under review

வன்பரணர்

From Tamil Wiki

வன்பரணர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஏழு பாடல்களில் புறநானூறில் ஆறும் நற்றிணையில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

வன்பரணர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பரணர் மற்றும் நெடுங்களத்து பரணர் இருவரிடம் இருந்து வேறுபட்ட தனிப்புலவர் என்பதனை குறிக்க வன்பரணர் என்று அழைக்கப்பெற்றுள்ளார். கண்டீர கோப்பெருநள்ளி மற்றும் ஓரி என்னும் மன்னர்களைk குறித்தும் பாடியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

வன்பரணர் பாடிய ஏழு பாடல்களள் புறநானூறில் 148[1], 149[2], 150[3], 152[4], 153[5], 255[6] - ம் எண் கொண்ட ஆறு பாடல்களும் நற்றிணையில் 374[7] - ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. புறநானூறு 148, 149, 150 - ம் பாடல்கள் மூன்றும் கண்டீர கோப்பெருநள்ளியின் கொடை சிறப்பையும் நாட்டு வளத்தையும் கூறுவதாக பாடாண் திணையில் அமைந்துள்ளன. புறநானூறு 152, 153 - ம் பாடல்கள் ஓரியின் கொடை சிறப்பையும் வீரத்தையும் கூறுவதாக பாடாண் திணையில் அமைந்துள்ளன. புறநானூறு 255 - ம் பாடல் கணவனை இழந்த மனைவி ஒருத்தியின் துயரை கூறுவதாக பொதுவியல் திணையில் முதுபாலை துறையில் அமைந்துள்ளது. நற்றிணை 374 - ம் பாடல் பொருளீட்டி கொண்டு இல்லம் திரும்பும் தலைவன், தலைவியை நினைத்து எதிர்படுவோரிடம் உரைப்பதாக முல்லைத் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

