under review

பால்முல்லை(பொதுவியல் திணை)

From Tamil Wiki

பால் முல்லை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. பொதுவியல் திணையின் கணவன் மனைவி இருவரிடயே நிகழும் உறவைக் கூறும் முல்லை பொதுவியற்பால என்னும் பிரிவில் அடங்கும் துறை. போர்த்துறைகளில் இவை அடங்காததால் பொதுவியல் திணையில் கூறப்படுகின்றன.

பால் முல்லை பாலை(விதியை)ப் பாராட்டும் துறை. தலைவியைத் தனக்களித்த நல்லூழைப் பாராட்டும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மையுண்ட விழிகளையும் அணிகளையும் உடையவளான பெண்ணை மணந்தவன், அதற்குக் காரணமான விதியை (பாலை) வாழ்த்துதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

அரிபாய் உண்கண் ஆயிழைப் புணர்ந்தோன்
பரிவகல் உள்ளமொடு பால் வாழ்ந்தின்று(கொளு 13.7)

வெண்பா

திங்கள் விளங்கும் திகழ்ந்திலங்கு பேரொளி
அங்கண் விசும்பின் அகத்துறைக - செங்கண்
குயில் அனைய தேமொழிக் கூர் எயிற்றுச் செவ்வாய்ப்
பயில் வளையை நல்கிய பால் (281)

பொருள்: கடை சிவந்த கண்களையும், குயிலைப் போன்ற இனிய பேச்சினையும், கூர்மையான பற்களைக் கொண்ட சிவந்த வாயினையும், செறிந்த வளையல்களையும் உடைய இவளை, எனக்கு மனைவியாகத் தந்தருளிய விதியானது, திங்கள் மண்டிலம் விளங்கும் பெரிதான சோதியை உடைய அழகிய இடமகன்ற வானத்தின் அகத்தாகச் சென்று உறைவதாக!

உசாத்துணை

பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2025, 10:47:47 IST