முல்லை(பொதுவியல் திணை)
முல்லை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. பொதுவியல் திணையின் கணவன் மனைவி இருவரிடயே நிகழும் உறவைக் கூறும் முல்லை பொதுவியற்பால என்னும் பிரிவில் அடங்கும் துறை. போர்த்துறைகளில் இவை அடங்காததால் பொதுவியல் திணையில் கூறப்படுகின்றன. முல்லை என்னும் துறை வீரமுள்ள ஆணொருவன் தன்னிடம் அன்பு கொண்ட பெண்ணுடன் கூடி அன்புடன் வாழ்தலைக் கூறுகிறது.
அகப்பொருளில் வரும் முல்லைத் திணை, இருத்தலும் இருத்தல் நிமித்தமும் கூறுவது. புறப்பொருளில் பொதுவியலில் வரும் முல்லை இயல்பு மிகுதி உரைப்பது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பெரிய மலை போன்ற மார்பினை உடையவன், தன்னிடத்தே அன்பினைக் கொண்ட பெண்ணுடன் கூடி மகிழ்ந்ததைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
தடவரை மார்பன் தன்னமர் காதல்
மடவரல் புணர்ந்த மகிழ்ச்சி நிலை உரைத்தன்று (கொளு 13.1)
வெண்பா
ஊதை உளர ஒசிந்து மணம் கமழும்
கோதைபோல் முல்லைக்கொடி மருங்குல் - பேதை
இவைஇ இணைந்த குவிமுலை ஆகம்
கவைஇக் கவலை இலம் (275)
பொருள்: காற்றில் அசையும் மணக்கும் முல்லைக் கொடி போன்ற இடையுடைய பெண்ணுடலைத் தழுவிக் கவலையின்றி வாழ்கிறேன் என்பது ஆண்மகன் ஒருவனின் கூற்று.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Jul-2025, 18:25:15 IST