முதுபாலை
முதுபாலை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. முதுபாலை பெரும்பிரிவைக் குறிக்கிறது. பெண்கள் போரில் இறந்த கணவனை நிரந்தமாகப் பிரியும் நிலையைக் கூறுவது
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மூங்கில் நிறைந்த பாலை நிலத்தில் எதிர்பாராமல் தன் கணவனை இழந்த தலைவியின் தனிமையைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
காம்பு உயர் கடத்திடைக் கணவனை இழந்த
பூங்கொடி மடந்தை புலம் பரைத்தன்று(கொளு 11.1)
வெண்பா
நீர் மலி கண்ணொடு நின்றேன் நிலை இரங்காய்
தார்மலி மார்பன் தகை அகலம் - சூர் மகளே
வெள்ளில் விளைஉதிரும் வேய்ஓங்கும் வெம்சுரத்து
கொள்ளல் நீ கோடல் கொடிது (254)
பொருள்: பேய் மகளே! விளாவினது பழம் உதிரின்ற, மூங்கில் ஓங்கினதுமான கொடும் பாலையில், கணவனை இழந்து நீர்மிகும் கண்ணொடு தனியளாகி நின்ற என் நிலையினுக்கு இரங்காயோ? மாலைமிக்க மார்பினை உடைய என் கணவனது அழகிய மார்பகத்தை, நீ கொள்ளுதலை ஒழிவாயாக அங்ஙனம் இரங்காமல் இருப்பது மிகவும் கொடுமையானது! விளங்கனிகள் உதிரும் இக்கொடிய பாலையில் கணவன் இறக்க, அவன் பிணத்தை வைத்துப் புலம்பும் என் துயர்கண்டு இரங்காமல் அவன் உடலை உன் உணவுக்காகக் கைப்பற்ற முயலும் உன் செயல் மிகக் கொடியது.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2025, 12:15:55 IST