பிசிராந்தையார்
பிசிராந்தையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஆறு பாடல்களில் புறநானூறில் நான்கும் அகநானூறு மற்றும் நற்றிணையில் முறையே ஒன்றும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
பிசிராந்தையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாண்டிய நாட்டில் அமைந்த பிசிர் என்னும் ஊரினை சேர்ந்தவர். ஆந்தையார் என்னும் இயற்பெயர் கொண்டவர். சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனின் புகழை மாத்திரமே கேட்டு அவன் மேல் நட்பு கொண்டார். கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கும் செய்தியறிந்து அவனிடத்தே சென்று தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார். காணாமலேயே நட்புக்கு கொண்டு, நட்பின் பொருட்டு உயிர் நீத்த இவரது செயலை புறநானூற்றில் பொத்தியார் (புறம்-217) , கண்ணகனார் (புறம் -218) பாடல்களிலும் பாடிச் சிறப்பித்துள்ளனர். பிசிராந்தையார் உயர்ந்த நட்புக்கு இலக்கணமாக கூறப்படுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் புறநானூறில் 67[1], 184[2], 191[3], 212[4] ஆகிய எண் கொண்ட பாடல்களாவும் அகநானூறில் 308[5] - ம் பாடலாகவும் நற்றிணையில் 91[6] - ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. புறநானூறு 67,191,212 - ம் பாடல்கள் கோப்பெருஞ்சோழனின் சிறப்பை கூறுவதாக பாடாண் திணையில் இயன்மொழி துறையில் அமைந்துள்ளன. 184 - ம் பாடல்கள் பாண்டியன் அறிவுடைநம்பிக்கு அறவுரை கூறுவதாக செவியறிவுறூஉ துறையில் அமைந்துள்ளது. அகநானூறு 308 - ம் பாடல் இரவு நேரத்தில் வந்த தலைவனிடத்து பகல் நேரத்தில் தலைவி தினைப்புனம் காக்க வருவாள், அங்கே வருக என்று தோழி அழைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. நற்றிணை 91 - ம் பாடல் பகல் நேரத்தில் ஊரறிய வரும் தலைவனை கண்டு, உன்னை திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்துவிட்டதை உணர்த்துகிறார் போலும் என்று தோழி தலைவியிடம் உரைப்பதாக நெய்தல் திணையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
புறநானூறு
- கோப்பெருஞ்சோழனின் நாட்டில் உழவர்கள் ஆமையிறைச்சி சுட்டு தின்பர். அதனுடன் கள்ளருந்துவர். நீர் நிலைகளில் பிடித்த ஆரல் மீனை வறுத்து நிரம்ப தின்று விழாக் காலத்தில் இருப்பது போல மகிழ்வர். அத்தகைய வளம் மிக்கது சோழ நாடு.
- கோப்பெருஞ்சோழன் பசியால் வாடி வரும் பாணர்களுக்கு நிரம்ப உணவிட்டு பரிசில்கள் அளித்து அவர்தம் துன்பத்தை போக்கும் உயர் பண்பு கொண்டவன். அவன் தன் அவை புலவர் பொத்தியாரோடு மகிழ்ந்து இருப்பவன்.
- பிசிராந்தையார் மாலை நேரத்தில் தனிமையில் வாடும் போது அன்ன பறவையை கோப்பெருஞ்சோழனுக்கு தூதாக அனுப்புகிறார். அன்னப்பறவை தென்கடலில் அயிரை மீன் பிடித்து உண்டுவிட்டு வடமலையை நோக்கி பறக்கும். இடைவழியில் சோழ நாட்டில் கோப்பெருஞ்சோழனின் மாடத்தில் அடைக்கலம் புகுக. பிசிராந்தையாரின் வளர்ப்பு அன்னம் என்று சொன்னால் உனக்கு வேண்டியதை செய்வான்.
- வயது பல ஆண்டுகள் கடந்தும் தான் முதுமை அடையாமல் இருப்பதன் காரணத்தை பிசிராந்தையார் கூறுகிறார்: எனது மனைவியும் மக்களும் இளையோரும் நன்மையை செய்து வாழ்பவர்கள். மன்னன் அறம் தவறாது நாட்டை ஆட்சி செய்வன். உயர்ந்த நெறிகளை கடைபிடிக்கும் சான்றோர் பலர் வாழும் ஊர் என்னுடையது. இதுவே முதுமையில்லாமைக்கான காரணம் என்கிறார்.
