under review

தலையொடு முடிதல்

From Tamil Wiki

தலையொடு முடிதல் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. போர்க்களத்தில் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்த மறவனின் உடலை அவனுடைய மனைவி, தலையை மட்டுமே கண்டு,கணவனை அடையாளம் கண்டு அவனுடன் இறப்பதைக் கூறுவது தலையொடு முடிதல்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் போரில் மாறுபடாத வலிமையை உடைய மறவன் மாய்ந்தான். அவன் மனைவி, அக்கணவனின் தலையைக் கண்டு அதனுடன் மாய்ந்ததைச் சொல்லுவது தலையொடு முடிதல் என்னும் துறை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 மண்டு அமருள் மாறா மைந்தின்
கொண்டான் தலையொடு கோல்வளை முடிந்தன்று

வெண்பா

கொலைஆனாக் கூற்றம் கொடிதே கொழுநன்
தலைஆனாள் தையலாள் கண்டே - முலையால்
முயங்கினாள் வாள்முகம் சேர்த்தினாள் ஆங்கே
உயங்கினாள் ஓங்கிற்று உயிர்.

பொருள் : மறத்தி ஒருத்தி, தன் கணவனுடைய தலையைக் களத்தில் கண்டாள். கண்டு உள்ளம் அமையாதவளாய் - அடங்காதவளாய்- அதனை மார்பால் தழுவினாள்; ஒளி பொருந்திய முகத்தைத் தன்முகத்தொடும் சேர்த்து அணைத்தாள். அப்போர்க்களத்தில் தனக்கு முன்னதாக மாய்ந்த தலைவனை எண்ணி வருந்தினாள். வருந்திய அளவில் அவளது உயிர் பிரிந்தது. அவளுடைய தலைவன் உயிரை உண்டபின்னும் அமையாது அவளது உயிரையும் பருகிய கூற்றம் கொடியதுதான்.

உசாத்துணை

காஞ்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:15:43 IST