பெருங்காஞ்சி(பொதுவியல் திணை)
பெருங்காஞ்சி பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. உலகின் நிலையாமையைக் கூறுவது.
காஞ்சித் திணையிலும் பெரும்காஞ்சி என்ற துறை உண்டு.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் மலைகள் ஓங்கிய இம்மாநிலத்தின் நிலையாத தன்மையைச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
மலை ஓங்கிய மாநிலத்து
நிலையாமை நெறி உரைத்தன்று (கொளு 12.2)
வெண்பா
ஆயாது அறிவு அயர்ந்து அல்லாங்கு அகலிடத்து
மாயா நிதியம் அனைச் செறீஇ - ஈயாது
இறுகப் பொதியன்மின் இன்றொடு நாளைக்
குறுக வருமரோ கூற்று (270)
பொருள்: இவ்வுலகம் நிலையற்றது. இன்றோ நாளையோ எமன் நம்மைத் தேடி வரக்கூடும்; பாடுபட்டுப் பெரும்பொருளைச் சேர்த்து வைத்து, வறியோர்க்கு வழங்காது வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ள வேண்டாம்.
புறநானூற்றின் 357, 359, 360, 362, 363, 364, 365, 366 எண்ணுள்ள பாடல்கள் பொதுவியல் திணையின் பெருங்காஞ்சித் துறையைச் சார்ந்தவை.
எடுத்துக்காட்டு
புறநானூறு 362
- பாடியவர்: சிறுவெண்தேரையார்
- திணை: பொதுவியல்;துறை: பெருங்காஞ்சி
ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த
மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்
பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி
அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை
கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்
தாக்குரல் கேண்மின் அந்த ணாளிர்
நான்மறை குறித்தன்று அருள்ஆ காமையின்;
அறம்குறித் தன்று பொருளா குதலின்;
மருள்தீர்ந்து மயக்குஒரீஇக்
கைபெய்தநீர் கடற்பரப்ப
ஆம்இருந்த அடைநல்கிச்
சோறு கொடுத்து மிகப்பெரிதும்
வீறுசால் நன்கலம் வீசிநன்றும்
சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்
வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல்என்று இல்வயின் பெயர மெல்ல
இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே.
பொருள்: கதிரவனைப்போல் ஒளியுடன் திகழும் ஆராய்ந்தெடுத்த மணிகள் பதித்த, பிறைமதி போன்ற வளைந்த மாலை எம் தலைவனின் மார்பில் தவழ்கிறது. பலியூட்டப்பட்ட முரசு பாசறையில் ஒலிக்கின்றது, நாடு முழுதும் பரந்து நின்று, பெரிய வீரச் செயல்களைச் செய்யும் ஆடவர், போரை விரும்பி, வெற்றியையுடைய வெண்மையான கொடியை ஏந்தி வருவது, வருத்தும் தெய்வம் வருவதைப் போல் காட்சி அளிக்கிறது. அவ்வீரர்களின் கூட்டத்திலிருந்து, கூற்றுவனைப்போல் எவராலும் எதிர்த்தற்கு அரிய வலிமையுடன், பகைவரைத் தாக்குதற்கு அவர்கள் எழுப்பும் ஒலியைக் கேட்பீராக. அந்தணர்களே! இப்போர் அருளின் அடிப்படையில் செய்யப்படாததால், நான்கு வேதங்களில் இதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இது பொருள்பற்றிய செயலாகையால், இது அறநூல்களிலும் கூறப்படவில்லை. நிலையாமையைப் பற்றிய தெளிவின்மை நீங்கி, தெளிவு பிறந்த பிறகு, நீர்வளம் அமைந்த ஊர்களை எம் தலைவன் அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் பொழுது அவர்கள் கையில் வார்த்த நீர், கடல்வரை ஓடியது. அவன் இரவலர்களுக்குச் சோறு வழங்கினான்; பரிசிலர்களுக்குப் பெருமைக்குரிய நல்ல அணிகலன்களைப் பெருமளவில் கொடுத்தான். சிறிய வெண்ணிற எலும்புகள் கிடக்கும் நெடிய வெண்மையான களர் நிலத்தில் வலிய வாயையுடைய காக்கையும் கூகையும் கூடிப் பகற்பொழுதில் கூவும் அகன்ற இடத்தில் உள்ள சுடுகாடுதான் அனைவரும் முடிவில் அடையும் இடம். இந்த உண்மை புலப்படாதவாறு, தன் இல்லத்தில் சுற்றத்தார் நிறைதலால், இனி அங்குத் தனக்கு இடமில்லை என்று அங்கிருந்து மெல்ல நீங்கக் கருதியும், உலகம் சிறிதாதலால் இங்கு இனி இயங்குவதற்கு அஞ்சியும், விண்ணுலகுக்குத் தன் புகழுடம்புடன் செல்வதற்காக அவன் போரிடுகின்றான்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jul-2025, 21:16:49 IST