புறநானூறு
  • கண்டீர கோப்பெருநள்ளி பளிங்கு போன்ற நீர் நிலைகளை உடைய தோட்டி மலையை ஆண்டவன். மன்னர்கள் காடுகளில் சென்று வேட்டையாடும் வழக்கம் கொண்டிருந்தனர். மான்களை வேட்டையாடி காட்டிலேயே உண்டு சமைத்துவிட்டு செல்வர். அத்தகைய வீரம் மிக்க கண்டீர கோப்பெருநள்ளியை வன்பரணர் சந்தித்த நிகழ்ச்சியை தம் பாடலில் கூறியுள்ளார்.
  • வன்பரணர் வேற்று நாட்டில் இருந்து கிளம்பி கண்டீர கோப்பெருநள்ளியின் நாட்டின் வழிப்பாதையில் நடந்து கொண்டிருந்தார். பலநாட்களால் உண்ணாமல் கிடந்த சோர்வினால் தளர்வுற்று இருந்தார். அவர் அணிந்திருந்த கிழிந்த துணியாடைகள் மழைக்காலக் குளிருக்கு போதுமானதாக இருக்கவில்லை. குளிராலும் பசியின் விளைவாலும் ஏற்பட்ட மயக்கத்தால் பலாமரம் ஒன்றின் அடியில் விழுந்து கிடந்தார்.
  • மான்வேட்டையாடி தனியாக திரும்பி வந்த கண்டீர கோப்பெருநள்ளி வன்பரணரைக் கண்டான். வன்பரணரின் மயக்கத்தைத் தெளிவித்து, தன் வீரர்கள் திரும்பி வருவதற்குள் தன்னிடமிருந்த இறைச்சியை சமைத்து புலவரின் பசியைப் போக்கினான். பின்னர் இது மட்டுமே இப்போதைக்கு கையில் உள்ளது என்று சொல்லி, தன் மார்பில் அணிந்திருந்த முத்தாரத்தை புலவருக்கு பரிசிலாக கொடுத்தான்.
  • கண்டீர கோப்பெருநள்ளியின் செல்வ சிறப்புமிக்க தோற்றத்தை கண்டு புலவர் வினவியதற்கு மறுமொழி கூறாமல் சென்றுவிட்டான். பின்னர் மக்களிடம் விசாரித்து தன்னைக் காப்பாற்றியவன், அந்நாட்டு மன்னன் கண்டீர கோப்பெருநள்ளி என்று அறிந்து கொண்டார். அவனது அடக்க குணத்தையும் உணர்ந்து கொண்டார்.
  • கண்டீர கோப்பெருநள்ளி கொடையளிப்பதில் வள்ளல். பரிசிலருக்கு யானைகளும் நல் அணிகலன்களும் நெல்லும் வழங்கி சிறப்பிப்போன். அவன் அளித்த மிகுதியான பரிசிலால் பாணர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். மகிழ்ச்சியில் தம் நிலை மறந்த பாணர்கள், இசை இலக்கணத்தை கைவிட்டு மாலையில் மருதப்பண்ணையும் காலையில் செவ்வழிப்பண்ணையும் யாழில் இசைத்தனர்.
  • ஓரி கொல்லிமலையை ஆண்ட மன்னன். அழகிய அணிகலன்களை அணிந்தவன். தன்னை நாடி வரும் பாணர்களுக்கு நல்ல ஊனுணவும் யானையும் பொன்னும் மலையில் விளைந்த அருமணிகளையும் வழங்கி சிறப்பிப்பவன். இத்தகு சிறப்புமிக்க ஓரியை சந்தித்த நிகழ்வை வன்பரணர் தன் பாடலில் கூறியுள்ளார்.
  • ஒருமுறை வன்பரணர் தன் சுற்றத்தாருடன் காட்டுவழியில் பயணம் செய்தார். வேட்டைக்கு வந்த வீரன் ஒருவன் அம்பு தொடுக்கும் காட்சியை கண்டனர். அவனது வில்லில் இருந்த புறப்பட்ட அம்பு யானையை கொன்று, புலியை வீழ்த்தி, புள்ளிமானை துளைத்து, பன்றியை கடந்து, உடும்பு ஒன்றின் மேல் தைத்து நின்றது. இந்த அரிய காட்சியை கண்ட வன்பரணரும் வீரனை அணுகி அவனை வாழ்த்தி பாட தொடங்கினர்.
  • வன்பரணர் பாடல் பாடினர். அவருக்கு பக்கத்துணையாக விறலியர் முரசு, யாழ், பெருவங்கியம், சிறுபறை, எல்லரி, ஒருதலை பதலை ஆகிய இசைக்கருவிகளை இசைத்தனர். பாடலில் மன்னனை குறிக்கும் கோ என்னும் சொல் ஒலிக்கையில் வீரன் நாணப்பட்டான். அதன் வழியாக வீரன் அரசன் என்று அறிந்து தன் சுற்றத்துடன் வன்பரணர் ஓரியை வணங்கினார். ஓரி அவர்களுக்கு பரிசில்கள் வழங்கி சிறப்பித்தான். அவனது பரிசிலால் மகிழ்ந்த பாணர் தற்காலிகமாக பாடுவதையும் ஆடுவதையும் மறந்தனர்.
  • போர்க்களத்தில் கணவனின் பிணத்தருகே அமர்ந்து அழும் மனைவி ஒருத்தி மரணத்தின் தேவனான காலனுக்கும் தன்னை ஒத்த துயர்வரட்டும் என்று சபிக்கும் காட்சி கூறப்பட்டுள்ளது.
நற்றிணை
  • முரம்பு நிலத்தில் உப்பு வணிகம் உமணர்களின் சிற்றூர் அமைந்திருக்கும். அந்த களர்நிலத்தில் புளியமரங்கள் விளைந்து நிற்கும். பசியால் வாடும் ஊருக்கு வரும் புதிய வழிப்போக்கர்கள் புளியம்பழங்களைத் தின்று தம் பசியைப் போக்கிக் கொள்வர்.
  • தலைவன் வருவதை அறிந்த தலைவி, அவனுக்காக விருந்து சமைப்பாள். அவள் அழகிய கருங்கூந்தலை உடையவள். தலைவன் இல்லாத பிரிவுக் காலத்தில் துயரத்தால் வருந்தி கண்ணீர்விடும் இளம்பெண்.

பாடல் நடை

புறநானூறு - 149

நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணி, காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி,
வரவு எமர் மறந்தனர் அது நீ
புரவுக் கடன் பூண்ட வண்மையானே.

நற்றிணை - 374

  • திணை: முல்லை
  • கூற்று: வினை முற்றி மீள்வான் இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது

முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!
முற்றையும் உடையமோ மற்றே-பிற்றை
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே?

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Feb-2026, 16:50:33 IST