under review

விளக்குநிலை

From Tamil Wiki

விளக்குநிலை தமிழ்ச் சிற்றிலக்கிய (பிரபந்தம்) வகைகளுள் ஒன்று. அரசனது செங்கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை விளக்கு நிலை என்று முத்துவீரியம் குறிப்பிடுகிறது

வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய
வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட்
டோங்குமா றோங்குவ தாக வுரைப்பது
விளக்கு நிலையென விளம்பப் படுமே.
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 136

விளக்குநிலை என்பதற்கு விளக்கின் தன்மை என்பது பொருள். அரசனது விளக்கின் சிறப்பைக் கூறுதலும் செங்கோற் சிறப்பைக் கூறுவது போன்ற ஒரு மரபு.

விளக்குநிலை அரசனை உலகின் விளக்காகிய கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுவது என புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. (கொளு[1]. 13)

அடர்அவிர் பைம்பூண் வேந்தன் தன்னைச்
சுடரொடு பொருவினும் அத்துறை ஆகும்

கடல்போல் பெரிய படையினைக் கொண்ட அரசனது திருவிளக்கின் சிறப்பைக் கூறுதல் விளக்குநிலை (கொளு. 12)

அளப்பரும் கடல் தானையான்
விளக்குநிலை விரித்துரைத்தன்று (கொளு. 12)

‘காற்றுவேகமாக வீசினும் அரசனது திருவிளக்கு வலமாகச் சுழன்று ஒளி மிகுந்து காணப்படுவதால், அவன் எப்பொழுதும் வெற்றி வீரனாகவே திகழ்வான்’ என்று புறப்பொருள் வெண்பாமாலை வெண்பா விளக்குகிறது.

‘கதிரவன் தோன்றியவுடனேயே இரவில் வானில் ஒளிவீசிய விண்மீன் முதலியன ஒளி மழுங்கினாற்போல், இம்மன்னன் அரியணை ஏறிய பின் ஏனைய வேந்தர் திரள் ஒளியிழந்து நிற்கும்’ என புறப்பொருள் வெண்பாமாலையிலுள்ள வெண்பா கூறுகிறது.

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்புகள்

  1. புறப்பொருள் வெண்பாமாலை நூலில் திணை, துறை விளக்க நூற்பாக்களை அந்நூல் 'கொளு' எனக் குறிப்பிடுகிறது


✅Finalised Page