under review

பெரும் காஞ்சி(காஞ்சித் திணை)

From Tamil Wiki

பெரும் காஞ்சி காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. மறவர், தமது பெரும் ஆற்றலைப் போர்க் களத்தில் வெளிப்படுத்தல் பற்றிக் கூறுவது பெருங்காஞ்சி.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தம்மேல் வரும் பகைப் படையைத் தடுத்துத் தாங்கும் ஆற்றலையுடைய மறவர்கள், தங்கள் போர் ஆற்றலை, வஞ்சியாரின் பெரிய படையை எதிர்த்துத் தாங்கும் செயலால் வெளிப்படுத்துவது பெருங்காஞ்சித் துறை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 தாங்குதிறல் மறவர் தத்தம் ஆற்றல்
வீங்குபெரும் படையின் வெளிப்படுத் தன்று.(4.6)

வெண்பா

வில்லார் குறும்பிடை வேறு வேறு ஆர்த்து எழுந்த
கல்லா மறவர் கணைமாரி - ஒல்லா
வெருவி மறவேந்தர் வெல் களிறு எல்லாம்
இருவி வரை போன்ற இன்று (66)

பொருள்: காஞ்சி மறவரால் எய்யப்பட்ட அம்பு மாரி பாய்ந்து, எதிரில் நின்ற பகை மன்னரின் போர்க் களிறுகள் எல்லாம், தினை (கதிர்) அரியப்பட்டு எஞ்சிக் கிடந்த தாள்களையுடைய மலைபோலத் தோற்றம் அளிக்கின்றன.

உசாத்துணை

காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2025, 12:29:58 IST