under review

பாடாண் திணை

From Tamil Wiki

பாடாண் எனில் பாடப்படும் ஆண்மகனுடைய ஒழுகலாறு என்று பொருள்படும். அரசனுடைய புகழ், கொடை, அளி முதலானவற்றைக் கூறும் புறத்திணை பாடாண் திணை. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை முதலானவற்றில் சிறப்புற்ற ஆண்மகனது ஒழுகலாறுகளை உணர்த்துவது பாடாண் திணை.வெட்சி முதல் வாகைத்திணை வரை பூக்களால் திணைப்பெயர் அமைந்தது. வெட்சி முதலான போர்களை மேற்கொள்ளும்போது அவ்வப் பூக்களைச் சூடுவர். வாகை வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு எனினும் வாகை மாலை சூடுதல் மரபில் உண்டு. ஆனால் பாடாண் என்பது ஒருவனைப் பற்றிப் பாடிச் சிறப்பிப்பதாதலின் இதற்குப் பூமாலை சூடும் மரபு இல்லை. ஆகவே பூவால் அன்றிச் செய்தியால் இப்படலத்திற்குப் பெயர் ஏற்பட்டுள்ளது. பாடப்பெறும் ஆண்மகனது ஆளுமைப் பண்புகளைக் கூறுதல் என்பது இதன் பொருள். இதனைக் கொளு,

ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று (கொளு.1)

என விளக்குகிறது. 'அரசனுடைய புகழையும் வலிமையையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாது பிறர்க்கு ஈயும் வள்ளல் தன்மையையும் அருளுடைமையையும் ஆய்ந்து கூறுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா, மேற்கண்ட தன்மைகளைப் புகழும் முறையை எடுத்துக் காட்டுகிறது.

மன்னர் மடங்கல் மறையவர் சொல் மாலை
அன்ன நடையினார்க்(கு) ஆரமுதம் - துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார்
எரிசினவேல் தானைஎம் கோ

'எங்கள் மன்னன் அரசர் பலருள் அரிமா போன்றவன்; அந்தணர்களுக்குப் புகழ்மாலை போன்றவன்; அன்ன நடைப் பெண்களுக்கு அமுதத்தை ஒத்தவன்; பரிசிலர்க்கு முகில் போன்றவன்’. இவ்வாறு வெண்பா பாடாண் படலத் தன்மையை விளக்குகிறது. பாடாண் படலம் 47 துறைகளைக் கொண்டது.

வாயில் நிலை

வாயிலை அடைதல் என்பது இதன்பொருள். அரசனது அரண்மனை வாயிலை அடைந்த பரிசிலன் தன் வரவை அரசனுக்குக் கூறுமாறு வாயிற் காப்பவனிடம் கூறுதல் என்பது கொளு தரும் விளக்கம்.

புரவலன் நெடுங்கடை குறுகிய என்னிலை
கரவின்(று) உரையெனக் காவலற்(கு) உரைத்தன்று (கொளு.2)

தன்னுடைய திறனையும் வருகையையும் நோக்கத்தையும் மறைக்காது காவலன் சொல்லவேண்டும் எனப் புலவன் கேட்டுக்கொள்வான். இதற்கு வெண்பா தகுந்த விளக்கமளிக்கிறது.

நாட்டிய வாய்மொழி நாப்புலவர் நல்லிசை
ஈட்டிய சொல்லான் இவனென்று - காட்டிய
வாயிலோய் வாயில் இசை

'வாயில் காவலனே, வந்துள்ள புலவன், என்றும் நிலைக்கும் வகையில் பாடும் ஆற்றல் பெற்ற அறிவினையுடையோர் புகழும் வண்ணம், நின்னைப் புகழ்ந்து பாடும் சொல்லாற்றல் பெற்றவன்; வந்துள்ளான் என்று அரசனிடம் கூறுவாயாக’ என்பது வெண்பாவின் பொருள். தன் ஆற்றலைப் புலவன் வெளிப்படுத்தி அரசனைக் காண அனுமதி வேண்டுகிறான்.

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டு 1

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

பொருள்: வெற்றி மிகுந்த, குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்தில் வென்ற கழலணிந்த காலும், வளையணிந்த பெரிய கையையும், அழன்ற கள்ளையும் உடைய அதியர் தலைவனே! பகைவர்களைப் போரில் வெல்வதால் பெறும் செல்வத்தையும் பொன் மாலையையும் உடைய அஞ்சியே! பழைய பெரிய மலைப்பிளவின்கண் அரிய உயரத்தில் இருந்த சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியினால் விளையும் (சிறந்த) பயனைக் கூறாது தன்னுள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு அளித்தாயே! நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க! அதியனின் வீரமும், செல்வமும், கொடையும்,அருளும் கூறப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு-2

நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே. (புறம்106)

பொருள்: நல்லது தீயது என்ற இருவகையிலும் சேராத, சிறிய இலையையுடைய எருக்கம் செடியில் உள்ள மலராத பூங்கொத்தாயினும் அதுதான் தன்னிடம் உள்ளது என்று அதை ஒருவன் கடவுளுக்கு அளிப்பானானால், கடவுள் அதை விரும்ப மாட்டேன் என்று கூறுவதில்லை. அது போல், அறிவில்லாதவரோ அல்லது அற்ப குணமுடையவரோ பாரியிடம் சென்றாலும் அவர்களுக்கு கொடை வழங்குவதைத் தன் கடமையாகக் கருதுபவன் பாரி. பாரியின் கொடையைப் புகழ்ந்து கூறியதால் இது பாடாண் திணை.

