under review

காடுவாழ்த்து

From Tamil Wiki

காடு வாழ்த்து பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. பொதுவியல் திணையில் நிலையாமையைக் கூறும் காஞ்சிப் பொதுவியல் என்னும் பிரிவில் அடங்கும் துறை. இடுகாட்டை வாழ்த்துவது, அதன் பெருமையைக் கூறுவது இவற்றின் மூலம் வாழ்வின் நிலையாமையைக் கூறுவதே காடு வாழ்த்து.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு காடு வாழ்த்து என்னும் துறையின் இலக்கணத்தை

பல்லவர்க்(கு) இரங்கும் பாடுஇமிழ் நெய்தல்
கல்என ஒலிக்கும் காடுவாழ்த் தின்று

பலருக்கும் சாவின்போது ஒலிக்கப்படும் சாப்பறை, சுடுகாட்டை வாழ்த்துவது போன்று இருப்பது எனக் கூறுகிறது.

முன்புறந்தான்காணும் இவ்வுலகை இவ்வுலகில் -
தன்புறங்கண்டறிவார் தாமில்லை-அன்பின்
அழுதார்கணிவிடுத்த வாறாடிக் கூகை
கழுதார்ந்திரவழங்குங் காடு. 274 -

'இவ்வுலக இயல்பை நமக்கு உணர்த்தும் சுடுகாடு, பலரும் அழியவும், தான்மட்டும் அழியாமல் நிற்கிறது' என எடுத்துக்காட்டு வெண்பா நிலையாமையின் நிலைத்த தன்மையை உணர்த்துகிறது.

தொல்காப்பியம்

"மலர் தலை உலகத்து மரபு நன்கறியப், பலர் செலச்செல்லாக் காடு வாழ்த்து"எனத் தொல்காப்பியம் (புறத். சூ. 24) இதன் இலக்கணத்தைக் கூறுகிறது. இளம்பூரணர் தமது தொல்காப்பிய உரையில் புறநானூறின் 356-ம் பாடலை காடு வாழ்த்துக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார்.

எடுத்துக்காட்டு

புறநானூறு 356

களரி பரந்து, கள்ளி போகி,
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல்,
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு;
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து
மன்பதைக்கு எல்லாம் தானாய்,
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே.

களர் நிலம் பெருகிக் கள்ளி முளைத்தது. பகலில் கூவும் கூகைகளாலும் பிணம் சுடும் தீயின் வெளிச்சத்தாலும் சூழ்ந்த இந்த சுடுகாடு காண்போர்க்கு அச்சத்தை வரவழைக்கிறது. இறந்தவர்களை மனத்தால் விரும்புபவர்கள் அழுவதால் சொரிந்த கண்ணீர், எலும்புகள் கிடக்கும் சுடுகாட்டிலுள்ள சாம்பலை அவிப்ப, எல்லாரையும் வெற்றிகண்டு உலகத்து மக்கட்கெல்லாம் தானே முடிவிடமாகிய சுடுகாடு, தன்னை வெற்றி காண வல்லவர்களைக் கண்டதில்லை- என இடுகாட்டை வாழ்த்துவதுபோல் நிலையாமையைக் கூறுவதால் இது காடு வாழ்த்து.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jan-2025, 08:17:51 IST