தொட்ட காஞ்சி
தொட்ட காஞ்சி காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. விழுப்புண்ணுடன் இல்லத்தில் இருந்த மறவனது புண்ணினைப் பேய்மகள் தொடுவது பற்றிக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் இடமகன்ற வீட்டினுள் போர் மறவன் கிடந்த நிலையில் இருக்கின்றான். அவனது விழுப்புண்ணைச் சுற்றத்தார் மருந்திட்டு ஆற்ற முயன்று கொண்டுள்ளார்கள். அப்படிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்போதே, தொங்கும் முலையும் பெரிய வாயும் உடைய பேய் மகள், கிடக்கும் மறவனின் புண்ணைத் தொடுகின்றாள். அதனால் அவன் இறப்பு நிகழும். தொடும் அந்தச் செயலைப் பேசுவது தொட்ட காஞ்சி என்னும் துறை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வியன்மனைவிடலை புண்காப்பத்
துயல்முலைப்பேழ்வாய்ப் பேய்தொட்டன்று (4. 18)
வெண்பா
கொன்றுருத்த கூர்வேலவன் குறுகிக் கூரிருள்வாய்
நின்றுருத்து நோக்கி நெருப்பு உமிழாச் சென்றொருத்தி
ஒட்டார் படை இடந்த ஆறாப்புண் ஏந்து அகலம்
தொட்டாள் பெருகத் துயில் 78
பொருள்: முன்பு, பகைவர்தம்மைத் தன்வேலினால் கொன்றவன், இன்று, புண்ணேற்றுக் கிடக்கின்றான். அவனை இறக்கச் செய்ய பேய்மகள் அவனது புண்ணைத் தொட்டாள். படைக் கருவிகள் பிளந்த புண்ணை ஏந்திய மார்பை, பேய்மகள் இருளில் சென்று, குறுகி, நோக்கி, உமிழ்ந்து, மறவன் பேருறக்கத்தை (மரணத்தை)த் தழுவத் தொட்டாள் என்பதில், பேயின் செயற்பாடுகள் பலவற்றுள் உயிர்ஏகத் தொட்டமையைச் சிறக்கச் சொல்வது காணப்படுகின்றது. அது 'பேய் தொட்டன்று' என்னும் துறைப் பொருள் காட்டுவதை அறிவிக்கின்றது.
உசாத்துணை
காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:22:02 IST