கடவுள் வாழ்த்து, பூவை நிலை

முத்தெய்வங்களில் அரசனால் தொழப்படும் தெய்வத்தைப் புலவர்கள் முறைப்படி வாழ்த்துவர். அத்தெய்வத்தின் நிறத்தை எடுத்துரைப்பர். இது கடவுள் வாழ்த்து, பூவை நிலை ஆகிய துறைகளில் காட்டப்படுகிறது.

கடவுள் வாழ்த்து

கடவுளை வாழ்த்துதல் என்பது இதன் பொருள்.

காவல் கண்ணிய கழலோன் கைதொழும்
மூவரில் ஒருவனை எடுத்து உரைத்தன்று (கொளு.3)

எனக் காட்டுகிறது. 'உலகைக் காக்கும் அரசன் கைகூப்பி வணங்கும் முப்பெருந் தெய்வங்களுள் ஒன்றை வாழ்த்துதல்’ என்பது பொருள். வெண்பா, திருமாலின் சிறப்பை வாழ்த்துவதைக் காட்டுகிறது. 'திருமாலே! நீ நிலமடந்தையைத் திருவடியில் அடக்கினாய்; உலகில் உள்ளோர் பலரும் உய்ய அவதாரம் எடுத்தாய்; சக்கரப்படையையும் பாம்புப் படுக்கையையும் கொண்டுள்ளாய்’ என்று வாழ்த்துதல் பற்றி வெண்பா கூறுகிறது. பரிசில் துறை சிறப்பு மிக்க அரசனிடத்துப் பரிசில் பெறுவோர் அவனது வாயிலை அணுகி வரவை அறிவிப்பர்; அவன் வணங்கும் கடவுளரை வணங்குவர்; இன்ன பரிசை விரும்புகிறோம் என வெளிப்படுத்துவர்; இன்னின்னார் இன்னின்னது கொடுத்தது போல் கொடுக்க வேண்டுமென்பர். இச்செயல்களை வாயில் நிலை, கடவுள் வாழ்த்து, பூவை நிலை, பரிசில் துறை, இயன்மொழி வாழ்த்து ஆகிய துறைகள் விளக்குகின்றன

பூவை நிலை

பூவை எனில் காயாமரம் என்று பொருள். காயாம்பூவைப் புகழ்தல் என்பது பூவை நிலை. ‘ஆனிரையைக் காக்கும் காவலன் (திருமால்) நிறத்தொடு ஒப்புக்காட்டிக் காட்டில் மலர்ந்த காயாம் பூவைப் புகழ்தல்’ என்பது பொருள். காயாம்பூ நிறம் திருமாலின் நிறத்தை ஒத்திருக்கும் தன்மைக்காக அதைப் பாராட்டுதல் என்பதும் இறைவனின் மேனி நிறத்தைப் பாராட்டுதலேயாம்.

பூவை விரியும் புது மலரில் பூங்கழலோய்
யாவை விழுமிய யாமுணரேம் - மேவார்
மறத்தொடு மல்லர் மறம்கடந்த காளை
நிறத்தொடு நேர்தருத லான்’

(பொருள்:மாயவனது நிறத்தோடு உவமை கொள்ளுதலால் காயா மலரைப் போலச் சீரியவை எவை என நாங்கள் அறிந்திலேம்).’

பாடாண் திணையின் துறைகள்

பாடாண் திணையில் 47 துறைகள் உள்ளன

  • வாயில் நிலை
  • கடவுள் வாழ்த்து
  • பூவை நிலை
  • பரிசில் துறை
  • இயன்மொழி வாழ்த்து
  • கண்படை நிலை
  • துயிலெடை நிலை
  • மங்கல நிலை
  • விளக்குநிலை
  • கபிலை கண்ணிய புண்ணிய நிலை
  • வேள்வி நிலை
  • வெள்ளி நிலை
  • நாடு வாழ்த்து
  • கிணைநிலை
  • களவழி வாழ்த்து
  • வீற்றினிதிருந்த பெருமங்கலம்
  • குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை
  • மணமங்கலம்
  • பொலிவு மங்கலம்,
  • நாள் மங்கலம்
  • பரிசில் நிலை
  • பரிசில் விடை
  • ஆள்வினை வேள்வி,
  • பாணாற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை
  • பொருநராற்றுப் படை
  • விறலியாற்றுப்படை
  • வாயுறை வாழ்த்து
  • செவியறிவுறூஉ
  • குடைமங்கலம்
  • வாள் மங்கலம்
  • மண்ணு மங்கலம்
  • ஓம்படை
  • புறநிலை வாழ்த்து
  • கொடி நிலை
  • கந்தழி
  • வள்ளி
  • புலவராற்றுப்படை
  • புகழ்ந்தனர் பரவல்
  • பழிச்சினர் பணிதல்
  • கைக்கிளை
  • பெருந்திணை
  • புலவிபொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு
  • கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம்
  • கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
  • குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி
  • ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி

உசாத்துணை


✅Finalised Page