பரிசில் துறை
பரிசில் துறை பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. பரிசில் வேண்டுதலைக் காட்டும் துறை என்பது இதன் பொருள். அரசனைப் புகழ்ந்து தனக்கு இன்ன பரிசு வேண்டும் எனக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு பரிசில் துறையின் இலக்கணத்தை
மண்ணகம் காவல் மன்னர் முன்னர்
எண்ணிய பரிசில் எதுஎன உரைத்தன்று (கொளு.5)
என விளக்குகிறது. 'நாட்டைக் காக்கும் மன்னனிடம் இரவலன் எண்ணிய பரிசில் இது எனக் கூறுதல்' என்பது பொருள். இரவலன் வேண்டும் பரிசு இன்னதென எடுத்துக்காட்டி, வெண்பா விளக்குகிறது.
வரிசை கருதாது. வான் போல் தடக்கைக்
குரிசில் நீ நல்கயாம் கொள்ளும் - பரிசில்
அடுகளம் ஆர்ப்ப அமரோட்டித் தந்த
படுகளி நால்வாய்ப் பகடு. (193)
'கார்மேகம் போலக் கொடுக்கும் கைகளைக் கொண்ட மன்னனே! என் தகுதியைப் பாராதே. போர்க்களத்தில் பகைவரை வென்று நீ கைப்பற்றிக் கொண்டுவந்த களிறுகளில் ஒன்றை யான் பரிசிலாகப் பெறத் தருவாயாக' என்பது வெண்பா கூறும் கருத்து.
பரிசில் கடாநிலை, பரிசில் விடை ஆகிய துறைகளைப் பாடாண் திணையின் பகுதியாகக் குறிப்பிடும் தொல்காப்பியம் பரிசில் துறை என தனியொரு துறையாகக் குறிப்பிடவில்லை.
புறநானூறில் பரிசில் துறை
புறநானூற்றின் 17 பாடல்கள் பரிசில் துறையில் அமைந்தவை.
- புறநானூறு 126- மாறோக்கத்து நப்பசலையார் மலையமான் திருமுடிக்காரியை பாடியது
- புறநானூறு 135 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனைப் பாடியது
- புறநானூறு 137 -ஒருசிறைப் பெரியனான் நாஞ்சில் வள்ளுவனைப் பாடியது
- புறநானூறு 148 -வன்பரணர் கண்டீரக் கோப்பெருநள்ளியைப் பாடியது
- புறநானூறு 154 - மோசிகீரனார் கொண்காணங்கிணானைப் பாடியது
- புறநானூறு 168 - கருவூர் கதபிள்ளைச் சாத்தனார் பிட்டங்கொற்றனைப் பாடியது
- புறநானூறு 161-பெருஞ்சித்திரனார் குமண வள்ளலைப் பாடியது
- புறநானூறு 200 (விச்சிக்கோ), 201, 202 (இருங்கோவேள்) -கபிலர்
- புறநானூறு 203- ஊன்பொதி பசுங்குடையார் சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியைப் பாடியது
- புறநானூறு 204- கழைதின் யானையார் வல்வில் ஓரியைப் பாடியது
- புறநானூறு 205 - பெருந்தலைச்சாத்தனார் கடிய நெடுவேட்டுவனைப் பாடியது
- புறநானூறு 206-ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடியது
- புறநானூறு 207, பெருஞ்சித்திரனார் இளவெளிமானைப் பாடியது
- புறநானூறு 208 பெருஞ்சித்திரனார் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடியது
- புறநானூறு 379-புறத்திணை நன்னாகனார் ஓய்மான் வில்லியாதனைப் பாடியது
எடுத்துக்காட்டு
புறநானூறு 154
- திணை: பாடாண் துறை: பரிசில் துறை
- பாடியவர்: மோசிகீரனார்
- பாடப்பட்டவர்: கொண்கானங் கிழான்
திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழைய ராகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
யானும்,பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
ஈயென இரத்தலோ அரிதே; நீஅது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல்எனக்கு எளிதே.(154)
புறநானூறு 148
- திணை பாடாண் திணை துறை: பரிசில் துறை.
- பாடியவர் : வன்பரணர்
- பாடப்பட்டவர் : கண்டீரக் கோப்பெருநள்ளி
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின்
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி,
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து,
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப;
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி,
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே (148)
வன்பரணர் நள்ளியிடம் சென்று அவன் அவன் வெற்றிச் சிறப்பையும் வண்மையையும் புகழ்ந்தார். அதனைக் கேட்ட நள்ளி, அப்புகழுரைகளுக்குத் தான் தகுதியுடையவனா என்பதில் தனக்கு ஐயம் உண்டு என்று கூறினான். அவன் கூற்றுக்கு மறுமொழியாக, " உன் கொடையால் என் வறுமை மறைந்து விட்டது. ஆககவே, பெருமை இல்லாத மன்னர்களின் புகழ்ச்சியை விரும்பி அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகப் பொய்யாகக் கூற வேண்டிய வறிய நிலை என்னிடம் இல்லை. அதனால், என் நாக்கு ஒருவரையும் அவர் செய்யாததைக் கூறிப் பாராட்டாது" என்று கூறுகிறார்.
உசாத்துணை
- புறப்பொருள் வெண்பாமாலை, மதுரைத் திட்டம்
- புறநானூறு 154, puram400
- பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
- புறநானூறு-பரிசில் துறை பாடல்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:46:51 IST