under review

காஞ்சித் திணை

From Tamil Wiki

காஞ்சித்திணை சங்க இலக்கியத்தின் புறத்திணைகளில் ஒன்று. தன் நாட்டைக் கைப்பற்றப் படை வஞ்சிப்பூ சூடி வரும் பகைவருக்கு எதிராக காஞ்சிப் பூ சூடிப் போரிட்டுத் தன் நாட்டினைக் காத்துக் கொள்வதைக் கூறுவது காஞ்சித்திணை.

விளக்கம்

வஞ்சித்திணைக்கு நேர் எதிரான போர்ச்செயல் காஞ்சித்திணை எனப்பட்டது. வஞ்சிவேந்தன் தன் நாட்டைக் கைப்பற்றப் படை கொண்டு வருதலை அறிந்த மன்னன், அவனுக்கு எதிராகப் போரிட்டுத் தன் நாட்டினைக் காத்துக் கொள்வது காஞ்சித்திணை எனப்படும். இப் போர் மேற்கொள்ளும் வீரர்கள் காஞ்சிப் பூச் சூடிச் செல்வது மரபு.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு வேகும் சினத்தையுடைய பகை மன்னனாகிய வஞ்சி வேந்தன் போர் மேற்கொண்டு தன் நாட்டின்கண் வந்துவிட, அந்நாட்டிற்குரிய காஞ்சி மன்னன் காஞ்சிமாலையைச் சூடிக்கொண்டு தனது காவல் இடத்தைக் காக்க நினைந்தது

வேம்சின மாற்றான் விடுதர வேந்தன்
காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று

என்று காஞ்சித் திணைக்கு இலக்கணம் வகுக்கிறது.

வெண்பா

அருவரை பாய்ந்துஇறுதும் என்பார்பண்டு இன்றுஇப்
பெருவரைச் சீறூர் கருதிச் - செருவெய்யோன்
காஞ்சி மலையக் கடைக்கணித்து நிற்பதோ
தோம்செய் மறவர் தொழில்?

"காஞ்சி மறவர்கள், தமது வீரத்தை நிலைநாட்டுதற்குரிய போரினை வாய்க்கப் பெற்றிலாமையால், மலையினின்று வீழ்ந்தேனும் இறப்போம் என்றிருந்த நிலையில், காஞ்சி மன்னன் தனது மலையகத்துச் சீறூரைக் காக்கக் காஞ்சிப் பூவைச் சூடி மலைந்தான். (சீறூர் = மலைப்பகுதியில் உள்ள சிறிய ஊர்) அது கண்ட மறவர்கள் போர்க்கென அணிவகுத்து நிற்கவில்லை; பகைவரைத் தாக்கச் சென்று விட்டனர். 'எள்' என்றால், 'எண்ணெய்' ஆகின்றனர்" என்ற பொருளை உடையது.

வளர்ச்சி

தொல்காப்பியத்தில் காஞ்சி என்றதொரு திணையைத் கொண்ட தொல்காப்பியர் அதில் கூறுவது நிலையாமையையே. தொல்காப்பியம் நிலையாமையை உணர்த்துவதற்குக் கொண்ட துறைகள் பெரும்பான்மையும் எதிர் ஊன்றிய போர்க்கள நிகழ்ச்சிகளாகவே அமைகின்றன.செல்வம், அரசு, உடல், இளமை அனைத்தும் ஒட்டு மொத்தமாக அழியக் கூடிய இடம் போர்க்களம் என்பதால் இருக்கலாம். நிலையாமை என்றும் அறத்தை எதிர் ஊன்றலாகிய மறத்தில் வைத்துக் காட்டுவது கொள்கையாக இருந்து வந்துள்ளது. பின்னாளில் இந்த எதிர் ஊன்றல் காஞ்சி என வளர்ந்தது; வஞ்சித் திணைக்கு எதிர்வினைத் திணையாக எண்ணப் பெற்றது.

வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே

என்பது பன்னிரு படலம். பன்னிருபடலம் தோன்றிய காலத்தில் வஞ்சியும் காஞ்சியும் இருவேறு போர் ஒழுக்கங்களாக வழங்கியமை

தென்திசை என்றன் வஞ்சியொடு வடதிசை
நின்றுஎதிர் ஊன்றிய நீள்பெருங் காஞ்சியும்
. . . . . . . . . . . . . . . . . . . . என்
வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும்
- (சிலம்பு, காட்சி, 135-149)

என்று சிலப்பதிகாரம் கூறுவதாலும் புலனாகும்.

தொல்காப்பியரின் காஞ்சித் துறைகளுள் மறக்கூறுகள் அமைந்த துறைகளையும், பன்னிருபடலம், சிலப்பதிகாரம் ஆகியவற்றுள் இடம் பெற்ற செய்திகளையும் கொண்டு ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலையில் காஞ்சித் திணையைப் படைத்துள்ளார். தொல்காப்பியர் நிலையாமையைக் கூறும் அறக்கூறுகள் பற்றிய துறைகளைப் பொதுவியல் படலத்துள் காட்டியுள்ளதாலும், பொதுவியல் துறையின் பேசுபொருளை அறமாகவும், காஞ்சித் துறையின் பேசுபொருளை மறமாகவும் ஐயாரிதனார் கொண்டிருக்கலாம்.

காஞ்சித் திணையில் வரும் பெருங்காஞ்சித் துறையில் அரசன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவியலில் வரும் இதே பெயர் கொண்ட துறையில் யாருடைய பெயரும் குறிப்பிடப்பட்டிருக்காது.

துறைகள்

காஞ்சி; காஞ்சி அதிர்வே, தழிஞ்சி,
பெரும்படை வழக்கொடு, பெருங்காஞ் சிய்யே,
வாள்செலவு என்றா, குடையது செலவே,
வஞ்சினக் காஞ்சி, பூக்கோள் நிலையே,
புகழ்த்தலைக் காஞ்சி, தலைமா ராயம்,
தலையொடு முடிதல், மறப்பெயர்க் காஞ்சி,
மாற்றரும் பேய்நிலை, பேய்க்காஞ் சிய்யே,
தொட்ட காஞ்சி, தொடாக்காஞ் சிய்யே,
மன்னைக் காஞ்சி, கட்காஞ் சிய்யே,
ஆஞ்சிக் காஞ்சி, மகட்பாற் காஞ்சி,
முனைகடி முன்னிருப்பு, உளப்படத் தொகைஇ
எண்ணிய வகையான் இருபத்திஇ ரண்டும்
கண்ணிய காஞ்சித் துறையென மொழிப.
(புறப்பொருள் வெண்பா மாலை-4)

காஞ்சி மறவர் மேற்கொள்ளும் செயல்கள் துறைகளாகக் கூறப்பட்டுள்ளன.

உசாத்துணை

காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 13:05:52 IST