- ஒருமா அளவிற்கு குறைவான நிலத்தில் விளைந்த நெல்லையும் கூட அறுவடை செய்து இடித்து கவளமாக்கி யானைக்கு உணவாக தந்தால் அது பலநாட்களுக்கு நீடிக்கும். ஆனால் யானையை நேரடியாக வயலில் இறக்கிவிட்டால், அது உண்பதை விட பலமடங்கு நெல் காலில் மிதிபட்டு வீணாகும். அது போல் அரசன் மக்களிடம் உரிய முறை அறிந்து வரி பெறுதல் வேண்டும். இல்லாவிட்டால் தானும் கெட்டு, நாட்டையும் அழிப்பான்.
அகநானூறு
- பகல் நேரத்தில் இளம்பெண்கள் தினைப்புனத்தில் விளையும் பயிரின் கதிர்களை பறவைகளிடமிருந்து காவல் காப்பர். யானைகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க மலைப்பாறை மேல் அமைக்கப்பட்ட பரண் மேல் அமர்ந்து காவல் காப்பர். இளமகளிரின் காதலை பெற்ற ஆடவர் தமக்குரிய மகளிரை வந்து சந்திப்பர். அங்கே அவர்கள் மலைக்குளத்தில் நீராடி, குவளை மலர்களை சூடி மகிழ்வர். பின்னர் மாலை வேளையில் தம் ஊருக்கு திரும்பி செல்வர்.
- உவமைகள்: தலைவனின் ஊர் மலைமேல் அமைந்தது. அங்கே காலை நேரத்தில் சூழும் மேகமூட்டம், குயவன் மட்கலத்தை சுடுகையில் உண்டாகும் புகையை போல அடர்த்தியாக இருக்கும். தலைவன், தலைவியை வந்து சந்தித்து செல்லும் காட்சி, காவலரை ஏமாற்றிவிட்டு பயிர்களை மேயும் யானையின் செயலுக்கு உவமிக்கப்பட்டது. மலை நிலத்தில் பெருமழைக்கு பின் இரவு விடிந்து கதிரவன் தோன்றும் காட்சி, புலியுடன் போரிட்டு மத்தகத்தில் ரத்தம் ஒழுகும் நீண்ட புண்ணை பெற்ற யானையின் தோற்றத்தை ஒத்துள்ளது.
நற்றிணை
- கடற்கரை சோலையில் புன்னை மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படும். அவற்றின் பொன்னிற பூக்கள் மணலில் உதிர்ந்து கிடக்கும். புன்னை மரத்தில் நாரைகள் கூடுகட்டி வசிக்கும். சிவந்த காலையும் வாயையும் நாரைகள் கடல் மேல் பறந்து சென்று மீன்களை வேட்டையாடி வரும். வேட்டையாடிய மீன்களை நாரையானது கூட்டில் பசித்திருக்கும் தம் குஞ்சுகளுக்கு உணவாக தரும்.
- காதலுக்குரிய ஆடவர் பகல் நேரத்தில் ஊரார் அறிய தம் மகளிரை சந்திப்பது, முறைப்படி திருமணம் செய்து கொள்ளப்போவதை உணர்த்தும் செயலாக அமைந்தது. ஆடவர் குதிரை பூட்டிய தேரில் கடற்கரை சோலை மலிந்த சிற்றூருக்கு வருவர்.
பாடல் நடை
புறநானூறு - 288
- திணை: பாடாண் திணை
- துறை: இயன்மொழி
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல,
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும்
மையல் மாலை, யாம் கையறுபு இனைய,
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது
சோழ நல் நாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ,
வாயில் விடாது கோயில் புக்கு, எம்
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர்
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணிய, தன்
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே.
அகநானூறு - 308
- திணை: குறிஞ்சி
- கூற்று: இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்,
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ,
கலம் சுடு புகையின் தோன்றும் நாட!
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்,
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து,
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி,
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத்
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட,
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை,
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே.
நற்றிணை - 91
- திணை: நெய்தல்
- கூற்று: தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.
நீ உணர்ந்தனையே-தோழி!-வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன்,
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய,
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க்
கடு மாப் பூண்ட நெடுந் தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jan-2026, 09:00:42 IST