பொதுவியல் திணை
பொதுவியல் திணை புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது. பொதுவியல் திணை என்பது வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது திணைகளில் அடக்கிக் கூறமுடியாத பொதுவான செய்திகளைக் கூறும் திணை. இது யாப்பு முதலான பிற இலக்கண நூல்களில் இடம்பெறுகிற ஒழிபியல் போன்றது. பொதுவியல் பால, சிறப்பிற் பொதுவியல் பால, காஞ்சிப் பொதுவியல்பால, முல்லைப் பொதுவியல்பால என நான்கு பிரிவுகளில் செய்திகளைக் கூறுகிறது.
பொதுவியல் திணை மூவேந்தருக்குரிய அடையாளப் பூக்களான போந்தை, வேம்பு, ஆர் ஆகியனவற்றின் சிறப்பும், அரசனின் தளராத வீரத்தைப் போற்றும் நிலையும், போர் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான நடுகல் பற்றியும், மனித சமூகத்திற்கு இன்றியமையாத உறுதிப் பொருள்களாக உள்ளவற்றையும், நிலையாமை இயல்பையும் துறைகள் வழி கூறுகிறது. ஆண் பெண் இணைந்து வாழும் இல்லற வாழ்வில் ஒருவருக் கொருவர் கொண்ட அன்பின் பிணைப்பையும் இல்லற மாண்புகளையும் பொதுவியல் திணை அன்றைய சமூகத்தின் வாழ்வியலை வெளிப்படுத்துகின்றன.
இலக்கணம்
நலமர் செய்து படையுள் தப்பாது
நல்ஆண் மாக்கள் எல்லாரும் பெறுதலின்
திறம்பட மொழிந்து தெரிய விரித்து
முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே
ஏழு புறத்திணைகளுக்கும் பொதுவானவையும், அவற்றில் கூறப்படாதவையும் மக்களுக்கு நன்மை பயப்பவையாகவும் உள்ளவை பெருந்திணையின் பால் படும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
விளக்கம்
மூவேந்தர்களுக்குரிய அடையாளப் பூவைச் சிறப்பித்தல், தளர்ச்சியில்லாத வீரத்தைச் சிறப்பித்தல், போர்க்களத்து வீரச் செயல் புரிந்து இறந்துவிட்ட வீரனுக்கு நடுகல் நாட்டல் ஆகிய செய்திகள் பொதுவியற்பால என்ற முதல் பகுதியில் கூறப் படுகின்றன. இப்பகுப்பின் அடிப்படையில் பொதுவியல்பால என்ற பகுதிச் செய்திகள் பாடத்தில், மூவேந்தருக்குரிய பூக்கள், வீரத்தைப் போற்றுதல், நடுகல் ஆகிய மூன்று தலைப்புகளில் தரப்படுகின்றன.
மனைவி, கணவனை இழந்து அடையும் துன்ப நிலைகள், மனைவியை இழந்த கணவன் அடையும் துன்ப நிலைகள், கணவன் இறக்க மனைவி அதனை நிமித்தத்தால் உணர்ந்து துன்புறுதல், பிள்ளையை இழந்து தவிக்கும் தாயின் நிலை, எரிக்கப்படும் கணவன் பிணத்தோடு தன்னையும் எரித்துக்கொள்ள மனைவி நிற்கும் நிலை, வேந்தன் இறக்க அவனைச் சார்ந்தோர் வருந்துதல் முதலான துன்ப நிலைகள் இப்பகுதியில் கூறப்படுகின்றன. முதுபாலை, சுரநடை, தபுதார நிலை, தாபத நிலை, தலைப் பெயல் நிலை, பூசல்மயக்கு, மாலை நிலை, மூதானந்தம், ஆனந்தம், ஆனந்தப் பையுள், கையறு நிலை ஆகிய துறைகளில் இவ்விழப்புச் செய்திகள் விளக்கப்படுகின்றன. இவற்றைச் சிறப்பிற் பொதுவியல்பால என வெண்பாமாலை குறிப்பிடுகிறது. எல்லாத் திணைகளிலும் நேரக்கூடிய பொதுவான இழப்புகள் என்பதால் பொதுவியலில் தரப்பட்டுள்ளன.
தொல்காப்பியர் காஞ்சித்திணையில் குறிப்பிட்ட நிலையாமைச் செய்திகளும் உறுதிப்பொருள் குறித்த செய்திகளும் புறப்பொருள் வெண்பா மாலையில் காஞ்சிப் பொதுவியற் பால என்ற மூன்றாம் பகுதியில் கூறப்படுகின்றன. காஞ்சித் திணையைப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் போர்த்திணையாக, மண்மீட்கும் செயலைக் குறிப்பதாகக் கொண்டுள்ளார். எனவே இச்செய்திகள் பொதுவியலில் இடம்பெற்றுள்ளன.
முல்லைப் பொதுவியற்பால என்னும் நான்காம் பகுதியில் பிரிந்த தலைவன் தலைவி கூடி மகிழ்வதும், இல்லறச் சிறப்பும், தலைவியின் கற்பு மாண்பும் பேசப்படுகின்றன.
நான்கு பகுதிகளுக்கும் முறையே 12, 11, 6, 8 என மொத்தம் 37 துறைகள் இத்திணையில் கூறப்படுகின்றன.
போர்க்களத்தில் நெறிமுறையிலிருந்து வழுவாமல் நல்ல போர் செய்த நல்ல வீரர்கள் அனைவரும் பெறுவதால் முன்பு முறைப்பட விரித்துச் சொன்ன வெட்சி முதல் பாடாண் திணை ஈராக எழுதிணைக்கும் உரியதான செய்திகளைக் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
துறைகள்
பொதுவியல்பால
- மூவேந்தருக்குரிய பூக்கள்
- வீரத்தைப் போற்றுதல்
- நடுகல்
சிறப்பிற் பொதுவியல்பால
- முதுபாலை
- சுரநடை
- தபுதார நிலை
- தாபத நிலை
- தலைப் பெயல் நிலை
- பூசல்மயக்கு
- மாலை நிலை
- மூதானந்தம்
- ஆனந்தம்
- ஆனந்தப் பையுள்
- கையறு நிலை
காஞ்சிப் பொதுவியல்பால
முல்லைப் பொதுவியல்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Apr-2025, 10:19:58 IST