தொழுது நின்று 'உன் உயிரைத் தா' என்று பிச்சை எடுத்து, அவன் வழங்கக், கூற்றுவன் வாங்கிக்கொண்டிருக்க வேண்டும்.
- வேண்டாத நிமித்தங்கள்: பகலில் பறந்து ஒலிக்கும் தும்பி இனத்து வண்டுகள் நள்ளிரவில் பாடுகின்றன. வீட்டுக்குள்ளே எரியும் விளக்கும் ஏற்ற ஏற்ற அவிந்துபோகிறது. ஆந்தை அலறும் ஒலி கேட்கிறது. செம்முது பெண்டிர் நெல்லும் நீரும் தெளித்து விரிச்சி கேட்குமா எனக் காத்திருந்தபோது நல்ல விரிச்சிச் சொற்களும் வரவில்லை.
- கைம்பெண் நிலை: கணவன் இறந்தபின் தலையை மழித்து மொட்டைத் தலையில் இருத்தல். ஆம்பல் இலையில் அல்லிப்பொழுதில் (பொழுது புலருமுன் உள்ள வைகறைப் பொழுதில்) உணவிட்டு உண்ணும் 'கழிகல மகளிர்' போல இவனை நினைத்துக்கொண்டு வாழ்ந்திருத்தலை விட கணவனுடன் இறந்துபடுதல் மேல் என்கிறாள் தலைவி.
- அவியன்: தேரில் உலா செல்லும் வழக்கம் உடையவன். அவன் புலவருக்கு அளித்த புத்தாடை பாம்பு உரித்த தோல் போலவும், மூங்கிலில் உரிந்த தோல் போலவும் இருந்தது.
பாடல் நடை
- நற்றிணை 304
(திணை குறிஞ்சி)
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
புணரின், புணருமார் எழிலே; பிரியின்,
மணி மிடை பொன்னின் மாமை சாய, என்
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே.
- புறநானூறு 37
(திணை: வாகை; உழிஞை); (துறை: அரச வாகை குற்றுழிஞை, முதல் வஞ்சி எனவும் பாடம்) பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,
வேக வெந்திறல், நாகம் புக்கென,
விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்,
புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல்
சினங்கெழு தானைச், செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி,
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்,
செம்புஉறழ் புரிசைச், செம்மல் மூதூர்,
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்,
நல்ல என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2024, 18:46:32 IST