ஆனந்தப் பையுள்
ஆனந்தப் பையுள் பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. ஆனந்தம் என்பது பொதுவியலில் இறப்பைக் குறிக்கிறது.கணவன் இறப்பினால் நலிந்து வருந்தும் பெண்ணின் நிலையைக் கூறுவது ஆனந்தப் பையுள்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மூங்கிலைப் போன்ற தோளினை உடையாள், தன்னுடைய கணவன் இறந்துபட, அதனால் இடும்பை மிகுந்தாளாகி மெலிந்து வருந்தியது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
விழுமம் கூர வேய்த்தோள் அரிவை
கொழுநன் வீயக் குழைந்து உயங்கின்று(கொளு 11.13)
வெண்பா
புகழ் ஒழிய வையகத்துப் பூங்கழல் காளை
திகழ் ஒளிய மாவிசும்பு சேர - இகழ்வார் முன்
கண்டே கழிகாதல் இல்லையால் கைசொர்ந்தும்
உண்டே அளித்து என் உயர் (266)
பொருள்: பொலிந்த வீரக்கழலினையுடைய தலைவன், தன்னுடைய புகழ் நிற்க, வானுலகம் சென்றான். அவனுடன் போகாத என்னை இகழ்கின்றாரை எதிரே கண்டும், அவன் பிரிவாலே செயலற்று நின்றும், உடனே அவனுடன் சென்றுவிடும் பெரிதான காதல் என்பது என்னிடத்தே இல்லையே என்றும் என் உயிர் இன்னமும் இருப்பதும் இரங்கத்தக்கது.
எடுத்துக்காட்டு
புறநானூறு 246
- பாடியவர்: பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு.
- திணை: பொதுவியல்; துறை:ஆனந்தப்பையுள்.
- பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவன் மனைவி, பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிந்தாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவள் தன் கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே தான் விரும்புவதாக இப்பாடலில் கூறுகிறார்.
பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!
பொருள்: பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! "உன் கணவனோடு நீ இறந்து போ" என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய வழிகளில் சிந்திக்கும் பெரியோர்களே! அணில்களின் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெள்ளை நிறமான, மணமுள்ள, நெய் கலவாத, பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய துவையலுடன், புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறிய கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லள். சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்குத் தாங்க முடியாதாதாக இருக்கலாம்; எனக்கு, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒன்றே.
புறநானூறு 247
- பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
- திணை: பொதுவியல்; துறை :ஆனந்தப்பையுள்.
- பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்ததைக் கண்டு பாடியது
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவன் மனைவி, பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிந்தாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவள் தன் கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே தான் விரும்புவதாக இப்பாடலில் கூறுகிறார்.
யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரும் அம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே.
பொருள்:பெண் தெய்வத்தின் கோயில் முற்றத்தில், யானைகொண்டுவந்து தந்த, காய்ந்த விறகால் வேடர்கள் மூட்டிய தீயின் ஒளியில் மடப்பம் பொருந்திய மான்களின் கூட்டம் தங்கி உறங்கிக்கொண்டிருந்தது. அங்கு குரங்குகள் தீயைக் கிளறி ஆர்ப்பரித்து அந்த மான்களை உறக்கத்திலிருந்து எழுப்பின. ஓயாது முரசு ஒலிக்கும், காவலுடைய பெரிய அரண்மனையிலிருந்து சிறுபொழுது தன் கணவனைவிட்டுப் பிரிந்து தனித்திருந்தாலும் உயிர் நடுங்கும் பெருங்கோப்பெண்டு, இப்பொழுது நீர் வடியும் தழைத்த கூந்தல் முதுகில் தாழ, தனியளாக, துயரம் மிகுந்த கண்களோடு, பெண் தெய்வத்தின் கோயிலின் முற்றத்திலிருந்து, சுடுகாட்டில் மூட்டப்பட்ட தீயை நோக்கி மனத் துயரத்தோடு, தன் இளமையைத் துறந்து பெருங்கோப்பெண்டு சென்றாள்.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jun-2025, 10:53:49 IST